உதவி

இந்த முறை நிச்சயம் ஏமாறக்கூடாது. இந்த நினைப்பில் உதட்டைக் கடித்துக் கொண்டு எதிரில் நின்றவனை அலட்சியப்படுத்தினேன். விட்டால் அழுதுவிடுவான் போலிருந்தான்.

"ஸார்… உங்களைத்தான்."

"சொல்லு.." என்றேன், கொஞ்சங்கூட இளகாத குரலுடன்.

"அம்மாவுக்கு ரொம்ப முடியலே ஸார். அந்த ஊசியைப் போட்டே ஆவணுமாம். என் கையில சுத்தமா பைசா இல்லே" என்று அழுதான்.

ஒரு நாள் இரவு சினிமா பார்த்துவிட்டுத் திரும்பியபோது பழக்கமான ஆட்டோ டிரைவர்தான் அவன். அடுத்த தெருவில் எங்கோ குடியிருப்பதாகச் சொன்னான்.

இத்தனை வீடுகளில் என்னை எப்படித் தேடிப் பிடித்தான். இவன் மட்டுமல்ல, எத்தனை நபர்கள்!

"சாப்பிட்டு நாலு நாளாச்சுங்க"

"பர்ஸை தொலைச்சிட்டேன். ஊருக்குப் போவணும்"

"நாலு குழந்தைங்க வேலை போயிருச்சு. ஒரு வாரமா அல்லாடறோம்."

"மாரியம்மன் கோவில்ல கஞ்சி ஊத்தறோம்."

விதவிதமாய் வேண்டுகோள்கள்! ஐந்து, பத்து, இருபது, ஐம்பது என்று எப்படியாவது பேசி மனதை உருக வைத்து பணத்தைக் கறந்து கொண்டு போய் விடுகிறார்கள்.

பிரேமா ஒரு முறை சொல்லிக் காட்டிவிட்டாள். " நான் எதுனா கேட்டா, இந்த மாச பட்ஜெட்ல எடமில்லேன்னு சொல்லிடுவீங்க. இந்த மாதிரி ஏமாத்து தர்மம் நிறைய பண்ணுவீங்க."

நேற்றைய சண்டையின் ஹைலைட்டே அதுதான். என்னை ஏமாற்றிப் போனவனை சினிமா தியேட்டர் முதல் வகுப்பு டிக்கெட்டு முன் வரிசையில் பார்த்துவிட்டு என்னையும் ஒரு பார்வை பார்த்தாள்.

தீர்மானித்துவிட்டேன். இனிமேல் சுத்தமாய் ‘இல்லை’.

ஆட்டோ டிரைவர் சட்டென்று என் கால்களில் விழுந்தான்.

"ஸார்… எப்படியாச்சும்… இரு நூறு ரூபா கொடுங்க. ப்ளீஸ்.."

உறுதியை மீறி மனசு ஆட்டம் கண்டது. "இரு.. நானும் உன்னோட வரேன்".

ஷர்ட்டை மாற்றிக் கொண்டேன். பர்ஸில் ஐந்நூறு ரூபாய் இருந்தது.

" நீங்க எதுக்கு ஸார். வீணா அலைச்சல்.." என்றான்.

"பரவாயில்லை. நானும் வரேன்." என்றேன் விடாமல்.

பஸ்ஸில்தான் போனோம். ஹாஸ்பிடல் வாசலில் இறங்கி நடந்தோம்.

"எந்த பெட்.."

லேடீஸ் வார்ட்ல.. ஸார்… பணத்தைக் கொடுத்தீங்கன்னா ஊசி வாங்கிட்டுப் போயிரலாம்…"

"மெடிகல் ஷாப்புக்கு நானும் வரேன்.."

அரை மனதாய் சம்மதித்த மாதிரி தோன்றியது. ஒரு வேளை நிஜமாகவே அவன் அம்மா சீரியசாய் கிடக்கிறாளா… அல்லது மெடிகல் ஷாப்பில் என்னெதிரில் மருந்து வாங்கிக் கொண்டு பிறகு அது வேண்டாம் என்று திருப்பிக் கொடுத்து பணத்தை ஏமாற்றி விடுவானோ…

சந்தேகப் பேய் மனதைப் பிடித்து ஆட்டி அதன் உச்சத்துக்குப் போக ஆரம்பித்தது.

சங்கடமான மன நிலையில் நடந்தபோதுதான் அந்தச் சிறுவனைப் பார்த்தேன்.

"ஏய்.. பாபு.. நீ எங்கேடா இங்கே.." எங்கள் வீட்டு வேலைக்காரி அஞ்சலையின் மகன்.

"அம்மாவுக்கு இருமல் .. மருந்து வாங்க வந்தோம்…" என்றான்.

எண்ணை காணா தலை, உடம்பில் புழுதி, போட்டிருந்த சட்டை, டிராயர்.. ஓ.. நான் கொடுத்தது. போன வாரம் பழைய துணிகளை ஒழித்தபோது .. ‘என் புள்ளைக்கு எதுனாச்சும் தாங்கம்மா..’ என்று அஞ்சலை கேட்டு வாங்கிப் போனது. பிரேமா கூட சொன்னாளே ‘அதையும் வித்துடுவா.. அவ எங்கே பையனுக்குப் போடப் போறா.. அதுக்கு பேசாம நானாவது ரெண்டு பாத்திரம் வாங்குவேன்’ என்று.

நான்தான் வற்புறுத்தி இரண்டு செட் டிராயர், ஷர்ட்டை கொடுத்து அனுப்பினேன். இதோ எதிரில் நல்ல துணி அணிந்த பெருமிதத்தில் பாபு. உள்ளூர ஏதோ உறுத்தியது.

இது வரை நான் செய்த உதவிகள் எல்லாம் என்னால் செய்ய முடிந்தவைதான். என் சக்தியை மீறி எதுவும் செய்யவில்லை. கொடுத்தபோது இருந்த சந்தோஷம்.. இம்மாதிரி நேரில் பார்க்கும் போது இன்னும் இரட்டிப்பாகிறது.

அதைவிட்டு சந்தேகத்துடன் துரத்திப் போனால் மனசு அலைபாய்ந்து உதவி கேட்டு வருகிற எல்லோருமே ஏமாற்றப் பார்க்கிறார்கள் என்ற கணிப்புக்கு விரைவது ஏன்! முடிந்தால் முடிந்ததைக் கொடுத்து சந்தோஷப்பட்ட மனதை ஏன் சின்னாபின்னப் படுத்திக் கொள்ள வேண்டும்?

அவன் தோளைத் தட்டி நிறுத்தினேன். "இந்தா.. மருந்து வாங்கிட்டு வா.."

ஹாஸ்பிடலுக்கு எதிர் திசையில் என் கால்கள் நடந்தன.

About The Author

11 Comments

  1. ஷபியுதீன்

    உங்கள் கதை அருமை. நிறைய மனிதர்கள் கஞ்சத்தனத்தின் காரணமாக மற்றவரை குழப்புகிறார்கள்.

  2. Mannai Pasanthy

    உதவி புரிபவர்களுக்கு உண்டாகும் ஆன ந்தமே அலாதி. நன்றி

  3. கீதா

    ஒரு சிலர் ஏமாற்றத்தான் செய்கிறார்கள். ஆனாலும் நம்மால் முடிந்ததைச் செய்யும்போது உண்மையாகவே அதில் பலனடைபவர்கள் இருந்தால் அந்த சந்தோஷமும் மனநிறைவும் அலாதிதான். நல்ல கதை.

  4. Dr.V.K.Kanniappan

    உதவும் மனப்பான்மை வேண்டும்.
    ஈத்துவக்கும் இன்பம் அறியார்கொல் தாமுடைமை
    வைத்திழக்கும் வன்க ணவர். என்ற திருக்குறள் என் நினைவில் வருகிறது. கொடுத்துதவ வேண்டும் என்ற எண்ணம் வந்தபின் பயன்பாடு குறித்து சந்தேகம் கொள்ளலாகாது.

  5. m.syed ibrahim

    உங்கல் மனதுக்கு இரைவன் நன்மை கொடுதுவிடுவார்

  6. gomathi

    ரிஷபன் சார் ரொம்ப நல்ல கதை நம்மை அவர்க ஏமாட்ரினால் அதன் பலனை அவர்கல் அனுபவிப்பர்கல் நாம் நம் சக்திக்கு முடிந்ததை செய்யலாம்.

Comments are closed.