வெற்றிமாறன் திரைக்கதை அமைக்க அவர் உதவியாளர் இயக்கும் திரைப்படம் "உதயம்". ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார். படம் வெளியாகி ஓடிக்கொண்டிருக்கின்ற நிலையில், பாடல்கள் எதிர்பார்ப்பை நிறைவு செய்திருக்கின்றனவா என்பதைப் பார்ப்போம்.
இன்றோடு தடைகள்
வேகமான டூயட் பாடல். ஸ்ரீனிவாஸ் – ரம்யா இணைந்து பாடியிருக்கிறார்கள். வாலியின் இளமை துள்ளும் வரிகள் பாடலைக் கவனிக்க வைக்கின்றன. தனக்கு வயது ஒரு தடை இல்லை என்பதை மீண்டும் ஒருமுறை நிரூபித்திருக்கிறார் வாலிபக் கவிஞர். முழுவதும் துடிப்பான, துள்ளலான இசை. பாடலின் நீளம் கவனிக்க விடாமல் தடுக்கிறது. ஆங்கில வரிகளும் இடையில் வருகின்றன. இடையிடையே வரும் இசைக்கோவைகள் சோதனை முயற்சி போல் தோன்றுகின்றன.
கால் தடுக்கி என் கண்கள் மயங்கி உன்
கன்னக் குழிக்குள் என்றோ விழுந்தாச்சு -வாலிப வரிகள்.
மாலை பொன்மாலை
எஸ்.பி.பி.சரண் – பெல்லா செண்டே குரல்களில் மென்மையான டூயட் "தானே தானனே" என ஜி.வி-யின் குரலுடன் பாடல் தொடங்கும்போதே தன் பக்கம் இழுக்கிறது பாடல். இது போதாதென்று சரணின் குரலும் நம்மை ரசிக்க வைக்கிறது. காதலின் ஏகாந்த நிலை சொல்லும் இந்தப் பாடலை எழுதியிருக்கிறார் லா.ராஜ்குமார். பாடல் நெடுகிலும் பின்னணியில் ஒலிக்கும் மெல்லிய டிரம்ஸின் ஒலி அருமை! .
விரல்களில் தவழும்
கோப்பையில் நிரம்பும்
விலையில்லா ஒயின் இவள்! – இனிய சந்தம்.
வா இரவாக
உயர்தட்டு டாஸ்மாக் கீதம்! அஜ்மல் கான், அமிர்த் விஸ்வனாத், ஜி.வி குரல்களில் ஒரு குடி போற்றும் பாடல். உபயம் லா.ராஜ்குமார். பெரிதாக எதுவும் இல்லை என்றாலும், ஒதுக்க மனம் வராது. ஒலிச் சேர்ப்பில் மற்றவற்றிலிருந்து வேறுபட்டு நிற்கிறது.
வெள்ளை அணுக்கள் வெள்ளை மதுவில்
குளித்து முடித்தால்தான் மோட்சம் காண்போமே! – குடி போற்றும் வரிகள்.
யாரோ இவன்
பியானோவின் இசையுடன் சைந்தவி "யாரோ இவன்" என்று பாடத் தொடங்கியதுமே நாமும் அனிச்சையாகப் பாடலோடு பயணிக்கத் தொடங்கிவிடுகிறோம். தொடக்க நிலைக் காதல்தான் பாடுபொருள். ஜி.வி, சைந்தவி இருவரது குரல்களிலும் காதல் நிரம்பி வழிகிறது. உண்மையிலேயே காதலர்கள் என்பதாலோ? இந்தப் பாடலை எழுதியிருக்கிறார் நா.முத்துக்குமார்.
உன் வாசனை வரும் வேளையில்
என் யோசனை ஏன் மாறுதோ! – எளிமையில் அருமை!
ஓரக் கண்ணால
ஜி.வி.பிரகாஷிடமிருந்து இப்படி ஒரு பாடலை யாரும் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். கானா பாலாவுடன் கைகோத்து, இறங்கி அடித்திருக்கிறார்! வேறு ஒரு பிரபல பாடலை ஆங்காங்கே நினைவுபடுத்தினாலும், ரசிக்கலாம். கானாவும் காதல் கதைதான் பாடுகிறது.
லைட்டு ஹவுஸு வெளிச்சத்த போல் காட்டுறாடா ஜாலம்
மனசுக்குள்ள புள்ளி வச்சு போடுறாடா கோலம் – கானாக் காதல்.
உதயம் – டூயட் சங்கமம்.