உண்டியலும் காளியும்

அந்த ஊரின் அத்தனை
ஆசைகளையும் நிராசைகளையும்
சந்தோஷங்களையும் துக்கங்களையும்
பாசத்தையும் பகையையும்
வன்மங்களையும் துவேஷங்களையும்
உள்வாங்கி நிற்கிறது அந்த உண்டியல்.

முழாண்டுத் தேர்வில் பாசாகி விடவோ
தொலைந்து போன கொலுசு கிடைத்து விடவோ
தினமும் தனது கோழியின் முட்டையைத் திருடும்
எதிர்வீட்டு ராணியின் கை கால் விளங்காமல் போகவோ
நல்ல கணவன் அமையவோ
மும்மாரி பெய்து காடும் நாடும் செழித்திடவோ
இப்படி காரியத்திற்கும் காசிருப்புக்கும் தக்காற்போல்
அந்த உண்டியலில்
வந்து விழுகிறது சில்லறையும் நோட்டுக்களும்.

யாரும் பெயர்த்து விடாமல்
அது நன்கு பொறுத்தப் பட்டிருக்கிறது
மஞ்சள் துணி சுற்றி தொங்கவிடப்பட்டுள்ளது அதன் பூட்டு
காசிடும் துவாரத்தில் மழைநீர் புகாமல் தடுப்பு பொறுத்தப்பட்டுள்ளது

அதே சமயம்…
ஆக்ரோஷமாய் நிற்கும் காளியின் கையில் வாளுக்கு பதில்
சிமெண்ட் காரையே எஞ்சி நிற்கிறது
அவள் உடுத்தியுள்ள கருப்பு சாம்பலாய் வெளுத்து நிற்கிறது
அத்தனை ஆக்ரோஷமான அவளது முகத்தைக் கண்டு பயப்படாமல்
காகங்கள் அவள் தலையில் எச்சமிட்டுச் செல்கின்றன.

ஆறு மாதத்திற்கு ஒருமுறை ஒருவன் வருவான்
உண்டியலை காலிசெய்து மூட்டை கட்டிச் செல்வான்
மக்களின் அத்தனை எதிர்பார்ப்புகளையும் சேர்த்து.
மீண்டும் அவனே அதில் ஒரு நாணயம் போடுவான்
மேலும் அது நிரம்ப வேண்டும் என வேண்டிக் கொள்வான்
காளி மட்டும் எப்போதும் போல் எஞ்சி நிற்பாள்
எதையோ வெறித்தபடியோ சிரித்தபடியோ.

*****

About The Author