பாலைவனத்தில் பயணிக்கும்
எனக்கு
உன் நினைவு ஒரு
நீர்த்தேக்கம்!
அதனால்தான்
சகாராவிலும் என் கவிப்பயிர்
கருகாமல் தளிர்க்கிறது.
அது எப்படி?
எழுதாத எழுத்தாய்
இருந்த என்னை
இசை பாடும் வீணையாய்
மாற்றினாய் நீ?
ஓ!
கயல் விழிகள்
முயல்களுக்கும் நீந்தக் கற்பிக்குமோ?
எம் இதய ராகத்தை
தரம் பார்த்து, சுரம் பிரித்து
என்னையே
ரசிக்க வைத்தாய் நீ!
விழிகளுக்கும் மொழிகள் உண்டுதான்!
இல்லையேல்
உன் விழிகள் பண்ணிசைப்பது
எப்படி?
அன்பே –
என் ஒவ்வொரு விடியலும்
நம் உறவிற்கு
ஒரு புதிய விடியலைக்
கொண்டு வருகிறது!
என் கவிதைச் சோலையில்
உன் நினைவுத் தோரணம் கட்டி
நம் உறவு கீதம்தான்
இசைக்கிறேன்!
நம் இதயங்கள்
கலந்துறவாடும்போது
யாரது —
இடையில் புகுந்து
இடையூறு செய்வது?
ஓ! சமுதாயமா?
போகட்டும்
அதை மன்னித்துவிடு!
இந்த சமுதாயத்திற்குத்
தெரிய வாய்ப்பு இல்லை
நம் உறவுப்பாலம்
தகர்க்கப்பட முடியாதது என்று!
மிக அருமையன கவிதை என் கல்லூரி காலத்தை நினைவுக்கு கொன்ன்டு வந்தது