தன்னுடைய வாழ்க்கையின் இறுதிக் கட்டத்தில், ஆஸ்பத்திரியில் கிடந்த சித்தப்பாவுக்கு, உடம்பில் எங்கெங்கே துளைகள் இருக்கின்றனவோ அங்கெல்லாம் குழாய்களைச் சொருகியிருந்தார்கள். சில குழாய்கள் இன்லெட், சில அவுட்லெட்.
இறுதி விநாடி நெருங்கிவிட்டது. இனியும் இந்த உடலை ஆஸ்பத்திரியில் படுக்கப் போட்டுக்கொண்டு, ஃபீஸ் கறந்து கொண்டிருப்பது தர்மமில்லை என்று டாக்டர்கள் உணர்ந்தபோது, அந்த உடலை இந்த உலகத்தோடு இணைத்திருந்த, உயிரைப் பிடித்து வைத்திருந்த ட்யூப்களெல்லாம் பிடுங்கியெறியப்பட்டன. சித்தப்பா சாக விடப்பட்டார்!
ஆஸ்பத்திரியிலிருந்து ஆம்புலன்ஸில் ஏற்றப்பட்டு, முக்கால் மணி நேரப் பிரயாணத்துக்குப் பிறகு கலாசிப்பாளையத்திலிருந்த வீட்டில் கொண்டுவந்து கூடத்தில் கிடத்தப்பட்டு ரெண்டு மணி நேரமாகியும் சித்தப்பா சாகாமல் பிடிவாதத்திலிருந்ததால், தொண்டைக் குழியில் துடித்துக் கொண்டிருந்த உயிர், விடுதலையடைந்து விடத் திமிறிக் கொண்டிருந்த கடைசி நிமிடத்தில், உடலைச் சுற்றியிருந்த சுற்றத்தார் எல்லாரும், அநேகமாக அந்த உடலின் மேலேயே கவிழ்ந்தபடி, ‘லா இலாஹா இல்லல்லாஹ், லா இலாஹா இல்லல்லாஹ்’ என்று கோரஸாய்க் குரல் கொடுத்து, உயிரை விரட்டிக் கொண்டிருந்தார்கள். மரணத்தைத் துரிதப்படுத்திக் கொண்டிருந்தார்கள்!
கடைசியில் ஒரு வழியாய் எல்லாருமாய்ச் சேர்ந்து உடம்பிலிருந்து உயிரைப் பிதுக்கி வெளியேற்றியே விட்டார்கள். சித்தப்பாவுக்கு ஒரு வழியாய் விடுதலை கிடைத்தது.
நிரந்தர விடுதலை.
சக்ராத் மிக மிகக் கொடூரமானது. அந்த இறுதி நேர இழுபறியினாலேயே மரணத்துக்கு ஒரு பயங்கரப் பரிமாணம் கிடைக்கிறது.
மரணத்தை நினைத்தால்
பயமாயிருக்கிறது
வாழ்க்கையை நினைத்தால்
இன்னும் பயமாயிருக்கிறது
இருபத்தொண்ணாம் நூற்றாண்டில் வாழ்க்கை பயமயமாய்த்தான் ஆகிப் போனது.
ஜனப் பெருக்கம், வாகன நெரிசல், விலைவாசி ஏற்றம், றெக்கை கட்டிப் பறக்கிற ரியல் எஸ்டேட், அரசியல்வாதிகளின் அராஜகம், அடியாட்களின் அடாவடி.
கைவசம் கோடிகளை வைத்திருக்க வேண்டும், அல்லது கேடிகளை வைத்திருக்க வேண்டும். ரெண்டும் இல்லையென்றால் வசதியாய் வாழ முடியாது என்கிற நிலை. இவற்றோடு, எந்நேரமும் நிகழலாம் என்கிற மரண பயம்.
மரண பயம் என்பது மனிதனுக்கு அத்தியாவசியமானது. கொஞ்சமாவது நேர்மையாய், நாணயமாய் வாழவேண்டுமென்கிற உந்துதலை சில மனிதர்களிடமாவது ஏற்படுத்துவது இந்த மரண பயம்தான்.
சில மனிதர்களுக்கு மரண பயம் பழகிப்போய் விடுகிறது. எனக்குப் பழகிப் போனதைப் போல. சக்ராத்தை நினைத்துதான் கொஞ்சம் கலவரம் கொள்கிறேன். அந்தக் கலவர நிலையைக் கடந்து விடுதலையடைந்து விட்டால், பிறகு மோன நிலைதான்.
உலக வாழ்க்கையிலே பஞ்சமா பாதகம் எதுவும் புரியவில்லை. எவர் குடியையும் கெடுக்கவில்லை, நம்பிக்கைத் துரோகம் செய்யவில்லை, கள்ளக் கையெழுத்துப் போடவில்லை, புறம் பேசித் திரியவில்லை. நல்லவனாய்த்தான் வாழ்ந்திருக்கிறேன். ஆகையால் சொர்க்கத்துக்குப் போக வாய்ப்புகள் நிறைய.
சொர்க்கத்துக்குப் போனால் அல்லாவைப் பார்க்கலாம்.
அம்மாவைப் பார்க்கலாம், வாப்பாவைப் பார்க்கலாம்.
மதர் தெரசாவைப் பார்க்கலாம்.
மஹாத்மா காந்தியைப் பார்க்கலாம்.
மஹாத்மா காந்தி என்றதும் சின்ன வயசுச் சம்பவம் ஒன்று நினைவுக்கு வருகிறது. பரமக்குடி செட்டியார் ஸ்கூலில் படித்துக் கொண்டிருந்த பள்ளிப் பிராயம்.
மசூதிக்குத் தொழுகைக்குப் போகிற வாப்பாவுக்குப் பரிச்சயமாய்ப் போன மௌலானா ஒருவர் அடிக்கடி வீட்டுக்கு வருவார்.
மௌலானாவுக்கும் வாப்பாவுக்குமிடையே இஸ்லாமிய விவாதங்கள் நடக்கும். கதவு மறைவிலிருந்து அவதானித்துக் கொண்டிருப்பார்கள் அம்மா. அம்மா என்றால் சும்மா அடுப்பாங்கரை அம்மா அல்ல. அந்தக் காலத்திலேயே அம்மா பி.ஏ.
பாளையங்கோட்டை சாரா டக்கர் காலேஜின் முதல் முஸ்லிம் மாணவி என்கிற சிறப்பு அம்மாவுக்கு உண்டு.
மௌலானாவோடு வாப்பா விவாதத்திலிருந்தபோது, சொர்க்கம் நரகம் பற்றிய சர்ச்சை வந்தது.
உயிர் போகிற இறுதி நிலையில்,’லா இலாஹா இல்லல்லாஹ்’ என்கிற கலிமாவை உச்சரித்துவிட்டு மரணித்தால்தான் ‘மோட்சம்’ என்றார் மௌலானா.
இஸ்லாமானவர்களுக்குக் கலிமா சொல்லித் தரப்பட்டிருக்கிறது. கலிமா தெரியாத, முஸ்லிமல்லாதவர்களுக்கு எப்படி என்று வாப்பா கேட்டதற்கு மௌலானா அதே பதிலைத்தான் சொன்னார்.
யாராயிருந்தாலும், கலிமா சொல்லிவிட்டு செத்தால்தான் சொர்க்கமாம்.
முஸ்லிமல்லாதவர்கள் எவ்வளவு உத்தமர்களாயிருந்தாலும், கலிமா சொல்லவில்லையென்கிற ஒரே காரணத்துக்காக அவர்களுக்கு மோட்சம் மறுக்கப்படுவது அநீதி இல்லையா என்கிற வாப்பாவுடைய நியாயமான கேள்விக்கு, மௌலானாவின் பிடிவாதமான பதில்தான் விடையாய் வந்தது.
"முஸ்லிமல்லாதவன் எவ்வளவு யோக்கியனாய் இருந்தாலும் சரி, கலிமா சொல்லா விட்டால் நரகம்தான்."
இந்த நேரத்தில்தான் அம்மா அப்பட்டமாய் ஒரு கேள்வியை மௌலானா முன் வைத்தார்கள்.
"மஹாத்மா காந்திக்கு சொர்க்கமா நரகமா?"
"சாகும் போது காந்தி கலிமா சொல்லவில்லையே" என்றார் மௌலானா.
"சொன்னார்" என்று உறுதியாய் ஒலித்தது அம்மாவின் குரல்.
"லா இலாஹா இல்லல்லாஹ் என்று காந்தி சொன்னாரா?"
"இல்லை, ‘ஹே ராம்’ என்று சொன்னார்."
"அது கலிமா இல்லை."
"அவருக்குக் கற்பிக்கப்பட்ட கலிமா அதுதான். இங்கே இஸ்லாமானவர்கள் எத்தனை பேருக்கு இறுதி நேரத்தில் கலிமா சொல்ல நாக்கு வருகிறது? ஆனால், மஹாத்மா காந்திக்கு நாக்கு வந்தது. அவருக்குக் கற்பிக்கப்பட்ட கலிமாவை உச்சரித்து விட்டு உயிர்விடுவதற்கு அவருக்கு ஆண்டவன் அருள் புரிந்தான்."
அம்மாவுடைய ஆணித்தரமான வாதத்தோடு மௌலானா உடன்படவில்லை. அம்மாவின் பொறுமை கரை கடக்கப் பார்த்தது. குரல் உயர்ந்திருந்தது.
"ஒரே வார்த்தைல சொல்லுங்க மௌலானா, மஹாத்மா காந்திக்கு சொர்க்கமா நரகமா?"
மௌலானா ஒரே வார்த்தையில் சொன்னார். "நரகம்."
அடுத்த விநாடி கதவு மறைவிலிருந்து புயல் போல வெளிப்பட்டார்கள் அம்மா. "இந்த மனுஷன் முன்னால் கோஷாவாவது பர்தாவாவது!" அம்மாவின் குரல் உச்சத்தில் அதிர்ந்தது.
(அடுத்த இதழில் முடியும்)
“