குழந்தைக்கு உடம்பு சரியில்லை.
காய்ச்சல்.
அஞ்சு நாளாய்க் காய்ச்சல்.
விட்டு விட்டுக் காய்ச்சல்.
அக்கம் பக்கத்தில் டாக்டர் யாரும் இருப்பதாய்த் தெரியவில்லை.
திண்டுக்கல் ரோடுக்குத்தான் குழந்தையைத் தூக்கிக் கொண்டு போக வேண்டு மென்றான்.
ஆனால் அவனுக்கு நேரமில்லை.
‘இப்படியே அஞ்சு நாள் ஆயிருச்சு பார், சாயங்காலமா நீயே ஒரு ஆட்டோ புடிச்சிட்டுப் போய்ட்டு வந்துரேம்மா. புள்ள கஷ்டப்படறான் பார்’ என்றான் அவன்.
‘புள்ள மட்டுமா கஷ்டப்படறான்? நானுந்தான்’ என்றாள் அவள்.
"மெட்ராஸ்ன்னா எந்த மூலையாயிருந்தாலும் நா தனியாப் போய்ட்டு வந்துருவேங்க. இங்க மதுரக்கி வந்து ஒரு மாசமாச்சு. ஒரு மாசமா நா வீட்டுக்குள்ளயே தான் அடஞ்சு கெடக்கிறேன். நீங்க எங்கயாவது வெளிய கூட்டிக்கிட்டுப் போனீங்களா? இப்ப திடீர்னு திண்டுக்கல் ரோடுக்குப் போடீன்னா எப்படிப் போறதாம்?"
"ஒன்ன நா போடீன்னா சொன்னேன்? அநாவசியமாத் தீரப்பழிய எம்மேல சொமத்தற பார். நீ தான் பாக்கறயில்ல, காலைல எட்டு மணிக்கி டெய்லி நீ கட்டிக்குடுக்கற உப்புமாவத் தூக்கிக்கிட்டு…."
"உப்புமா இல்ல, ரவாக்கேசரி."
"ஏதோ ஒண்ணு. போனா, ராத்திரி வீட்டுக்கு வர ஒம்போது ஆயிருது."
"புரியுது. எனக்கு சமையல் தெரியலன்னு குத்திக் காட்றிங்க. என்னங்க செய்யறது, நா எங்க வீட்ல செல்லமா வளந்த பொண்ணு. நீங்க எங்கண்ணுல படுவீங்கன்னு கண்டேனா, என்ன லவ் பண்வீங்கன்னு கண்டேனா, கட்ன பொடவையோட வீட்ட விட்டு வெளிய வான்னு நீங்க கூப்புடுவீங்கன்னு கண்டேனா!"
"கட்ன பொடவையோட வான்னா நீ தான் ஒரு ஜம்போ ஸூட்கேஸையேத் தூக்கிட்டு வந்துட்டியே!"
"எல்லாப் பொடவையுமே நா கட்ன பொடவை தானேங்க! கையப்புடிச்சிக் கோயமுத்தூருக்குக் கூட்டிக்கிட்டுப் போனீங்க. அந்த ஊர் பழகறதுக்குள்ள மதுரக்கி வந்தாச்சு."
"என்னம்மா செய்யச் சொல்ற, என்னோட வேல அப்படி. இந்தக் கம்ப்பெனி அப்படி. வருஷத்துக்கொரு ட்ரான்ஸ்ஃபர். ஒரு ஸண்டே கூட ரெஸ்ட் கெடையாது."
"தெரியுதில்ல, அதுக்குள்ள அப்பா ஆகறதுக்கு என்ன அவசரம் ஒங்களுக்கு? ஒரு ரெண்டு வருஷம் ஃப்ரீயா இருந்துட்டு அப்பறமா கொழந்த பெத்துக்கிட்டிருக்கலாம்ல?"
"அடிப்பாவி, தாய்க்குலத்தையே களங்கம் பண்றியே. தாய்மையில தான் பெண்மை பூரணத்வம் பெறுதுன்னு ஒவ்வொரு பொண்ணும் அம்மாவாக அவசரப்படுவாளாம். நீ என்னடான்னா…."
"அந்த அவசரமெல்லாம் எனக்கில்ல. ப்ராக்டிக்கலாகவும் கொஞ்சம் யோசிக்ணுங்க. இப்பப் பாருங்க, ஒங்களுக்குக் கஷ்டம். எனக்குக் கஷ்டம், பாவம், இவனுக்கும் கஷ்டம்."
"சரி, இப்ப இவன என்ன செய்யணுங்கற?"
"என்ன செய்யணுங்கறவா? நா பெத்த புள்ளயாச்சே, என் செல்லமாச்சே, அந்த திண்டுக்கல் ரோடு க்ளினிக் அட்ரஸ் குடுங்க, நீங்க ஆஃபீஸ்லயிருந்து ஃபோன் பண்ணி, சாயங்காலம் ஆறு மணிக்கி அப்பாய்ன்ட்மென்ட் ஃபிக்ஸ் பண்ணிருங்க. நா ஆட்டோ புடிச்சிப் போய்ட்டு வர்றேன். நீங்க பத்தரமா ஒம்போது மணிக்கி வீடு வந்து சேருங்க. ஆமா, இந்த மதுரயில குதிர வண்டியெல்லாம் இப்ப கெடையாதாமா?"
"குதிரயெல்லாம் கொள்ளு திங்கப் போயிருச்சாம். நீ ஆட்டோலயே போ."
ஆட்டோ பிடித்துக் கொண்டு ஆறு மணிக்கு திண்டுக்கல் ரோடு க்ளினிக்குக்கு வந்து சேர்ந்தாள்.
குழந்தைக்கு வயசென்ன என்று கேட்ட நர்ஸிடம் ‘ஒண்ற வயசு’ என்றாள்.
அடுத்து, நர்ஸ் குழந்தையின் பெயரைக் கேட்டாள்.
இவள், பெயரைச் சொல்ல, நர்ஸ் ஆச்சர்யப்பட்டாள்.
"முஸ்லிம் பேராயிருக்கு?"
"ஆமா. முஸ்லிம் பேர்தான்."
"நீங்க பொட்டு வச்சிருக்கீங்க?"
"வச்சா என்ன?"
"இல்ல, முஸ்லிம்ஸ் பொட்டு வக்ய மாட்டாங்க…."
"ஆமா, வக்ய மாட்டாங்க."
"அப்ப, நீங்க முஸ்லிம் இல்லியா?"
"இல்ல."
இவளுக்கு எரிச்சலாயிருந்தது. எதுக்கு இந்த அநாவசியக் குறுக்குக் கேள்விகள்?
பொட்டு வைத்த முகமோ, கட்டி வைத்த குழலோ என்று அவன் இவளைக் கட்டிக் கொண்டு பாடின முதலிரவை யெல்லாம் இந்த நர்ஸிடம் சொல்லிக் கொண்டிருக்கவா முடியும் என்று இவள் கோபமடையப் பார்த்தபோது, ‘ஒங்களுக்கு எதுக்கு ஸிஸ்டர் இந்த வெட்டிக் கேள்வியெல்லாம். பேசாம வேலயப் பாருங்க’ என்று லேடி டாக்டரின் குரல், நர்ஸை அப்புறப்படுத்தியது.
குழந்தையைப் பரிசோதித்த லேடி டாக்டர், ‘யூரின் கலெக்ட் பண்ணிக் குடுங்க, டெஸ்ட் பண்ணிப் பார்க்கணும்’ என்றாள்.
‘பாத்ரூம் எங்கயிருக்கு’ என்று நர்ஸிடம் இவள் கேட்டதற்கு, ‘பாத்ரூம் பெரிய டாக்டர் ரூம்ல இருக்கும்மா’ என்று பதில் வந்தது.
"கொழந்தக்கி யூரின் கலெக்ட் பண்ணத்தானே? வெளிய போய், அப்படியே ரோடோரமா செய்யுங்க."
"ஐயே, வெளியவா, போற வர்றவங்கல்லாம் பாக்கற மாதிரியா!"
"ஒங்கக் கொழந்த தானேம்மா?"
"ஆமா, அதுக்கு, ரோட்ல வச்சா இதெல்லாம் செய்ய முடியும்?"
"நா வேணா செய்யட்டுமா?"
"வேணாம், வேணாம், நானே செய்யறேன்."
குழந்தையின் நிக்கரைக் கழட்டி, உள்ளேயிருந்த பாம்ப்பரைக் கழட்டி, முக்கால் நிர்வாணமாய்க் குழந்தையையும் பாட்டிலையும் தூக்கிக் கொண்டு வெளியே போனாள்.
ஆள் நடமாட்டம் குறையக் காத்திருந்தாள்.
நடமாட்டம் குறையக் காணோம்.
‘என்ன மேடம், இன்னும் முடியலியா?’ என்று வாசலில் நின்று குரல் கொடுத்த நர்ஸிடம், ‘இந்தா ஆயிருச்சு நர்ஸ்’ என்றவள், துணிந்தவளுக்கு வீதியே வெஸ்ட்டன் டாய்லட் என்று பாட்டிலின் முகப்பைக் குழந்தையின் அடிவாரத்தில் ஏந்தி, ‘ஷ்ஷ்ஷ்’ என்றாள்.
(தொடரும்)