ரேவதிக்கு இவை யாவும் புரியாதவை அல்ல. அவள் மனம் துன்பப்படும் ஒவ்வொரு முறையும், அவளைத் தேற்ற, ரவி இதுபோன்றதொரு நீண்ட சொற்பொழிவாற்றக் கேட்டிருக்கிறாள்.அந்த சமயங்களில் மனம் ஆறுதலடைவது போல் தோன்றினாலும், அடுத்தமுறை அருண் அவள் கைகளை விலக்கிக் கொண்டு ஓடும்போது, எல்லாம் மறந்து போய் விடுகின்றன.மீண்டும் சுய பச்சாதாபம் தலைதூக்க, அழுகை வெடித்துவிடுகிறது. என்ன செய்வது?
”ரேவதி…..! ரேவதி….!”
குரல் கேட்டு வாசலுக்கு விரைந்தாள் ரேவதி. அங்கு மாடி வீட்டம்மா கையில் சிறு கிண்ணத்துடன் நின்றிருந்தார்.
”வாங்கம்மா, உள்ளே வாங்க!” ரேவதி வலியதொரு புன்னகையை வரவழைத்தவளாய், அவரை வரவேற்றாள்.
”என்னம்மா, சோர்ந்துபோய் இருக்கிறாய்? உடல்நிலை சரியில்லையா?” என்றார் அவர் வாஞ்சையுடன்.
”ம்….! லேசானத் தலைவலி…..! ஒரு மாத்திரை முழுங்கினால் சரியாகிவிடும்!” என்று பொய் ஒன்றைச் சடுதியில் புகுத்தினாள்.
”சரியம்மா, நீ ஓய்வெடுத்துக்கொள்! நாங்கள் அருணைப் பார்த்துக் கொள்கிறோம்!” என்று கூறித் திரும்பியவர், ”மறந்துவிட்டேன், பார்! அருண் இன்று கேசரி வேண்டுமென்று வம்பு செய்து, என்னை அங்கிங்கு நகரவிடவில்லை. செய்துகொடுத்த பின்புதான் ஓய்ந்தான். இதோ! இதில் உனக்கும் ரவிக்கும் இருக்கிறது. அருண் எங்கள் வீட்டில் சாப்பிட்டுக் கொண்டிருக்கிறான். அவனைப் பற்றிக் கவலைப்படாமல் நீ ஓய்வெடு அம்மா!” என்று மீண்டும் வலியுறுத்தியவர், மாடிக்குச் சென்றுவிட்டார்.
‘இந்த அருண் ஏன் இப்படிச் செய்கிறான்? ஆசையோடு என்னிடம் வந்து, கேசரி செய்து தரச் சொல்லிக் கேட்டால், நான் செய்து தர மாட்டேனா? எல்லா வேலைகளையும் பின்னுக்குத் தள்ளிவிட்டு, அவன் விருப்பத்தைத்தானே முதலில் நிறைவேற்றுவேன்! என்னிடம் இல்லாத உரிமையா? போயும் போயும் யாரோ ஒருவரிடம்கேட்டு…..’
இதற்குமேல் அவளால் யோசிக்க இயலவில்லை. கழிவிரக்கம் மெல்லத் தலைதூக்குமுன், அதன் தலையில் ஓங்கித் தட்டுவதுபோல் ரவியின் குரல் ஒலித்தது.
”என்ன, அடுத்த கவலையா? இந்தக் கேசரியை நான் செய்து தர மாட்டேனா…… என்று!”
”அதெல்லாம் ஒன்றும் இல்லை, ரவி! அந்தம்மாவுக்கு சர்க்கரை வியாதி இருப்பதாக முன்பு கூறியிருந்தார். அருணுக்காக இனிப்பு செய்யப்போய் அவரும் சுவைத்துவிட்டால் என்னாவது என்றுதான் யோசித்துக்கொண்டிருந்தேன்!”
ரேவதியின் சமாளிப்பைப் பார்த்து ரவிக்கு சிரிப்பு வந்தது. ”அட! என் மனைவிக்கு மற்றவர்களைப் பற்றிக் கவலைப்படவும் நேரமிருக்கிறதே!” என்று கூறியவன், ரேவதியின் முறைப்பையும் பொருட்படுத்தாமல் ஓஹோவென்று சிரித்தான்.
மறுநாள் அருண் பள்ளிக்குச் சென்றபின், கிண்ணத்தைத் திருப்பிக் கொடுக்கும் பொருட்டு மாடிக்குச் சென்றாள் ரேவதி. அந்த அம்மாவும், அவர் கணவரும் முகம் கொள்ளாப் புன்னகையுடன் அவளை வரவேற்றனர். மும்பையிலிருந்து, தங்கள் மகள் குடும்பம் நான்கைந்து நாட்களில் வரவிருப்பதைச் சொல்லி மகிழ்ந்தனர்.ரேவதி விபரம் கேட்டுக்கொண்டு, கிண்ணத்தையும் தான் கொண்டுசென்ற இரு செவ்வாழைப் பழங்களையும் அவர்களிடம் கொடுத்துவிட்டுத் திரும்பினாள்.
மாடி வீட்டுக்கு விருந்தினர் வந்திருக்கும் சமயம், அருணைக் கண்டித்து, அடிக்கடி மாடிக்குப் போகாமலிருக்கச் செய்யவேண்டுமென்று எண்ணிக்கொண்டாள். அவள் நினைப்பதெல்லாம் நடக்கிறதா, என்ன!
அருண் பாட்டி வீடே கதியென்று கிடந்தான். காலாண்டு விடுமுறையும் கைகோத்துக் கொள்ள, அருணைப் பிடித்துவைப்பது என்பது, நடைமுறையில் சாத்தியப்படாதச் செயலாயிற்று.
மாடிவீடு களை கட்டி விட்டது. எந்நேரமும் பேச்சுக்குரல்கள், சிரிப்பொலி, குழந்தையின் அழுகை என்று!
ரேவதியின் மனதிற்குள் சிறிய அளவில் பொறாமை எட்டிப் பார்க்கவே செய்தது. ‘தானும், ரவியும் அருணுடன் போய் இறங்கினால், தன் பெற்றோரும் இப்படி மகிழ்வார்களா….? பேரனைத் தலையில் வைத்துக்கொண்டு கூத்தாடுவார்களா…? என் மகளுக்கு இது பிடிக்கும்; என் மாப்பிள்ளைக்கு இது பிடிக்கும் என்று பார்த்து பார்த்துச் செய்வார்களா..?
ரவியின் பெற்றோர் என்ன நினைப்பார்கள்…? என்ன இருந்தாலும் இவள் நம் மருமகள்தானே என்று ஏற்றுக்கொள்வார்களா..? தங்கள் ஒரே மகன் ரவியின் ஒரே பிள்ளையை மார்மீது போட்டுத் தாலாட்டுவார்களா…? அவனுக்குக் கதை சொல்லி, பால்சோறு ஊட்டுவார்களா…?’
சங்கிலித் தொடராக ஓடிய சிந்தனைகளை சட்டென்று அறுத்தாள். ‘ச்சே! என்ன ஒரு வேண்டாத நினைவு! இத்தனை வருடங்களாய் இல்லாமல் இன்று ஏனிந்த ஏக்கம்?’ என்று தன்னையே நொந்தவளாக சிந்தனையைத் திருப்பினாள்.
ரேவதி, துவைத்தத் துணிகளை வாளியில் அள்ளிக்கொண்டு, மொட்டைமாடிக்குப் போகப் படியேறினாள். பாதிப்படிகள் ஏறிக்கொண்டிருக்கும்போது, மாடி வீட்டில் தாயும், மகளும் பேசுவது தெளிவாகக் கேட்டது.
”ஆனாலும், நீங்களும், அப்பாவும் அந்தப் பையனுக்கு இவ்வளவு செல்லம் கொடுக்கக்கூடாது!”
”என்ன செய்வது? பழகிவிட்டான்!”
”அதற்காக, இப்படியா! பாபுவை உங்களிடம் நெருங்கவே விடமாட்டேன் என்கிறானே! உரிமைப் போராட்டம் அல்லவா நடத்துகிறான்! நீங்கள் அவனை வைக்க வேண்டிய இடத்தில் வைக்கத் தவறிவிட்டீர்கள், அம்மா!”
”நான் என்னடி செய்வேன்? நீயோ வருடத்திற்கு ஒருமுறை, ஒருவாரம் மட்டும் வந்து, தலையைக் காட்டிச் செல்கிறாய்! பாபு என் கண்ணுக்குள்ளேயே இருக்கிறானடி! ‘அவலை நினைத்து உரலை இடிப்பது போல்’ நான் நம் பாபுவை நினைத்து, இவனைக் கொஞ்சிக் கொண்டிருக்கிறேன்.”
சரக்கென்று ஓர் கூர்வாள் தலைக்குமேல் பறந்ததுபோல் உணர்ந்து அதிர்ந்தாள் ரேவதி. இதுதானா உண்மை? எல்லாம் வெளிவேடம்தானா?
நிலைதடுமாறியவள், கைப்பிடிச் சுவரைப் பிடித்தபடி சற்று நேரம் உறைந்து நின்றாள். மனம் எதையெதையோ கணக்குப் போட்டது.
‘இல்லை! எதுவும் வேடமில்லை! ஒன்றையொன்று சார்ந்து வாழும் சார்புண்ணிகள் போன்று, அருணும், அந்தத் தம்பதியரும் தாங்கள் தேடும் பாசத்தை ஒருவர் மற்றவரிடம் பெற்று இன்புறுகின்றனர். உறவுகளை இரவல் பெற்று வாழும் பரிதாபகர வாழ்க்கை! இதுதான் உண்மை!’
உண்மையை உணர்ந்து மனம் ஒருநிலைப்பட்டாலும், எதிர்பாராப் பொழுதில் நிகழ்ந்துவிட்ட மனவேதனையால் உந்தித் தள்ளப்பட்டவள், அவசரமாக கீழே இறங்கி வந்தாள்.
ஒரு முடிவுக்கு வந்தவள்போல், தொலைபேசியில் எண்களை அழுத்தினாள். மறுமுனையில் ரவி வந்ததும், ”ரவி! உங்களால் ஒரு வாரம் விடுப்பு எடுக்கமுடியும் என்றால், உடனே எடுத்துக் கொண்டு, மதுரைக்குச் செல்வதற்கு நம் மூவருக்கும் பேருந்தோ, ரயிலோ எதிலாவது முன்பதிவு செய்துகொண்டு வாருங்கள்!” என்றாள்.
ரவி ஒன்றும் புரியாதவனாய், சற்றே பதற்றத்துடன், ”என்னம்மா, திடீரென்று? ஊரிலிருந்து ஏதாவது தகவல்…..?” என்று இழுத்தான்.
ரேவதி புன்னகைத்தவளாக,”அட! பயப்படாதீங்க! யாருக்கும் எதுவும் இல்லை! எனக்குதான் என் அப்பா, அம்மாவையும், என் மாமனார், மாமியாரையும் பார்க்க ஆவலாய் உள்ளது. அது மட்டுமல்ல; நம் அருணுக்கு நிரந்தர தாத்தா, பாட்டி உறவுகளையும், அத்தை, சித்தி, மாமா ஆகிய உறவுகளையும் அறிமுகப்படுத்தி, அவனை மகிழ்விக்கப் போகிறேன். என் மகன் மீது உண்மையான பாசம் கொண்ட தாயென்றால், இதைத்தான் நான் முதலில் செய்திருக்க வேண்டும். இப்போதும் காலம் தாழ்ந்துவிடவில்லை. அதனால்தான் இந்த முடிவுக்கு வந்தேன்!” என்று கூறக் கேட்டு, மகிழ்ச்சியின் விளிம்புக்கே சென்றவன், தன்னிலை மறந்து, நா தழுதழுக்க, ”ரொம்ப நன்றி, ரேவதிம்மா! உன்னுடைய முயற்சிக்கு, நான் எப்பொழுதும் உறுதுணையாக இருப்பேன்!” என்று உறுதியளித்தான்.
“
ணிcஎ ச்டொர்ய்