"அருண்…. அருண்……கொஞ்சம் நில்லப்பா! இந்தப் பாலைக் குடித்துவிட்டுப் போகக்கூடாதா……? என் தங்கமில்லே….!"
ரேவதியின் கெஞ்சலும், கொஞ்சலும் காற்றோடு கலந்து கரைந்து போயின. அருண் அவளைச் சிறிதும் பொருட்படுத்தவில்லை. திரும்பிக் கூடப் பார்க்காமல் மாடிக்கு ஓடிவிட்டான்.
ரேவதி மனதளவில் மிகவும் உடைந்து போனாள். எப்படியெல்லாம் அவன் மீது அன்பைப் பொழிகிறாள்! அவனுக்காகவே தன் வேலையைத் துறந்தாள். சாதாரண வேலையா அது? ரவிக்கு இணையான பதவியும், வருமானமும்! தன் பாசத்தை இதைவிட மேலாக எப்படிக் காண்பிப்பது?
"நம் குழந்தைக்கு நம்மை விட்டால் யாருமில்லை! நானும் வேலைக்குச் சென்றால், முழுமையான தாயன்பு கிடைக்காமல் பரிதாபத்திற்கு உரியவனாகி விடுவான். எனவே நான் வேலையை விடப் போகிறேன்." என்று ஒரே நாளில் துணிந்து முடிவெடுத்து, அலுவலகப் பணியை அசாதாரணமாக உதறினாளே! எல்லாம் வீண்தானா?
ஆற்றாமையால் மனம் விம்மியது. தன்னுடைய உலகமே அருண்தான் என்று அவளைச் சுற்றி ஒரு சிறிய வட்டத்தை வரைந்து கொண்டு, அதற்குள் அவளும், அருணும் மட்டும் கூடிக்கொஞ்சி, எத்தனை காலம் உறவாடியிருப்பார்கள்! ரவியைக் கூட அந்த வட்டத்திற்குள் அவ்வளவு எளிதில் அவள் அனுமதித்ததில்லையே!
‘குழந்தை…குழந்தை…’ என்று எல்லாவற்றிலும் அருணுக்குதான் முதலிடம்….முன்னுரிமை….யாவும்! இப்போதோ……அருண் அவன் அம்மாவின் கைகளை விலக்கிக்கொண்டு ஓடத் துவங்கிவிட்டான், அவளை விட்டும், அவள் வரைந்த அன்பு வட்டத்தை விட்டும்!
வயது மூன்றாகி விட்டதல்லவா! பள்ளியில் சேர்த்துவிட்டனர். ரேவதிக்கு அருண் வீட்டில் இல்லாத ஒவ்வொரு மணி நேரமும் ஒரு யுகமாய்க் கழிந்தது. எப்போதடா பள்ளி நேரம் முடியும் என்று காத்திருந்து, அருண் வகுப்பு விட்டு வெளியில் வந்தவுடனே, அவனை வாரியணைத்து, முத்தமிட்டு, அள்ளிக் கொள்வாள். அவனோ திமிறிக் கொண்டுப் புறப்படும் காளைக்கன்று போல அவளிடமிருந்து விடுபட்டு நண்பர்களைத் தேடி ஓடுவான். ஒவ்வொருவரிடமும் அவன் விடைபெற்றுக் கொண்டு வீட்டுக்கு வரத் தயாராகும்போது, பள்ளி வளாகமே சந்தடியற்று ஓய்ந்திருக்கும். ரேவதியும் உற்சாகம் வடிந்தவளாய், மனம் வாடி வீடு திரும்புவாள்.
அருணின் உலகம் இப்போது விரிந்துவிட்டது. அவனுக்கென்று ஒரு பள்ளி வாழ்க்கை, ஆசிரியர்கள், புதிய நண்பர்கள், நண்பர்கள் மூலம் அறிமுகமாகும் புதிய, புதிய தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் என்று அவனுடைய வட்டம் விரிந்துகொண்டே போகிறது. அந்த வட்டத்திற்குள் ரேவதி இல்லாமல் இல்லை. இருந்தும் என்ன பயன்? அவளோடு பேச, அரை நாழிகை உண்டா அவனுக்கு? அவனைத் தன் மடியில் இருத்தி, ஆசையோடு கொஞ்சி, எத்தனை நாட்களாகி விட்டன? ஆவல் பொங்க அழைத்தால், அருகில் வந்தால்தானே! ஏதேதோ சாக்குப்போக்கு சொல்லி, அவளை விட்டு ஓடுவதிலேயே குறியாக இருக்கிறானே!
போதாக்குறைக்கு, கடந்த ஆறு மாதங்களுக்கு முன், மாடிக்குக் குடிவந்த தம்பதியரின் அறிமுகம் வேறு! அவர்களது ஒரே மகள் திருமணமாகி, மும்பையில் வசிக்கிறாளாம்; அவர்களுக்கு அருண் வயதில் ஒரு பேரன் இருக்கிறானாம்; வருடத்திற்கு ஒருமுறை, ஒரு வாரம் மட்டும் வந்திருந்து, பேரனைக் காட்டிவிட்டுச் செல்கிறார்கள் என்று அந்தம்மாவுக்கும், அவர் கணவருக்கும் மிகுந்த மனக்குறை. எல்லாக் கவலைகளும் அருணைப் பார்த்தபிறகு போன இடம் தெரியவில்லை என்று மாடி வீட்டம்மா மிகவும் பெருமையாகச் சொல்லிக் கொள்வார்.
அருணும், ‘பாட்டி, தாத்தா’ என்று எப்பொழுதும் அவர்களையே சுற்றிச் சுற்றி வருகிறான். பள்ளிவிட்டு வந்ததும் மாடிக்குச் சென்றுவிட்டால் அவ்வளவுதான்! ரவி வந்து அழைத்தால் கூட வரமறுத்துவிடுகிறான். ‘என்ன மாயம் செய்தார்களோ?’ என்று ரேவதி புலம்புவாள். இரவு உணவு சாப்பிடவும், தூங்கவும் அருண் கீழே வர மறுப்பதும், அவனை ரவியோ, ரேவதியோ அழ அழத் தூக்கிவருவதும் தினமும் நடக்கும் நிகழ்வுகளாயின.
இன்றும் பாலைக் குடிக்காமல் ஓடிவிட்டதை எண்ணி ஆத்திரம் ஒருபுறமும், இப்படித் தன்னிடம் பாசமற்றுப் போய்விட்டானே மகன் என்ற ஆற்றாமை மறுபுறமும் எழ, அவமானப்படுத்தப்பட்டவள் போல் குறுகி நின்றாள். கண்களிலிருந்து வழிந்த நீரைத் துடைக்கவும் தோன்றாமல், அப்படியே படிக்கட்டில் அமர்ந்து விசும்பலானாள்.
அலுவலகத்திலிருந்து திரும்பிய ரவி, ரேவதி இருந்த நிலையைக் கண்டு துணுக்குற்றான். அவள் கையிலிருந்த பால் தம்ளரை வாங்கியவன், ஆதரவாக, ” என்னாச்சு ரேவதி? ஏன் அழுது கொண்டு இருக்கிறாய்? ஏதாவது பிரச்சனையா?” என்றதும், இவ்வளவு நேரம் அடக்கி வைத்தக் கண்ணீர் ஆறாய்ப் பெருக, உடைந்து அழுதாள். அழுகையினூடே, ”அருண்…… அருண்…… பாலைக் குடிக்காமல்………. மாடிக்குப்….. போய்விட்டான். என்னைவிட….. அவனுக்கு……. அவர்கள்தான் முக்கியமா……?” என்றாள்.
ரவி பதற்றம் தணிந்தவனாக, ”என்னம்மா, இதற்காகவா இப்படி தேம்பித் தேம்பி அழுகிறாய்? நான் எதையோ நினைத்து பயந்துவிட்டேன். சரி..வா! வீட்டுக்குள் போவோம்! பசித்தால் சற்று நேரத்தில் அவனே வருவான்.” என்றவாறு அவள் தோள் பற்றி உள்ளே அழைத்துச் சென்று நாற்காலியில் அமரச் செய்தான்.
ரவிக்கு ரேவதியின் அழுகை பழகிப் போன ஒன்றுதான் என்றாலும், அவள் அழும்போது அவனால் பொறுத்துக் கொள்ள இயலவில்லை. வேற்று சாதியைச் சேர்ந்த அவனைக் காதல் திருமணம் செய்துகொண்டு அவனே கதியென்று அவனை நம்பி வந்தவள்! ஒரு குழந்தை பிறந்ததும், அவனைப் பராமரிப்பதற்காகவே தன் கனவுகளையும், சுய சந்தோஷங்களையும் இழந்தவள்! அவளை எண்ணி ரவியின் இதயத்தில் இரக்கம் ஊற்றெடுத்தது.
திருமணமான இந்த ஐந்து வருடங்களில் அவள் அழாத நாட்களைக் கணக்கிட்டு விடலாம். சின்னச் சின்ன விஷயங்களுக்கெல்லாம் மனச்சோர்வு ஏற்பட்டு, கோபம், இயலாமை, குற்ற உணர்ச்சி என்று பல கலவையான உணர்வுகளாகக் கிளைவிட்டு முடிவில் அழுகையாய் வெளிப்படும். கண்ணீரின் ஊடே அத்தனை உணர்வுகளையும் வடித்தவள் போன்று, அழுது ஓய்ந்தபின் மனபாரம் குறைந்தவளாக, பழையபடி பேசி, சுமூகமாய் வளைய வருவாள்.
முகம் கழுவி, உடை மாற்றியவன், தானே தேநீர் தயாரித்து, இரண்டு கோப்பைகளில் எடுத்துவந்து ரேவதியின் முன் அமர்ந்தான். அவளிடம் ஒன்றைப் பருகக் கொடுத்தவன், அவளை ஆசுவாசப்படுத்தும் விதமாகப் பேசத் துவங்கினான்.
”ரேவதி! நன்றாக யோசித்துப்பார்! நாம் பெற்றோரை எதிர்த்துக் கொண்டு காதல் திருமணம் செய்துகொண்டவர்கள்! பெற்றவர்களும், உடன்பிறந்தவர்களும் இருந்தும், உறவென்று சொல்லிக்கொள்ள நமக்கு இன்று ஒருவரும் இல்லை. மதுரையிலேயே இருந்தால், அவர்களை அடிக்கடி எதிர்கொள்ள நேரிடும் என்று நீதான் பிடிவாதமாக மாற்றல் வேண்டி நின்றாய்! நானும், சரி.. கொஞ்ச நாட்கள் விலகி இருந்தால், ஒருவேளை, அவர்கள் நம்மை மன்னித்து மீண்டும் ஏற்றுக்கொள்ள வழியுண்டு என்ற நம்பிக்கையில், உன் விருப்பம் போல் சென்னைக்கு மாற்றல் கோரி வந்தோம். இப்போதுகூட, மதுரைக்குச் சென்று, நம் பெற்றோரிடம் பேசி, சமாதானப்படுத்த, நான் தயார். நீதான் மறுக்கிறாய்!
அருணைப் பற்றி யோசி! இவ்வளவு நாட்களாக, நாம்தான் உலகம் என்று நம்மையே சுற்றி வந்தான். இப்போது வளர்ந்துவிட்டான். உலகம் பரந்தது என்பதைப் புரிந்துகொள்ளத் துவங்கிவிட்டான். அவனுடன் படிக்கும் மற்றப் பிள்ளைகள் தங்கள் தாத்தா, பாட்டியைப் பற்றிப் பேசும்போது, இவனால் என்ன பேசமுடியும் என்று என்றாவது சிந்தித்திருக்கிறாயா? ஒரு அத்தையில்லை; சித்தியில்லை; மாமா இல்லை; பாட்டி, தாத்தா இல்லை என்றால் அக்குழந்தையின் பிஞ்சு இதயத்தில் ஏக்கம் பீரிடாதா?
மாடி வீட்டுத் தம்பதியை நாம்தானே அவனிடம், ‘பாட்டி, தாத்தா’ என்று அறிமுகப்படுத்தினோம்! அதனால் அவர்களிடம் சற்று அதிக உரிமை எடுத்துக் கொண்டு பழகுகிறான். அதில் தவறொன்றும் இல்லையே! மற்றபடி, தாயென்னும் உயரிய பதவியில் என்றுமே நீதான் அவன் எண்ணத்தில் சிம்மாசனமிட்டு அமர்ந்திருப்பாய். கவலைப்படாதே!
அவர்கள் இங்கு குடியிருக்கப்போவது இன்னும் எத்தனை வருடங்களோ? எத்தனை மாதங்களோ? அவர்கள் இங்கிருந்து போனபின், அருண் என்ன அவர்களைத் தேடிக்கொண்டா போகப் போகிறான்? ம்….? யோசி! யோசித்துப் பார்த்தால் உனக்கே உண்மை புரியும்!” என்றபடி அவள் முகத்தை ஏறிட்டான். ரேவதி அமைதியாகத் தேநீரைப் பருகிக் கொண்டிருந்தாள். அவளுக்கு யோசிக்க அவகாசம் கொடுத்தவனாக, ரவி அங்கிருந்து அகன்றான்.
(மீதி அடுத்த இதழில்)
“