இரத்தினச் செவ்வி – எழுத்தாளர் திரு.என்.கணேசன்

  • எழுத்துத் துறையில் ஆர்வமுள்ள என்.கணேசனின் முதல் படைப்பு 1988ல், ஆனந்த விகடன் இதழில் வெளியானது.
  • இதுவரை நிறைய சிறுகதைகளும், கட்டுரைகளும், பல்வேறு வார, மாத இதழ்களில் வெளியாகியுள்ளன.
  • இணையதளம் பலவற்றிலும் இவரது சிறுகதைகள் இடம்பெற்றுள்ளன.
  • விஜயா வங்கி ஊழியரான இவரின் ‘புன்னகைத்தார் பிள்ளையார்’ என்ற சிறுகதை, 2002 ஜுன் மாதத்தில் தமிழ்ப் பத்திரிகைகளில் வெளியான சிறுகதைகளிலேயே சிறந்ததாக இலக்கிய சிந்தனை அமைப்பால் தேர்ந்தெடுக்கப்பட்டது.
  • இவை தவிர ஸ்ரீ ராமகிருஷ்ண விஜயம், நிலாச்சாரல், தினமலர் வாரமலர் போன்ற பல பத்திரிகைகள் நடத்திய போட்டிகளில் கலந்துக் கொண்டு பரிசுகளை வென்றிருக்கிறார்.
  • நிலாச்சாரலில் இவர் எழுதிய ‘மனிதரில் எத்தனை நிறங்கள்’ என்ற நாவல் மிகுந்த பரபரப்பையும், வாசகர்களின் அமோக ஆதரவையும் பெற்றது.மேலும் இவர் தற்போது எழுதி வரும் ‘அமானுஷ்யன்’ என்ற நாவல் வாராவாரம் ஆரவாரத்தை ஏற்படுத்தி வருகின்றது. அவருடைய அனைத்து படைப்புகளையும் காண இங்கே சொடுக்கவும். https://www.nilacharal.com/ocms/log/authorlist.asp?authorid=Ganesan

 பல்வேறு வாசக ரசிகர்களை தன் சுவாரசியமான எழுத்தால் கட்டிப் போட்டிருக்கும் திரு என்.கணேசன் அவர்கள், பல்வேறு பணிகளுக்கு இடையில் இரத்தினச் செவ்வி பகுதியை சிறப்பித்தமைக்கு எங்கள் நெஞ்சம் நிறைந்த நன்றி! 

1. அமானுஷ்யமான விஷயங்களில் ஆர்வம் ஏற்பட்டதெப்படி?
சிறு வயதில் இருந்தே ஆழ்மன சக்திகள் பற்றி படிக்க நேர்கையில் எல்லாம் ஏற்பட்ட சிலிர்ப்பு ஒரு ஆர்வத்தை ஏற்படுத்தி விட்டது. பின் அது குறித்த ஆராய்ச்சிகளில் அதன் நம்பகத்தன்மை உறுதிப்பட்ட போது ஆர்வம் பேரார்வமாக மாறியது.

2. தாங்கள் படைத்தவற்றில் பிடித்த பாத்திரம்?
மனிதரில் எத்தனை நிறங்களின் சிவகாமி.

3. எழுதுகிற தத்துவங்களை எப்போதும் கடைபிடிக்க முடிகிறதா?
உண்மையாகச் சொல்ல வேண்டுமென்றால் முழுமையாகக் கடைபிடிக்க முடிவதில்லை. அவ்வப்போது சறுக்கல்கள் நிகழ்கின்றன. திரும்பவும் சமாளித்து மறுபடி கடைபிடிக்க ஆரம்பிக்கிறேன் என்று வேண்டுமானால் சொல்லிக் கொள்ளலாம்.

4. உங்கள் தொடர்களிலுள்ள விறுவிறுப்பின் ரகசியம் என்ன?
அங்கங்கே விழும் மர்ம முடிச்சுகள்

5. என்ன எழுதப் பிடிக்கும் – கட்டுரை/சிறுகதை/நாவல்?
மூன்றுமே

6. வித்தியாமான விசிறி?
விகடனில் வெளியாகி இலக்கிய சிந்தனை விருது பெற்ற “புன்னகைத்தார் பிள்ளையார்” சிறுகதை படித்து விட்டு எனக்கு விகடன் மூலமாகப் பணம் அனுப்பி பின் ஏகப்பட்ட நூல்களையும் பரிசாக அனுப்பிய கோயமுத்தூர் பெரியவர் வை.கி.துறையன். இப்போதும் அடிக்கடி என் படைப்புகள் பற்றிய விமரிசனங்களும், புதிய நூல்களும் அனுப்புகிறார்.

7. உங்கள் எழுத்தின் நோக்கம் பொழுதுபோக்கு/விளம்பரம்/சமுதாயம்?
1)சமுதாயம் 2)பொழுது போக்கு 3)விளம்பரம்
இப்படி வரிசைப்படுத்தலாம்.

8. தாங்கள் அதிகம் எதில் எழுத விரும்புகிறீர்கள்- வெகுஜனப் பத்திரிக்கை அல்லது இணையப் பத்திரிக்கைகள்?
இரண்டிற்கும் அததற்கென்று சில தனிச் சிறப்புகள் உண்டு. வெகுஜனப் பத்திரிக்கைகள் உள்நாட்டில் அதிக வாசகர்களைச் சென்றடைகிறது. இணையப் பத்திரிக்கைகளோ வெளிநாட்டு வாசகர்கள் அதிகம் பேரைச் சென்றடைகிறது. இரண்டில் இருந்தும் எனக்கு நல்ல வாசகர்கள் கிடைத்திருக்கிறார்கள். எனவே இரண்டிலுமே எழுத விரும்புகிறேன்.

9. நிலாச்சாரலும் நீங்களும் ஒரு வரியில்…
வலையுலகத்தில் நான் எழுத ஆரம்பித்த போது எனக்கு பேராதரவு தந்த உந்துசக்தி.

10. மனிதர்களின் நிறங்களைக் கண்டறியும் வித்தை பற்றி..?
மனிதர்கள் மீது ஆதரவும் அக்கறையும் இருந்து கூர்ந்து கவனித்தால் எல்லா நிறங்களையும் கண்டறியலாம்.

11. கதைக்களத்தை எவ்வாறு தேர்வு செய்வீர்கள்?
திடீரென்று ஒரு கரு மனதில் உருவாகும். சில நாட்கள் அது மனதில் தங்கும் போது முக்கிய கதாபாத்திரங்கள் தெளிவாக உருவாகி கதை தானாக வளர ஆரம்பிக்கும்.

12. அவசர உலகில் நாவலின் எதிர்காலம் குறித்து..?
இன்றும் என்றும் நல்ல நாவல்களுக்கு நல்ல எதிர்காலமே.

13. எதற்கு முக்கியத்துவம் கொடுப்பீர்கள்? மக்கள் கருத்து/கதையின் போக்கு.
50%-50%

14. எந்த எழுத்தாளர் உங்கள் எழுத்திற்கு உந்து சக்தியாக விளங்குகிறார்?
நிறைய பேர். ஒருவரை மட்டும் குறிப்பிட்டு சொல்வது கஷ்டம்.

15. நிலாச்சாரலில் அடுத்ததாக என்ன எழுத உத்தேசம்?
இன்னும் தீர்மானிக்கவில்லை.

About The Author

1 Comment

  1. Sundar

    இவர் விகடன் வெப் சைட்டில் எழுதிய ஆழ்மனதின் அற்புத சக்திகள் தொடர் தொடர்ந்து பல வாரங்களில் விகடனில் முதல் இடத்தில் இருந்தது. அந்த தொடர் பற்றி ஏன் எதுவும் குறிப்பிடவில்லை? அதில் நம் எடிட்டர் அம்மா நிலா பற்றி கூட எழுதி உள்ளார்.

Comments are closed.