நிலாக்குழுவினரால் சுருக்கமாக KP என அழைக்கப்படுபவர். செய்கின்ற வேலை எதுவாயினும் முழு ஈடுபாட்டோடு செய்கிற குணமுண்டு. இவரது ஆர்வமும், வேகமும் இவரை குழுவின் முக்கியத் தூண்களில் ஒருவராக்கி இருக்கின்றன. நகைச்சுவைத் துணுக்குகள், சுயமுன்னேற்றக் கட்டுரைகள் எழுதுவதில் விருப்பமுடையவர். நிலாச்சாரலின் தரத்தைத் தொடர்ந்து உயர்த்தும் முயற்சியில் முக்கிய பங்களிப்பை செய்து வருகிறார். இவருடைய ‘ரிஷி ராக்ஸ்’ என்ற தொடர் நகைச்சுவையுணர்வோடு வாசகர்களைச் சிந்திக்கவும் வைத்ததால் வாராவாரம் வாசகர்களிடயே பெரும் வரவேற்பைப் பெற்றது.
இவருடைய படைப்புகள் அனைத்தையும் காண இங்கே சொடுக்கலாம்.
https://www.nilacharal.com/ocms/log/authorlist.asp?authorid=Rishikumar
இவருடைய ரிஷி ராக்ஸ் மின்னூலாகப் பெற,
https://www.nilacharal.com/ocms/log/Rishi_Rocks.asp
இரத்தினச்செவ்வியின் மூலம் தன் கருத்துகளைக் கூறி இப்பகுதியைச் சிறப்பித்தமைக்கு ரிஷி அவர்களுக்கு மனமார்ந்த நன்றி!
1. நிலாச்சாரலையே சும்மா அதிர வைத்த ரிஷி ராக்ஸ் மீண்டும் எப்போது தொடங்கும்?
ரிஷியே அதிர்ந்து போயிருப்பதால் இனி அது சாத்தியமில்லை!! எழுத்துப்பணி தொடரவேண்டும் என்ற எண்ணம் இருக்கிறது. உந்துதல் இல்லை. என் எழுத்துநடை இனி வேறு வடிவம் பெற்று வரக்கூடும்.
2. உங்கள் எழுத்துக்களில் காணப்படும் அபரிமிதமான உற்சாகத்திற்கு காரணம் என்ன?
அடங்கிய/அடக்கப்பட்ட உணர்வுகள், வெளிப்படுத்த தயங்கும் உணர்வுகள், எழுதும்போது பீறிட்டு வருவதனால் இருக்கலாம். இணையம் ஒரு பரந்துபட்ட சுதந்திரமான வெளி! மனித மனம் இணையவெளியில் இயல்பாய் கட்டவிழ்கிறது. அவ்வளவுதான்..!
3. நகைச்சுவைத் துணுக்குகளை ரூம் போட்டு யோசிப்பீர்களா? எப்படி எழுதுகிறீர்கள்?
சில நகைச்சுவைக் கட்டுரைகளை இன்ஸ்பிரேஷன் அடிப்படையில் எழுதியிருக்கிறேன். பல துணுக்குகள் மொழிமாற்றம் செய்யப்பட்டவையாக, குறுந்தகவல் வடிவில் வந்தவையாக, எங்கோ கேட்டவையாக இருக்கும். அவற்றிற்கு நான் சொந்தம் கொண்டாட விரும்பவில்லை. ஆனால் எனது பரிச்சயம் அதில் இருக்குமாறு பார்த்துக்கொள்வேன்.
4. ரிஷியின் எந்தக் கட்டுரையாக இருந்தாலும் ஏகத்துக்கும் கமெண்ட்ஸ்… ரகசியம் என்ன?
ரகசியம் வெளியில் சொல்லக்கூடாதே!!! பெரும்பாலானோரின் மனங்களைப் பிரதிபலிப்பதனால் இருக்குமோ??
5. உங்களுக்குப் பிடித்த நகைச்சுவை எழுத்தாளர் யார் ?
எழுத்தாளர் என்றில்லை.. இளம்வயதில் கேட்ட இளசை சுந்தரம் அவர்களின் வானொலிப் பேச்சு மிகவும் பிடிக்கும். தென்கச்சி கோ.சுவாமிநாதன் அவர்களின் பேச்சில் வழிந்தோடும் நகைச்சுவையுணர்வு பிடிக்கும். நிலாச்சாரலில் டி.எஸ்.பத்மநாபன் அவர்களைப் பிடிக்கும். அவரது எழுத்து நடையே எனையும் எழுத ஊக்குவித்தது என்பதைச் சொல்லியாக வேண்டும்.
6. நிலாச்சாரல் மூலம் பெற்ற மறக்க முடியாத அனுபவம் ஏதேனும் உள்ளதா ?
மறக்க முடியாத நெஞ்சங்கள் உண்டு! என் இதயத்திற்கு நெருக்கமானவர்கள்!
7. நிலாச்சாரலின் மூலம் நீங்கள் சாதித்தவை / சாதிக்க வேண்டியவை யாவை ?
சாதித்தவை – வாசகர்களின் அன்பு நெஞ்சங்களைக் கொள்ளை கொண்டது
சாதித்திருக்க வேண்டியவை – நிறைய்ய்ய்ய்ய்ய மிஸ்ஸாகிவிட்டன!
சாதிக்க வேண்டியவை – யோசித்துக்கொண்டிருக்கிறேன்
8. நிலாச்சாரலில் உங்கள் பங்கு உங்களுக்குத் திருப்தியைத் தருகின்றதா ?
நிலாச்சாரலை
வாசிக்கிறேன்..
நேசிக்கிறேன்..
சுவாசிக்கிறேன்.
சுவாசிக்காமல் இருக்க முடியவில்லை!
9. ஓய்வு நேரத்தில் நிலாச்சாரலுக்குப் பணி செய்ய வேண்டும் என்ற எண்ணம் எப்படி ஏற்பட்டது?
வேலை செஞ்சா காசு கொடுப்பாங்கன்னு நினைச்சுதான் வந்தேன். ஓய்வு நேரத்தில் ஓய்ந்திருக்க வேண்டிய அவசியமில்லையே! நிறைய விஷயங்களைக் கற்றுக்கொண்டேன். புதுப்புது அனுபவங்கள் கிடைத்தன. பணத்தையும் மிஞ்சிய அற்புத உணர்வுகள், உறவுகள் கிடைக்கப்பெற்றேன்.
10. நிறைய பெண் ரசிகர்கள் இருக்கிறார்களே.. சிறப்புக் காரணம் உள்ளதா ?
🙂
11. ‘நிலாச்சாரலின் எதிர்காலம் தன்னார்வலர் கையில்’ என்று நிலா கூறியுள்ளாரே.. எதிர்காலத் திட்டம் என்ன?
அடிப்படையில் நிலாச்சாரல் வணிக நோக்கத்துடன் நடத்தப்படும் இதழ் அல்ல. ஜனரஞ்சகமான, தரத்தை மட்டுமே குறிவைத்து நடத்தப்படும் இதழ். வணிக நோக்கில் நடத்தப்படுவதற்கேற்ற திட்டமிடல் இல்லை. அது இருந்தாலும் அதை நிறைவேற்றித் தர போதுமான கரங்கள் சேரவில்லை. நிலாச்சாரலை ஆத்மார்த்தமாக நேசிக்கும் தன்னார்வலர்கள் வெகுவாரியாக தங்கள் பங்களிப்பைத் தரும் பட்சத்தில் அது நிகழக்கூடும்.
12. இப்பேட்டியின் மூலம் நிலாச்சாரல் ரசிகர்களுக்கு நீங்கள் கூற விரும்புவது என்ன ?
எழுத்து / வாசிப்பு – இரண்டும் நம்மை நாமே பண்படுத்திக்கொள்ளவும், பக்குவப்படுத்திக்கொள்ளவும், பரந்துபட்ட இவ்வுலகின் வேறுவேறு பரிணாமங்களைக் காணவும் உதவும். இது என் கருத்து. அது உங்களுக்கு இதுவரை நிகழாவிட்டாலும்.. ஏதோவொரு கட்டத்தில் நிகழும். வாசகர்கள் என்ற மட்டத்தோடு நிறுத்திக்கொள்ளாமல் குடும்ப உறுப்பினர்களாய் அனைவரும் பழக வேண்டும் என விரும்புகிறேன். அதை எப்படி நிகழ்த்த வேண்டுமென வாசகர்களின் சிந்தனைக்கு விட்டுவிடுகிறேன்.
13. சதுரகிரியின் முடிச்சவிழ்க்க முடியாத மர்மங்கள் பற்றி மீண்டும் தொடர விருப்பமுண்டா?
என்னை எவை பாதிக்கின்றனவோ, என் மனதினை எவை தொடுகின்றனவோ அவற்றை எழுதுகிறேன். என்னைக் கருவியாகப் பயன்படுத்திக்கொள்ள மேன்மக்களை வேண்டிக்கொண்டிருக்கிறேன். சூழல் வந்தால் அது தானே நிகழும்!
14. நீங்கள் பகுத்தறிவுவாதியா ?
அப்படின்னா..?
15. பணி தொடர்பாக உங்கள் குழுவினர்களிடம் நீங்கள் எதிர்பார்ப்பது என்ன?
நேரம் தவறாமை, ஏற்றுக்கொண்டதை தவறாமல் செய்வது. இவையெல்லாம் இருக்கின்றன.. ஆனால் இன்னும் கொஞ்சம் வேண்டுமே! சொந்தப்பணி, குடும்பசூழல் எனக் காரணங்கள் சொல்வது ஏற்றுக்கொள்ளக் கூடியதே எனினும், நிலாச்சாரல் பணிகளை அவற்றிலும் ஒன்றாகக் கவனிக்க வேண்டும் என விரும்புகிறேன். வாராய்..நீ..வாராய்…! போகும் இடம் வெகுதூரமில்லை..நீ வாராய்……….! (முடிவில் மலையுச்சியில் இருந்து தள்ளிவிட மாட்டோம்! 🙂
16. வாசகர்களின் பல்ஸை துல்லியமாக அறிவது எப்படி?
முன்முடிவுகள் தேவையில்லை. உள்ளொன்று வைத்து எதையும் அணுகாமல் அவர்களை அப்படியே புரிந்து கொண்டால் போதும்.
17. ‘நிலாச்சாரலின் தனித்தன்மை’ என்று நீங்கள் எதைக் கருதுகிறீர்கள்?
வாசகருடன் நேரடி உறவு கொள்ள விரும்புவது. அனைத்து வாசகர்களும் நிலாச்சாரலின் நிர்வாகிகளாக முடியும் – அவர்களுக்கு முழுவிருப்பமிருந்தால்.
18. எழுத்தாளர்/சிந்தனையாளர்/எடிட்டர்/டிசைனர்/கணினியியலாளர்/கோஆர்டினேட்டர்… வேறு திறமை உள்ளதா..?
பலவற்றை நுனிப்புல் மேய்ந்திருக்கிறேன். கற்றவற்றையெல்லாம் ஒருங்கிணைத்து பிறர் வியக்கத்தக்க வகையில் குறிப்பிட்ட ஏதாவதொன்றைச் செய்ய வேண்டும் என்ற எண்ணம் அரும்பியபடியிருக்கிறது. அந்த ஏதாவதொன்று எது? சிந்தனை இழையோடியபடி இருக்கிறது.
19. பல்வேறு இணைய இதழ்களுக்கிடையில் மாறிவரும் காலத்திற்கேற்ப நிலாச்சாரலைத் தக்க வைக்க என்ன செய்ய உள்ளீர்கள்?
யாருடனும் போட்டி போடும் ஆர்வமில்லை! ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு தனித்தன்மை இருக்கிறது. எதிலும் பங்கேற்காமல் நமக்கென ஒரு பாதையைத் தேர்ந்தெடுத்துவிட்டால் போய்க்கொண்டே இருக்கலாம். நம்மைப் பின்தொடர்ந்து நாலு பேர் வருவார்கள். பயணத்தை ரசிக்கவே விரும்புகிறேன்.. சென்றடையும் ஊரைப் பற்றிய கவலையில்லை! ஒருவேளை, குழுவினரின் பங்களிப்பு இன்னும் சிறக்கும்வேளையில், தன்னார்வலர்களின் பங்கேற்பு அதிகமான வகையில் இருக்கும்போது புது உற்சாகம் பிறக்க வாய்ப்பிருக்கிறது. If you really deserve, you will get it.
20. நிலாச்சாரலில் உங்களுக்குப் பிடித்த பகுதி எது? ஏன்?
குறிப்பிட்ட பகுதி என்றெல்லாம் சொல்ல முடியாது. பல்வேறு பகுதிகளும் பிடிக்கும்.
“
KP, Nice and interesting answers deep from heart!!!! ( ithathan kalura meenula naluvaruthunu solluvangalo???? .) Happy to see your articles after a long time………Write more in different topics…..