- டாக்டர் விஜயராகவன் பொறியியல் துறையில் இளங்கலைப் பட்டமும், தமிழியல் மற்றும் கல்வியியல் துறைகளில் முதுகலைப் பட்டமும், மொழியியலில் முனைவர் பட்டமும் பெற்றவர். அறிவியல் தமிழ் அவரிடம் கொஞ்சி விளையாடுவதற்கு இதைவிடச் சிறந்த காரணம் இருந்துவிட முடியாது.
- பல்லாண்டுகள் கல்லூரியில் தமிழ் பயிற்றுவித்த இவர் எண்ணற்ற ஆராய்ச்சிக் கட்டுரைகளை தமிழிலும், ஆங்கிலத்திலும் எழுதியுள்ளார்.
- அறிவியல், தொழில் நுட்பம், வர்த்தகம், அரசியல், மருத்துவம், பூகோளம், சமயம் என இவர் மொழிபெயர்த்த துறைகள் ஏராளம்.
- மைசூர் முரசு, தமிழ் கம்ப்யூட்டர், அறிக அறிவியல், விஞ்ஞானச் சுடர், கலைக்கதிர், களஞ்சியம், தமிழியல் உட்படப் பல இதழ்களில் இவரது படைப்புகள் வெளியாகியுள்ளன.
- பல கருத்தரங்குகளில் பங்கேற்றுள்ளார். குழந்தைகளுக்கான அறிவியல் நூல் ஒன்றையும் எழுதியுள்ளார்.
- தமிழ், ஆங்கிலம், இந்தி, கன்னடம் என்ற நான்கு மொழிகளில் புலமை பெற்ற முனைவர் விஜயராகவன் மைசூரில் வசித்துவருகிறார்.
- பல வருடங்களாக நிலாச்சாரலில் அறிவியல் சார்ந்த பல கட்டுரைகளை எளிய தமிழில் எழுதியுள்ளார். அவருடைய அனைத்து படைப்புகளைப் பற்றி அறிய இங்கே சுட்டவும்.<https://www.nilacharal.com/ocms/log/authorlist.asp?authorid=Vijayaraghavan>
பரபரப்பான பணிகளுக்கிடையே டாக்டர் விஜயராகவன் அவர்கள் தன் பொன்னான நேரத்தை நிலாச்சாரலுக்காக ஒதுக்கி இரத்தினச்செவ்வியைச் சிறப்பித்தமைக்கு எங்கள் மனமார்ந்த நன்றி.
1. எதற்கு முதன்மை தருவீர்கள்? தமிழ்/அறிவியல்?
உயிர்/உடல் ஆகிய இரண்டில் எதற்கு முதன்மை அளிப்பது.
2. ‘ஆங்கிலச்சொற்கள் இல்லாமல் தமிழிலேயே அறிவியல்’ சாத்தியமா?
ஆங்கிலத்தில் உள்ள அறிவியல் சொற்கள் பலவும் கிரேக்கம், இலத்தீன் போன்ற பிற மொழிகள் சார்ந்தவையே. அவை தூய ஆங்கிலச் சொற்கள் அல்ல. மக்கள் நாவில் நடமாடும் உயிருள்ள எந்த மொழியிலும் பிற மொழிச் சொற்கள் கலப்பது இயற்கை; இதற்குப் பல காரணங்கள் உள்ளன. அறிவியல் துறைக்கு மட்டுமல்லாமல் எத்துறைக்கும் இக்கருத்து பொருந்தும். ஆனால் ஆங்கிலக் கலைச் சொற்களைத் தமிழில் பயன்படுத்தும்போது அவை விளக்கும் பொருள் பற்றி தமிழில் புரிந்து கொள்வது முக்கியம்.
3. மனித உடலில் விடைக்காண முடியாத சவாலாய் இருப்பது எது?
மனித மூளை தான்
4. அறிவியல் கண்டுபிடிப்புகளால் மனித நேயம் சுருங்கி விட்டது என்பது உண்மையா?
மனித நேயம் சுருங்குவதற்கும் விரிவடைவதற்கும் காரணம் அறிவியல் கண்டுபிடிப்புகளல்ல; மனிதனின் அறிவும் மனமும் தான் காரணம்.
5. தகவல் தொழில் நுட்பத்தில் எங்கேயோ சென்று விட்ட நாம் எதிர்காலத்தில் எங்கே போவோம்?
கற்பனைக்கு எட்டாததுதான்
6. செய்தி ஊடகங்கள் எல்லாம் தமிழின் ல,ள,ழ,ன ண ஆகியவற்றையே மறக்க அடித்துக்கொண்டிருக்கும் நேரத்தில் சந்திப்பிழை பற்றிக் கவலைப்படுவார்களா?
கவலைப்பட்டாலும் கவலைப்படாவிட்டாலும், பிழை பிழைதான். சந்திப்பிழை காரணமாகப் பொருட் குழப்பம் ஏற்படும்போது அதன் விளைவுக்கு பிழை செய்வோரே பொறுப்பாவார்கள். ‘தென்னைகள்’ என்பது பல தென்னை மரங்களைக் குறிக்கும்; ‘தென்னைக்கள்’ என்பது தென்னை மரத்திலிருந்து இறக்கப்படும் கள்ளைக் குறிக்கும். ‘க்’ எனும் சந்தி எழுத்தின் முக்கியத்துவம் புரிகிறதல்லவா?
7. மிகவும் அவசியமானது என்று அடிக்கடி எண்ணிக்கொள்ளும் அறிவியல் கண்டுபிடிப்பு?
இன்றைய நிலையில் கணினியைத்தான் குறிப்பிட வேண்டும்.
8. எழுத்துலகில் உங்கள் முன்னோடி?
கோவையிலிருந்து வெளிவரும் கலைக்கதிர் இதழின் நிறுவன ஆசிரியர் டாக்டர் ஜி ஆர் தாமோதரன் அவர்களைத்தான் குறிப்பிடுவேன்
9. நிலாச்சாரலும் நீங்களும் ஒரு வரியில்..
என் எழுத்தார்வத்துக்கு வடிகாலாக அமைந்திருப்பது நிலாச்சாரலே.
10. அறிவியல் கருத்துகள் அருக்காணிக்கும் போய்ச் சேர என்ன வழி?
சமுதாயம் அறிவியல் சார்ந்ததாக விளங்கும்போது, அனைவருக்கும் அறிவியல் போய்ச் சேரும்.
11. பெருமிதத்தைத் தந்த ஒரு நிகழ்ச்சி
நிலவில் மனிதனின் காலடி பதிந்தது
12. நிலாச்சாரலில் மனித உடலியலுக்குப் பிறகு..?
எழுதுவதற்கா செய்திகளுக்குப் பஞ்சம். “இயற்பியல் (Physics)” துறையில் செய்திகளைச் சேகரித்து வருகிறேன்.
13. அறிவியலாளர்கள் இலக்கியவாதிகளை ஏற்றுக்கொள்வார்களா?
அறிவியலாளர்களும் இலக்கியவாதிகளும் ஒருவர்க்கொருவர் துணை புரிபவர்கள்; பகைவர்களல்லர். இலக்கியம் என்பதே குறிக்கோள் சார்ந்தது; அறிவியல் குறிக்கோள் சார்ந்தது அறிவியல் இலக்கியம். இவ்வாறே மருத்துவ இலக்கியம், சட்ட இலக்கியம், உளவியல் இலக்கியம் எனச் சொல்லிக்கொண்டே போகலாம்.
14. தமிழ்மொழியின் கடினத்தன்மையே புதுமைகளை ஏற்க முடியாமைக்குக் காரணம் என்பது உண்மையா?
தமிழ்மொழி கடினத் தன்மை வாய்ந்தது என்பதே தவறான கருத்து. “கடிசொல் இல்லை காலத்துப் படினே” என்னும் தொல்காப்பியமும், “பழையன கழிதலும், புதியன புகுதலும் வழுவல, கால வகையினானே” என்னும் நன்னூலும் தமிழின் நெகிழ்ச்சித் தன்மையையும் புதுமைகளை ஏற்கும் திறனையும் பறை சாற்றுவன. எனவேதான் பல்வேறு எதிர்ப்புகளுக்கு இடையிலும், குறைந்தது மூவாயிரம் ஆண்டுகளாகத் தொடர்ந்து, அடிப்படை மாற்றம் ஏதுமின்றி, மக்கள் நாவில் தமிழ் உயிருள்ள மொழியாக நடமாடி வருகிறது. கடினத் தன்மையுடன் இருந்திருக்குமானால் தமிழ் எப்போதோ மறைந்து போயிருக்கும்.
15. எதில் ஆத்ம திருப்தி ? விரிவுரையாளர்/மொழியாளர்/எழுத்தாளர்/அறிவியலாளர் ?
எழுத்தாளர் பணியில் தான். இதில் மற்றவையும் அடங்கி விடுகின்றன.
“
திரு விஜயராகவன் அவர்களின் படைப்புகளை ஆர்வத்துடன் படித்து வருபவர்களில் நானும் ஒருவன். அவரது எழுத்துக்கள் எளிமை, ஆழம்,அகலம்,நுண்மை,தெளிவு ஆகியவற்றிற்கு இலக்கணமாக உள்ளன. இன்றைக்கு மிகவும் தேவையான அறிவியல் தமிழை நன்கு சத்தம் போடாமல் வளர்க்கும் நல்லோர் பலரில் முக்கியமான ஒருவராகத் திகழ்கிறார். மைசூரிலா இவர் இருக்கிறார்? பேட்டி படித்தேன். மனம் மகிழ்ந்தேன். சுருங்கக் கூறி விளங்க வைக்கும் சூத்திரதாரியே நீ வாழ்க என்று கூறி வாழ்த்துகிறேன்.
அன்புடன் ச.நாகராஜன்
கேள்விகளும் பதில்களும் சிறப்பாக உள்ளன. ஆழமாக சிந்திக்க வைக்கின்றன.