வாசகர்களுக்கு நட்சத்ரன் அவர்களின் அறிமுகம் தேவையில்லாத அளவிற்கு பிரபலமானவர். அவரைப் பற்றி அறிந்துகொள்ளவும், நிலாச்சாரலில் வெளியான அவரது படைப்புகளை வாசிக்கவும் இங்கே செல்லலாம்.
https://www.nilacharal.com/tamil/mugam/index.html
https://www.nilacharal.com/ocms/log/authorlist.asp?authorid=nats
1.பாரதியின் கண்ணம்மா போல் எல்லா கவிதைகளிலும் வியாபித்திருக்கும் அதீதாவிற்கு மீண்டும் மடல் எழுதுவீர்களா?
எழுதிக்கொண்டுதான் இருக்கிறேன் வார்த்தைகளில் அல்லாமல் இதயத்தின் அதிர்வுகளால். அதை நீங்கள் படிப்பதற்கு உங்கள் இதயமும் அதே அதிர்வலையில் இசைய வேண்டும்.
2. உரைநடை – கவிதை இடையில் வசனக்கவிதை என்ற வடிவம் தேவையா?
எல்லா சோதனை முயற்சிகளும் ஒவ்வொரு மொழிக்கும் அவசியம் தேவை. இல்லையென்றால் அம்மொழியில் புதுமையான இலக்கியப் படைப்புகள் இல்லாமல் போய்விடும்..
3. கவிதைக்கு எது இன்றியமையாதது கற்பனை நயம் / சொல் நயம் ?
இரண்டுமே அவசியம்.
4. உங்கள் பெயரின் சிறப்பம்சம் பற்றி..?
சின்ன வயசில் கயிற்றுக் கட்டிலில் வானத்து நட்சத்திரங்களை எண்ணிக்கொண்டே கிராமமொன்றின் நிலா முற்றத்தில் தூங்குவது வழக்கம். அதுதான் நான் நட்சத்ரன் ஆக ஆனதுக்குக் காரணம்.
5. கவிதை என்றாலே காதல் அல்லது அதீத சோகம். ஏன்?
ஏனென்றால் கவிதையே அதீத மனித உணர்வுகளின் வெளிப்பாட்டுக்கான வடிவம்தானே.
6. இக்கால கல்லூரி மாணவர்களிடையே கவிதைக்கு எப்படிப்பட்ட வரவேற்பு..?
இக்கால கல்லூரி மாணாக்கர்களுக்கு கவிதையும் புரிவதில்லை, காதலும் புரிவதில்லை.ஒரு பைத்தியக்காரத்தனமான -மயக்கம் மிகுந்த உலகம் அவர்களுடையது. கடவுள்தான் அவர்களைக் காப்பாற்றவேண்டும்.
7. மரபுக் கவிதை…புதுக்கவிதை..ஹைக்கூ.. கவிதையின் அடுத்த நிலை எப்படி இருக்கும்?
கவிதை எப்போதும் தன் வடிவை மாற்றிக்கொண்டேதான் இருக்கும். வருங்காலத்தில் நகுலன் போன்ற நவீன கவிஞர்கள் எழுதிப்பார்த்த உரைநடைக் கவிதைகள் ஆதிக்கம் செலுத்தக்கூடும்.
8. நிலாச்சாரலில் உங்களின் நீண்ண்ண்ட மௌனம் கலைவது எப்போது?
சீக்கிரம் வருவேன்…இதோ ரத்தினச்செல்வியில் வந்துவிட்டேனே!
9. புற்றீசலாய் கிளம்பியிருக்கும் கவிதை வளர்ச்சி ஆரோக்கியமானதா?
நீங்களே சொல்லிவிட்டீர்கள். புற்றீசல்கள் ஒரே நாளில் அழிந்துவிடும்.
10. கவிதைகளில் வடமொழிச்சொற்கள் பயன்பாடு பற்றி..?
கவிதைக்கு எல்லாச் சொற்களும் அழகுதான். வடமொழி மட்டுமில்லாது ஆங்கிலச் சொற்களையும் கூட நாம் தினப்படி சொல்வழக்கில் பயன்படுத்துகிறோம். அந்தச் சொற்களையும்கூட பயன்படுத்தி கவிதை படைக்கலாம்.ஆனால் அது கவிதையாக இருக்கவேண்டும்.
11. நுண்கலை வல்லுநனரான உங்களின் கண்ணோட்டம்… கலை கலைக்காகவா? வாழ்க்கைக்காகவா?
என்னைப் பொறுத்தவரை கலையும் வாழ்க்கையும் ஒன்றுதான். வாழ்க்கைதான் கலை. கலைதான் வாழ்க்கை.
12. படைப்புகள் மூலம் நீங்கள் செய்த தேடுதல் வேட்டை வெற்றி பெற்றதா?
நிச்சயம் வெற்றி பெற்றது என்றுதான் சொல்வேன். ஏனெனில் அதுதான் என்னை உண்மையான ஆன்மீக வாழ்க்கைக்கு இட்டுச் சென்றுள்ளது.
13. வாசகர்களைத் தன்வசப்படுத்தும் உங்கள் உரைநடையின் தனித்தன்மை எது?
எனது எல்லா படைப்புகளிலும் இசைமயமான ஒரு லயத்தன்மையை உள்ளிருந்து கொண்டு வர முயல்வது அதற்கு காரணமாக இருக்கலாம்.
14. நவீன ஓவியம் போல, படித்தவுடன் புரியாமல் இருப்பதுதான் இலக்கியத்தரமான படைப்புகளின் அளவுகோலா?
நீங்கள் உங்கள் இதயத்தால் படிக்கவேண்டும். மூளையால் படித்தால் எந்த நல்ல இலக்கியமும் புரியாது.
15. நிலாச்சாரலுக்கு என்ன கொடுத்து என்ன பெற்றிருக்கிறீர்கள்?
இதயத்தைக் கொடுத்து (வாசகர்களின்) அன்பைப் பெற்றிருக்கிறேன்.
“