இரண்டாம் உலகம் – இசை விமர்சனம்

2013-இன் மிகுந்த எதிர்பார்ப்பிற்குரிய திரைப்படம்! காரணம், இயக்குநர் செல்வராகவன். முதல் முறையாக ஹாரிஸ் ஜெயராஜ் உடன் இணைந்திருக்கிறார். இரண்டாண்டு கால உழைப்பு டிரைலரில் தெரிகிறது. நீண்ட இடைவெளிக்குப் பிறகு வெளிவரும் ஹாரிஸின் இசை ரசிகர்களை ஈர்க்குமா என்று பார்ப்போம்.

கனிமொழியே!

மென் மீட்டல் ஒலிகளுடன் கார்த்திக் பாடியிருக்கும் இந்தப் பாடல், நாயகனின் பார்த்த நொடிக் காதல் சொல்கிறது. இடையிசையில் வரும் கோரஸ் பெண் குரல்கள் நல்ல ரசனை! கார்த்திக்கின் குரல் பாடலுக்குக் கச்சிதம். காதல் மட்டும்தான் பாடுபொருள்! ‘மூன்றாம் உலக்போ’ரில் இருந்து தன் இலக்கிய வரி ஒன்றையும் பாடலில் சேர்த்திருக்கிறார் கவிப்பேரரசு.

பறவை பறக்கும்போது ஆகாயம் தொலைந்து போகும்!
பார்வை பறவை மீதே பதிந்திருக்கும்!
விழி உன்னைக் காணும்போது உலகம் தொலைந்து போகும்!
என் கண்கள் உந்தன் மீதே விழுந்திருக்கும்!

என் காதல் தீ

இதுவும் மென் மீட்டலுடன்தான் தொடங்குகிறது. எஸ்.பி.பாலசுப்பிரமணியம் அவர்களின் கம்பீரக் குரல் பாடலை உயரே தூக்கிச் செல்கிறது. பாடலின் ரிதத்தை வடிவமைத்த விதம் கவனம் பெறுகிறது. பின் பாதியில் வரும் தபேலாவின் இசை பாடலுக்கு மேலும் மெருகேற்றுகிறது. கம்பீரக் குரலின் இடையே வருடும் இசை நிச்சயம் ஹாரிஸின் திறமையை நீண்ட காலம் காற்றில் பரப்பும்.

உலகில் காதல் பழையது, உற்ற பொழுதே புதியது!
எல்லா நிலத்தும், எல்லாப் பொழுதும் நிகழ்வது!
உலகின் நெருப்பு காதலே, உயிரின் இருப்பும் காதலே!
உண்மைக் காதல் உலகை விடவும் பெரியது!

மன்னவனே என் மன்னவனே!

குரல் வழி இசையில் பாடல் தொடங்கிப் பின்னர் வாத்தியங்களுக்கு மாறுகிறது. இங்கேயும் மீட்டல்கள் உண்டு. ஆனால், யாரும் எதிர்பாராவண்ணம் கிராமத்துச் சாயலில் ஒலிக்கிறது! சக்தியும் கோபால்ராவும் மிகச் சரியாகத் தங்கள் பணியைச் செய்திருக்கிறார்கள். காலம் கடந்து நிற்கும் மெலடி பாடல்களில் இதுவும் இருக்கும்.

வருவது வருவது வருவது துணையா, சுமையா?
தருவது தருவது தருவது சுகமா, வலியா?
ஒரு உயிருக்கு இரு உடலா!
இரு உடலுக்கும் ஒரு மனமா!

விண்ணைத் தாண்டி அன்பே!

முந்தைய பாட்டுக்குக் கொஞ்சம் கூடச் சம்பந்தமே இல்லாமல் முழுக்க முழுக்க டெக்னோ இசையில் ஒரு பாடல். விஜய் பிரகாஷின் குரல் பாடலுக்குப் பலம் சேர்க்கிறது. பாடல் ஏழு நிமிடம் நீண்டாலும், அவர் குரல் நம்மைக் கட்டிப் போடுகிறது. இசையில் பெரிய முயற்சி இல்லை என்றாலும் ஹாரிஸின் சிக்னேச்சர் சீரிஸில் இது இடம் பிடிக்கும். படத்தின் கதையை இந்தப் பாடலைக் கேட்டால் சிறிது யூகிக்கலாம்.

இவள் அவள்தானா அவள் இவள்தானா
என்ற வினாக்கள் நெஞ்சில் உண்டு.
திசு அழிந்தாலும் தசை எரிந்தாலும் ஆன்மா அழியுமா?
எந்தன் பெயர் என்ன? எந்தன் உறவென்ன?
இவள் உள்ளம் அறியுமா?

ராக்கோழி ராக்கோழி

யாரும் எதிர்பாராத வகையில் ஒரு பாடல்! ஹரிஹரன், ஸ்ரீராம் பாடியிருக்கிறார்கள். பழக்கமில்லாத சத்தங்கள் பாடலில் நிறைய இடம் பெற்றிருக்கின்றன. போர் செய்யச் செல்லும் நாயகனின் வீரம் பாடும் பாடல். நம்மையும் கூடவே போர்க்களம் கூட்டிச் செல்கிறது. இதன் காட்சிகள் நிச்சயம் பிரமிப்பூட்டுபவையாக இருக்கும் என்று எதிர்பார்க்கிறேன். இடையிசையில் கொஞ்சம் பரிட்சார்த்த முயற்சிகள். ஆனாலும் கவனிக்க வைக்கின்றன. மற்றவற்றில் காதல் தமிழ் சொல்லிய வைரமுத்து இதில் வீரத்தமிழ் பேசுகிறார்.

குமரிக்குத் தாலி செய்ய அவன் பல்ல நான் உடைப்பேன்!
குழந்தைக்குத் தூளிகட்ட அவன் தோல நான் உரிப்பேன்!
அந்த இளைய கன்னிக்குக் கூந்தல் வாரவே எலும்பில் சீப்பெடுப்பேன்!

பழங்கள்ள விஷமுள்ள

ஹாரிஸின் இசையில் தனுஷ். எதிர்பார்ப்பைத் தூண்டும் கூட்டணி. இங்கு காதலின் பிரிதலும் பிரிதல் நிமித்தமும் சொல்கிறது கவிப்பேரரசின் பேனா. ஈடுபாட்டுடன் பாடியிருக்கிறார் தனுஷ். குரலை வைத்துப் பார்த்தால் ஏதோ போதைத் தருணத்தில் இது காட்சியாக வரும் என்று தெரிகிறது. இது தனுஷின் சாயலில் ஹாரிஸ் பாடல்.

நீ கொஞ்சம் போல மெல்லச் சிரிக்க – ஆத்தாடி
என்ன பண்ணி நான் தொலைக்க!
பார்வையால் இருதயம் நனைக்கட்டுமா?
பாதத்தை இமைகளில் வருடட்டுமா?
நீ சொல்லும் வார்த்தைக்குள் வசிக்கட்டுமா?
கோபத்தைக் கொண்டாடி ரசிக்கட்டுமா?

பத்து மாத இடைவெளிக்குப் பிறகு வெளிவரும் ஹாரிஸின் இசை எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்து, படத்தின் மீதான எதிர்பார்ப்பைக் கூட்டியிருக்கிறது.

இரண்டாம் உலகம் – காதல் பயணம்!

About The Author