கண்டோர் வியப்படையக் கார்மேகக் கூட்டங்கள்
கர்ப்ப மழையைத் தாங்கிடும்
கானமயி லதுகண்டு தோகைவிரித் தாடிமிகக்
களிப்புடன் துணை தேடிடும்
பண்டே திருப்பாவை பகர்ந்ததுபோல் இடி மின்னல்
பாதாளம் வரை பாய்ந்திடும்
பயிர்பச்சை நெல்வகைகள் பாங்காய் விளைதற்குப்
பருவமழை தான் பொழிந்திடும்
நண்டோ வளைதேடும் நாலைந்து குஞ்சுடனே
நா நீண்ட தவளை கத்தும்
நறுமண மலர் சூடிக் கலப்புமணம் செய்ய
நாடும் வண்ணப் பூச்சிகள்
வண்டோங்கு செங்கமல வாவியின் தென்றலோ
வருடிடும் மயிலிறகு போல்
வண்ணமிகு காட்சியாம் இயற்கைஎழில் சொற்களால்
வருணிக்க வியலாது காண்!
(நன்றி: "தமிழ் மாருதம்"-திங்களிதழ்.பங்குனி [மார்ச்சு]2009–மதுரை)