பாம்புகளுக்கு கால்கள் இல்லாமை:
தற்போது பாம்புகளுக்குக் கால்கள் இல்லை எனினும், எப்போதுமே அவைகட்கு கால்கள் இருந்ததில்லை எனக் கூற முடியாது; பாம்பின் பரிணாம வளர்ச்சியில் அவற்றிற்குக் கால்கள் இருந்தன எனக் கூறப்படுகிறது. பாம்பின் மூதாதையர்கள் வளை தோண்டும் பல்லிகளாக (burrowing lizards) இருந்தவை என்று சில அறிவியலாளர் நம்புகின்றனர். காலப்போக்கில் அவற்றின் கால்கள் முற்றிலும் மறைந்துவிட்டதாகக் கருதப்படுகிறது. இருந்தபோதிலும் பாம்புகளால் நன்கு நகரவும் விரைந்து செல்லவும் முடிகிறது. பெரும்பாலான பாம்புகளின் அடிப்பகுதி முழுதும் அமைந்துள்ள வயிற்றுச் செதில்கள் (belly scales) அவை நகர்வதற்குப் பெரிதும் உதவியாக அமைந்துள்ளன. பாம்புகள் பல வகைகளில் அல்லது முறைகளில் நகர்கின்றன எனலாம். துருத்தி போன்ற அமைப்பு முறையினால் (concertina method) பாம்புகளால் மேலே ஏற (climbing) முடிகிறது; பக்கச் சுருள் வளைவு (side winding) முறையால் உடல் ஒரு வளையம் போல் சுருண்டும், சில நேரங்களில் ஆங்கில எஸ் (S) எழுத்து போல் வளைந்தும் நகரும் தேவைக்கேற்ப தன் உடலை வளைத்துக் கொள்ளும் ஆற்றல் பாம்புக்கு அமைந்துள்ளது.
பல்லி, பாம்பு ஆகியன ஊர்ந்து செல்லும் உயிரின வகையைச் சார்ந்தவை. அவைகட்கு இடையே உள்ள முக்கியமான வேறுபாடு என்னெவெனில் அவற்றின் தாடைகளின் அமைப்பே (structure of jaws) ஆகும். பாம்புகளுக்கு மேல் தாடை மற்றும் கீழ்த் தாடை ஆகிய இரண்டும் கூர்மையான பற்களைக் கொண்டிருப்பதோடு அத்தாடைகள் அசையக் கூடியனவும் ஆகும்.
முதலைகளுக்கும் அமெரிக்க அல்லிகேட்டர் முதலைகளுக்கும் உள்ள வேறுபாடு:
முதலைகளும் அமெரிக்க அல்லிகேட்டர்களும் சேறு. ஆறுகள் போன்ற நீர் நிலைகளில் கதகதப்பான சூழலில் வாழ்பவையே; இரண்டுமே அவற்றின் நீண்ட மூக்கின் மேற் பகுதியிலுள்ள துளைகள் வழியேதான் காற்றைச் சுவாசிக்கின்றன. நீருக்கடியில் நீந்தும்போது இவ்விரண்டுமே தம் மூக்குத் துளைகளை மூடிக் கொள்ளும்.
இரண்டுக்கும் உள்ள வேறுபாட்டை எளிமையாகக் கூறுவதெனில், முதலைகள் தம் வாயை மூடிக்கொண்டிருக்கும் போது தமது கீழ்த் தாடையிலுள்ள (lower jaw) பல்லை வெளியே காட்டும்; ஆனால் அமெரிக்க அல்லிகேட்டர்கள் அவ்வாறு காட்டுவதில்லை. இதுதான் அவையிரண்டுக்கும் உள்ள முக்கிய வேறுபாடு ஆகும்.
“