ஆண் மயில் தோகையை விரித்து ஆடுதல்:
ஆண் மயில்கள் தம் தோகையை விரித்து ஆடுவது பார்ப்போர் கண்ணுக்கும் மனதுக்கும் விருந்தூட்டும் மகிழ்ச்சி நிறைந்த காட்சியாகும். பழங்காலத்தில் கிரேக்கர்களும் ரோமானியர்களும் ஆண் மயிலைப் புனிதமான உயிரினமாகக் கருதி வந்தனர்; இந்தியாவில், குறிப்பாகத் தமிழ்நாட்டிலும் அவ்வாறே. தமிழ்க் கடவுளான முருகன் மயில் வாகனன் அல்லவா? பொதுவாக ஆண் மயில், தோகையை விரித்தாடுவது பெண் மயிலைக் கவர்வதற்கே. ஆண் பறவைகள் ஒளிவீசும் வண்ணங்களோடு கவர்ச்சியான தோற்றத்தைக் கொண்டு விளங்குபவை. ஆண்மயிலின் மிகக் கவர்ச்சியான உறுப்பாக விளங்குவது அதன் நீண்டு வளர்ந்த தோகையே ஆகும். ஒரு ஆண் மயிலின் நீளம் 7 அடி இருக்குமானால் அதன் தோகை மட்டுமே 3 அடி நீளம் வரை இருக்கும். இதன் வால் பகுதி நீலம், பச்சை மற்றும் பொன் நிறங்களின் கலவையாக விளங்கும். ஆங்காங்கே அமைந்துள்ள ‘கண்கள்’ போன்ற பகுதிகள் வண்ணத்தில் மாற்றத்தை உண்டாக்கக் காரணமாக அமைந்துள்ளன. மயில் தன் குட்டையான வால் பகுதியிலுள்ள நீண்ட இறகுகளை அதாவது தோகைகளை உயர்த்தி விரித்து ஆடும்போது மிக அழகாகக் காட்சியளிக்கும்.
பெண் மயில் ஓரளவுக்குச் சிறிதாகவும் அதன் குரலோசை சற்றுக் குறைந்தும் இருக்கும். .அதன் வண்ணம் சற்று மங்கியே இருக்கும். மயில்கள் பொதுவாக அவற்றின் கவர்ச்சிக்காகவும், தோகைகளுக்காகவும் ஓர் அழகிய உயிரினமாகவே வளர்க்கப்படுபவை.
ஆண் பறவைகள், பெண் பறவைகளை விடப் பொலிவும் பளபளப்பும் கொண்டு விளங்குதல்:
ஆண் பறவைகள் பெண்பறவைகளை விட பொலிவும் பளபளப்பும் கொண்டு விளங்குவதற்கான முக்கியதொரு காரணம், இனப்பெருக்கக் காலத்தின் போது பெண் பறவைகளைக் கவர்வதாகும். பறவைகளுக்கிடையே கூட வண்ணத் தோற்றம் அன்பின் ஈர்ப்பிற்கு ஒரு காரணமாக விளங்குவது விந்தையே!
பெண் பறவைகளின் இற்குகள் அவ்வளவு கவர்ச்சியாக இல்லாமலிருப்பது அவற்றின் இயற்கை வாழ்விற்கு ஓர் உறுதுணையாகவும் அமைந்துள்ளது. பெண் பறவைகள் தம் கூட்டுக்குள் அமர்ந்து முட்டைகளை அடை காக்கும்போது பெரிதும் பாதுகாப்பு தேவைப்படும். இந்நிலையில் இயற்கையின் கொடையாக பொலிவற்ற பளபளப்பில்லாத வண்ணத்தை அவை கொண்டிருப்பதால், எதிரிகளிடமிருந்து தம்மை மறைத்துக்கொள்ளவும் காத்துக் கொள்ளவும் முடிகிறது. மேலும் கவர்ச்சியான வண்ணம் கொண்ட பறவைகள் தம் பொழுதைப் பெரும்பாலும் மர உச்சிகளில் கழிக்கின்றன; மங்கிய நிறம் கொண்ட பறவைகள் பெரும்பாலும் தரையிலும் தரைக்கருகிலும் வாழ்கின்றன.
“