பறவைகள் பாடுவது ஏன்?
பறவைகள் எழுப்பும் இன்னொலி இயற்கையின் இனிமையான இசையாக விளங்குகிறது. பறவைகளின் ஒலி உண்மையில் அவற்றிற்கிடையே நடைபெறும் தகவல் பரிமாற்றமே. சில நேரங்களில் தமது மகிழ்ச்சியை வெளிப்படுத்தவும் அவை இசையொலியை எழுப்புகின்றன; இருப்பினும் அவை எழுப்பும் பெரும்பாலான ஒலிகள் தகவல் பரிமாற்றம் செய்வதற்கான முயற்சியேயாகும்.
இரவு நேரங்களில் பறவைகள் இடம் பெயரும்போது, அவை மிகுந்த ஒலி எழுப்புவது உண்டு. இந்த ஒலியின் வாயிலாக, கூட்டத்திலிருந்து விலகிப் போன பறவைகள் மீண்டும் தம் கூட்டத்துடன் சேர முடிகிறது. பறவைகள் எவ்வாறு பண்ணிசைக்க வேண்டும் எனக் கற்றுக்கொள்வதில்லை; இது அவற்றுடன் பிறந்த ஒர் இயற்கைப் பண்பாகும். ஆனால் அதே நேரத்தில் பறவைகளால் இசையைக் கற்றுக்கொள்ள முடியாது என்பதும் உண்மையல்ல. சில பறவைகள் பிற பறவைகளின் ஒலியைக் கற்றுக்கொள்வதும் உண்டு. மஞ்சள் நிறமுள்ள கேனரி (canary) எனப்படும் பறவைகள் நைட்டிங்கேல் (nightingale) என்னும் இன்னிசை பாடும் பறவைகளோடு வாழ்ந்தால், அப்பறவைகள் நைட்டிங்கேலின் இசையைக் கற்றுக்கொண்டு இனிமையாகப் பாடும். கிளிகள் மனிதர்களின் தொடர்பினால் சில சொற்களைக் கற்றுக்கொண்டு பேசுவதை நாம் அறிவோம்.
தாய்க்கோழி சில வகையான ஒலிகளை எழுப்பித் தன் குஞ்சுகளை எச்சரிக்கை செய்து, பகைவர்களிடமிருந்து காத்துக்கொள்ளச் செய்வதையும், பகை அச்சம் நீங்கியவுடன் மீண்டும் ஒலி எழுப்பித் தன் குஞ்சுகளை அணைத்துக்கொள்வதையும் நாம் கண்டுள்ளோம்.
பறவைகளின் பார்வை மிகக் கூர்மையாக இருப்பது ஏன்?
எல்லாப் பறவைகளுக்கும் பார்வை என்பது மிக முக்கியமான புலனுணர்வு ஆகும். பெரும்பாலான பறவைகளுக்கு தலையின் பக்க வாட்டில் அமைந்துள்ள கண்கள் ஒற்றைக் கண் பார்வை கொண்டவை (monocular); அதாவது ஒவ்வொரு கண்ணும் தனித்தனிப் பகுதியைப் பார்க்கக்கூடியதாகும். ஆந்தை போன்றவற்றிற்கு அமைந்துள்ள கண்கள் இரு கண் தொலைநோக்காடி (binocular) போன்று செயல்படுவதால் தூரத்தையும் எளிதாகக் கணக்கிட முடிகிறது. பறவைகளுக்கு மூன்றாவது கண்ணிமை (eyelid) அமைந்து விழிவெண் படலத்துக்குக் (cornea) குறுக்கே பக்க வாட்டில் நகரக்கூடியதாக இருப்பதால் ஈரப்பசையுடன் வைத்துப் பார்வைத் தடுமாற்றம் ஏற்படாமல் காத்துக்கொள்கிறது.
கழுகு போன்ற வேட்டையாடும் பறவைகளுக்கு கண்பார்வையின் துல்லியம் மிக முக்கியமானது; இதனால் இரையை முதலில் கண்டறிந்து பின்னர் அதனைக் கவ்விப் பிடிக்க முடிகிறது. எனவே கழுகின் கண்கள் இரு கண் தொலை நோக்காடியைப் போன்றும் முப்பரிமாணப் பார்வையும் கொண்டு செயல்படுகின்றன.
“