மலரின் பலவகை வடிவங்கள் (shapes) :
பூக்கள் பல வடிவங்களிலும் வண்ணங்களிலும் அமைந்திருப்பதற்குக் காரணம் அவை தமது கருவுறுதலை உறுதி செய்வதற்கு உதவவே ஆகும். மகரந்தச் சேர்க்கைக்காக (pollination) பூச்சிகளைச் சார்ந்து இருக்கும் மலர்கள், பூச்சி ஒரே வகையான தாவரத்திலிருந்து மகரந்தத் தூளை எடுத்துச் செல்கிறதா என்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும். மலர்களின் வடிவம் காரணமாக சில வகைப் பூச்சிகள் மட்டுமே அதில் மகரந்தச் சேர்க்கையை மேற்கொள்ள முடியும். டெய்சி (daisy) சூரிய காந்தி போன்ற தட்டை மலர்களை ஹோவர்ஃபிளைகள் (hoverflies) மற்றும் சில தேனீக்கள் (bees) போன்றவை மட்டுமே நாடிச் செல்லும். குழல் வடிவம் கொண்ட பூக்கள் நீண்ட நாக்குடைய பூச்சிகளை மட்டுமே ஈர்க்கும்.
தேனீக்கள் மலரின் வண்ணம் மற்றும் மணம் காரணமாக ஈர்க்கப்படுகின்றன. இவை மலரிலுள்ள தேனையும் மகரந்தத் தூளையும் தம் காலிலுள்ள பைகளில் சேமித்து வைத்துக் கொள்கின்றன.
மலர்களின் வண்ண வேறுபாடுகள்:
தாவரத்தின் இனப் பெருக்கத்திற்கு மலர் ஒரு வழிமுறையாக அமைகிறது. மலரில் ஆண் உறுப்பு, பெண் உறுப்பு அல்லது இரண்டும் ஒன்றிணைந்த உறுப்பு அமைந்திருக்கும். மலர்கள் பொதுவாக ஒளிமிக்க வண்ணம் கொண்ட இதழ்கள் (petals) மற்றும் புற இதழ்களைக் (sepals) கொண்டிருக்கும்.
மலர்கள் ஒளிமிக்க வண்ணங்களோடும் நறு மணத்தோடும் விளங்குவதற்குக் காரணம் பூச்சிகளை கவர்ந்திழுப்பதே. அவற்றின் மகரந்தச் சேர்க்கைக்கு பூச்சிகள் மிக முக்கிய பங்காற்றுகின்றன.
சில தாவரங்கள் மிகுந்த சுவையுடைய தேனை (nector) உற்பத்தி செய்து தேனீக்களைக் கவர்ந்திழுக்கின்றன. தேனீக்கள் தேனைப் பெறுவதற்கு மலருக்கு மலர் பறந்து செல்வதால் அவை மகரந்தத் தூளை (pollen) மலரிலுள்ள சூலகத்தில் (stigma) சேர்ப்பித்து அதனை கருவுறச் செய்கின்றன.
வௌவாலின் நீண்ட நாக்கு பூவிலுள்ள தேனை வழித்தெடுப்பதற்கு ஏற்ற வகையில் அமைந்திருப்பதோடு, பூவின் மகரந்தத் தூள் அதன் மென்மையான உரோமத்தில் ஒட்டிக்கொண்டு மலருக்கு மலர் வௌவால் தாவிச் செல்லும்போது மகரந்தச் சேர்க்கை நடைபெறவும் வழியேற்படுகிறது.
“