இயற்கை உலகம் (27)

பெனிசிலின் (Penicillin) உருவாக்கம்:

பெனிசிலின் என்பது இயற்கையின் வியத்தகு அதிசயங்களுள் ஒன்று. பாக்டீரியா எனப்படும் நுண்ணுயிரிகளைத் (bacteria) தாக்கக்கூடிய சில வகைப் பூஞ்சைக்காளான்களால் (moulds) உருவாக்கப்படும் ஆற்றல் மிக்க ஒரு பொருளே பெனிசிலின் ஆகும். இது ஒரு நுண்ணுயிர்க்கொல்லி (antibiotic) மருந்து; அதாவது நுண்ணுயிரிகளை அழிக்கவும் நோய்த் தொற்றுகளைக் குணப்படுத்தவும் பயன்படும் ஒரு மருந்து வகை; இது ஊறு விளைவிக்கும் நுண்ணுயிரிகள் அல்லது பாக்டீரியாக்களை எதிர்க்கும் மருந்தாகும்.

பெனிசிலின் 1928ஆம் ஆண்டு சர் அலெக்சாண்டர் ஃபிளெமிங் என்பவரால் தற்செயலாகக் கண்டுபிடிக்கப்பட்டு, பின்னர் தீவிர ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டது. இந்தப் பெனிசிலின் சிலவகைப் பூஞ்சைக்காளான்களில் உற்பத்தியாவது எனக் கண்டறியப்பட்டது. மனிதரைத் தொற்றும் பொதுவான சில நுண்ணுயிரிகளை அழிக்கக்கூடிய ஆற்றல் வாய்ந்தது இது எனவும் அறியப்பட்டது. அதே வேளையில் மற்றவர்களிடம் இதன் தாக்கம் ஏதும் இருப்பதில்லை.

பெனிசிலின் மிகவும் தேர்ந்தெடுத்துச் செயல்படுவது. அதாவது, சில நுண்ணுயிரிகளின் மீது இதன் தாக்கம்/விளைவு ஆற்றல் மிக்கதாகவும், பிற நுண்ணுயிரிகளின் மீது எவ்விதத் தாக்கமும் இன்றியும் இருக்கும். எனவே இந்தப் பெனிசிலின் எல்லாவகை நுண்ணுயிரிகளையும் அழிப்பதற்குப் பயன்படும் எனச் சொல்வதற்கில்லை.


நுண்ணுயிரிகள் (bacteria) மற்றும் நோய் நுண்மங்கள் (viruses) ஆகிய இரண்டுக்குமான வேறுபாடு
:

நுண்ணுயிரிகள் என்பன வாழ்கின்ற ஓர் உயிரினமாகும். பிற வாழும் உயிரினங்களைப் போன்று, நுண்ணுயிரிகளில் அணுமையக் கரு (nucleus) கிடையாது – அவற்றின் மரபணுக்கள் (genes) உட்பகுதி முழுதும் பரவிக் கிடக்கின்றன. நுண்ணுயிரியில் தடிமனான பாதுகாப்பு உயிரணுச் (cell) சுவர் அமைந்துள்ளது.

நாம் உள்ளிழுக்கும் மூச்சுக் காற்றின் ஒரு கன மீட்டரில் பல்லாயிரக்கணக்கில் நுண்ணுயிரிகள் பொதிந்துள்ளன. நாம் தொடும் ஒவ்வொரு பொருளிலும் நுண்ணுயிரிகள் உள்ளன. அவை நம் உடலினுள்ளேயும் உயிர் வாழக்கூடியவை. நுண்ணுயிரிகளால் நோய் உண்டாகக்கூடும் என்றாலும், பெரும்பாலான நுண்ணுயிரிகள் அபாயமற்றவையே. இறந்துபோன மற்றும் கழிவுப் பொருட்களை சிதைக்கும் முக்கியச் செயல்பாட்டை நுண்ணுயிரிகளே மேற்கொள்கின்றன. நம் குடல்நாளத்தில் (gut) உள்ள நுண்ணுயிரிகள் உணவைச் செரிப்பதற்கு உதவுபவை.

நோய் நுண்மம் எனப்படும் வைரஸ்கள் நுண்ணுயிரிகளை அதாவது பாக்டீரியாக்களை விட மிகச் சிறியவை; உண்மையாகச் சொல்லப்போனால் அவை உயிரற்றவை. ஏனெனில் உயிரோடிருக்கும் ஒன்று வளரவும் இனப் பெருக்கம் செய்யவும் வேண்டும். ஆனால் நோய் நுண்மங்கள் தாமே இவற்றைச் செய்வதில்லை; உயிரோடிருக்கும் ஓர் உயிரணுவில் நுழைந்து நோய் நுண்மங்கள் பல்கிப் பெருகும் மற்றும் அதனைத் தம் கட்டுப்பாட்டிலும் வைத்திருக்கும். இந்த உயிரணு மென்மேலும் நோய் நுண்மங்களைப் பெருக்கும் ஒரு தொழிற்கூடமாக மாறிவிடுகிறது.

About The Author