பாலைநிலத் தாவரங்கள்
பாலைநிலத்தில் பலவகைகள் உள்ளன. சில பாலைநிலங்கள் பாறையும் மணலும் நிறைந்தவை; கடுமையான சூரிய வெப்பத்தினால் தாக்கப்படுபவை. வேறு சில பாலைநிலங்கள் மிகுந்த குளிருக்கு ஆட்படுவன. காற்று, மழை மற்றும் பனி ஆகியவற்றிற்கு பாறைகள் உட்படும்போது அவை சிறு சிறு துகள்களாகக் காலப்போக்கில் மாற்றமடைகின்றன. இத்துகள்கள் மேலும் மேலும் பிளவுற்று மணலாக மாற்றமடைந்து பாலை நிலம் உருவாகிறது. எனவே பாலைநிலப் பகுதியில் தனிச் சிறப்பு வாய்ந்த சில தாவரங்கள் மட்டுமே வாழ இயலும்; இத்தாவரங்கள் அந்நிலச் சூழலுக்கு ஏற்ப தம் வாழ்வை அமைத்துக் கொள்கின்றன.
ஒரு சிறந்த எடுத்துக்காட்டாக விளங்கும் பாலைநிலத் தாவரம் கற்றாழை/சப்பாத்திக் கள்ளி (cactus) ஆகும். இத்தாவரம் கடுமையான வெப்பச் சூழலையும் வறண்ட மழையற்ற நிலைமையையும் ஏற்றுக்கொண்டு வாழ்கிறது. இது தடிமனான, தண்ணீரைச் சேமித்து வைத்துக் கொள்ளக்கூடிய சதைப் பற்றான தண்டுகளைக் (stems) கொண்டது. பாலைநிலத் தாவரங்களின் மேற்பரப்பில் உள்ள நீர் ஆவியாவதைத் தடுப்பதற்காக, இதில் இலைகள், தழைகள் ஆகியன இல்லை. இந்நிலத்தின் தாவரங்கள் முட்களையும் ஊசி போன்ற முனைகளையும், உண்பதற்கு இயலாத அளவு மோசமான சுவையும் கொண்டவை; இதனால் விலங்குகள் இத்தாவரங்களை உண்பதில்லை.
வறண்ட அல்லது மோசமான குளிர் காலங்களில் பாலைநிலத் தாவரங்கள் செயல் முனைப்பின்றிக் கிடக்கும்; தம் விதைகளை அக்காலத்தில் நிலத்தில் விழச் செய்யும்.
ஒட்டகத்தின் தண்ணீர் சேகரிப்பு
ஒட்டகத்தின் உடலில் மிக முக்கிய பகுதியாக விளங்குவது அதன் முதுகிலுள்ள தசை முண்டு அல்லது புடைப்புப் (hump) பகுதியாகும். அந்தத் தசைமுண்டு காலியாக இருக்கையில் தன் வடிவத்தை இழந்து ஒரு பக்கமாகச் சாய்ந்து தொங்கும் (flops). இத்தசை முண்டுவின் முக்கிய நோக்கம் ஒட்டகத்திற்குத் தேவையான உணவைச் சேமித்து வைப்பதே. அதே நேரத்தில் ஒட்டகம் தனக்குத் தேவையான தண்ணீரையும் சேமித்துக் கொள்கிறது. ஒட்டகத்திற்கு மூன்று வயிறுகள் உள்ளன. முதல் வயிறு, மேயும்போது பெறப்படும் உணவைப் பின்னர் அசைபோடுவதற்காகச் சேமித்து வைக்கும் இடமாகப் பயன்படுகிறது. இரண்டாவது வயிற்றில் உணவைச் செரிப்பதற்கான செரிமானச் சாறு (digestive juice) உற்பத்தி செய்யப்படுகிறது. மூன்றாவது வயிற்றில் அசைபோட்ட உணவு செரிமானமாகிறது. முதல் இரண்டு வயிறுகளின் சுவர்ப் பகுதிகளில் தண்ணீரைச் சேமித்து வைப்பதற்கான பொட்டலம் போன்ற அமைப்புகள் உள்ளன. இவ்வமைப்புகள் நீரால் நிரம்பி இருக்கும்போது தசைகளால் பாதுகாக்கப்படுகின்றன. ஒட்டகத்திற்குத் தண்ணீர் தேவைப்படும்போது, தசைகள் திறந்தும் மூடியும் தேவையான நீர் வெளியேற்றப்படுகிறது.
ஒட்டகம் மெதுவாகவும் குறைந்த அளவு எடை கொண்ட சுமையுடனும் பயணம் செய்யும்போது, அதன் வயிற்றிலுள்ள நீர் ஆறு முதல் பத்து நாட்கள் வரை அதற்குப் போதுமானதாயிருக்கும்.
“