இழுது மீன்கள் (அ) சொறி மீன்கள் (Jelly fish) :
கடற்கரை ஓரத்தில் நீரில் நிற்கும்போது சில பாதுகாவலர்கள் நீரை விட்டு ஒதுங்கிச் செல்லுமாறு அறிவுறுத்துவதை நாம் பார்த்திருக்கலாம்; இதற்குக் காரணம் இழுது மீன்களை விட்டு விலகி இருக்க வேண்டும் என்பதே. இழுது மீனைப் பார்த்தால் இவ்வுயிரினம் அவ்வளவு அபாயமானது என்பதை நம்புவது சற்றுக் கடினமானகத்தான் இருக்கும். இந்த மீன் வட்டவடிவக் கிண்ணத்தைக் (bowl) கவிழ்த்துப்போட்டது போல் காணப்படும். இதன் குழாய் போன்ற பகுதியில் உள்ள செரிமான மண்டலம் (digestive tract) இம்மீனின் மையப்பகுதியில் தொங்கியவாறு இருப்பதோடு, இறுதிப் பகுதியில் மீனின் வாய் அமைந்திருக்கும். இழுது மீனின் உணர் கொம்புகள் (tentacles) கிண்ணப்பகுதியின் விளிம்பிலிருந்து தொங்கியவாறு இருக்கும்; இவை உணவைச் சேகரிப்பதோடு சில நேரங்களில் நீந்துவதற்கும் பயன்படுகின்றன.
இழுது மீன் மிகவும் சிறியதாக இருக்குமானால், அவ்வளவு அபாயமானதாக இருப்பதில்லை. இருப்பினும், பெரிய அளவிலான இழுது மீன் ஒன்று உங்களைத் தழுவினால், உங்களால் மூச்சு விடவே முடியாத அளவுக்கு அபாயமானதாக இருப்பதோடு, ஓரளவுக்கு முடக்குவாதத் தன்மையையும் (paralysis) கூட உண்டாக்கிவிடும். போத்துகீசிய மேன்-ஆஃப்-வார் (Portuguese Man-of-war) என்பது மிகப் பெரிய இழுது மீன் ஆகும்; இது பெரியதொரு கடல் மீனையே (mackerel) கொன்று தின்று விடக்கூடியது. மனிதர்களுக்கு அபாயமான உடற்காயங்களையும் உருவாக்கிவிடக் கூடியது.
இழுது மீனின் கொம்புகள் பிறரது அபாயத்திற்குக் காரணமாக அமைவன. இதன் உடலிலுள்ள கொக்கி நுனி (barbed) போன்ற பகுதிகள் இரையின் உடலைத் துளைத்துச் செல்லக்கூடியவை. கொக்கி நுனி உயிரணுக்கள் (cells) இரையின் உடலில் நஞ்சைச் செலுத்திக் கொன்றுவிடும் அல்லது முடக்கு வாதத்தை உருவாக்கும்.
உடுமீன்கள் (அ) நட்சத்திர மீன்கள் (Star fish) :
உடுமீன் என்பது கடல்வாழ் உயிரினங்களில் மிகவும் வியப்பையும் ஆர்வத்தையும் தூண்டும் உயிரினமாகும். இதனை முள்தோலி (echinoderm) உயிரினம் என்பர்; இதன் தோல்பகுதி முட்களால் நிரம்பி இருக்கும்.
இம்மீன்களுடைய உடலின் மையப்பகுதியில் பொத்தான் போன்ற தட்டுகள் (button-shaped disks) மேலும் கீழும் அமைந்திருக்கும். கீழ்ப்பகுதியில் அமைந்திருக்கும் தட்டு மீனின் வாயாகச் செயல்படும். இம்மீனின் கண்கள் புயங்களின் (arms) முனைகளில் அமைந்திருக்கும்; இக்கண்களால்தான் இவை பார்க்கின்றன. இக்கண்கள் வட்டவடிவ முட்பகுதிகளால் பாதுகாக்கப்படுகின்றன.
இந்த மீனின் புயங்களின் அடிப்பகுதி முழுதும் நீண்ட வரிப்பள்ளங்கள் (grooves) அமைந்திருக்கும்; இவ்வரிப்பள்ளங்களில் சின்னஞ்சிறு குழாய்களின் வடிவில் உரிஞ்சு பாதங்கள் (sucker feet) அமைந்துள்ளன. இவை மீன் நகர்வதற்கும் முகர்வதற்கும் பயன்படுகின்றன.
உடுமீன்கள் செய்யும் வியப்பிற்குரிய ஓர் செயல் ஒரு சிப்பியின் ஓட்டைத் திறப்பதாகும். தம் உறிஞ்சு பகுதிகளை சிப்பி ஓடுகளின் (oyster shell) ஒரு பகுதியுடன் இணைத்து அவை திறக்கும் வரை இழுப்பதன் வாயிலாக நிறைவேற்றுகின்றன.
“