மரங்களின் வளர்ச்சி
மரங்கள் வளர ஊட்டச்சத்துகள் தேவை. அவை தமக்குத் தேவையான நீரையும் கனிமங்களையும் (minerals) மண்ணிலிருந்தும் கார்பன் டை ஆக்சைடை காற்றிலிருந்தும் பெறுகின்றன. அவற்றின் இலைகளில் உள்ள பச்சையம் (chlorophyll) சூரியனின் கதிர்களில் இருந்து வரும் ஆற்றலைக் கொண்டு சர்க்கரை, ஸ்டார்ச்சு எனப்படும் மாவுப் பொருள் மற்றும் செல்லுலோஸ் ஆகியவற்றை உருவாக்கிக் கொள்கின்றது.
தாவரத்தின் மரக்கட்டைக்கும் (wood) பட்டைக்கும் (bank) இடையே கேம்பியம் (cambium) எனப்படும் மெல்லிய உயிர்வாழும் செல்கள் (cells) உள்ளன. இப்பகுதியில் புதிய செல்கள் உருவாகி வளர்ச்சியடைகின்றன. மரக்கட்டைக்கு அருகிலுள்ள செல்கள் கட்டையாகவும் மரப்பட்டைக்கு அருகிலுள்ளவை பட்டைகளாகவும் வளர்கின்றன. இம்முறையில் மரங்கள் வளர்ச்சியுற்று மரத்தின் விட்டம் (diameter) அதாவது மரப்பருமன் அதிகமாகிறது.
மரங்கள் விட்டத்திலும் உயரத்திலும் வளர்ச்சியுறுபவை. ஒவ்வொரு மரக்கிளை அல்லது கொப்புவின் (twig) நுனியிலும் உயிர்வாழும் செல்களின் கூட்டம் இருக்கிறது. மரம் வளர்ச்சியுறும்போது, இந்த செல்கள் பல்கிப்பெருகி புதிய இலைகளும் நீளமான தண்டுகளும் (stems) உருவாகின்றன.
மரத்தின் குறுக்கு வெட்டுத் தோற்றத்தைப் பார்த்தால், வெளிறிய மற்றும் கருமையான மரப்பட்டைகள் (bands) மாறிமாறித் தோற்றமளிக்கும். வெளிறிய மரப்பட்டைகள் பெரிய செல்களைக் கொண்டு இளவேனிற் காலத்தில் (spring) அமையும். கரிய மரப்பட்டைகள் சிறிய செல்கள் நெருக்கமாகத் திணிக்கப்பட்டு இலையுதிர்காலத்தில் (autumn) உண்டாகும்.
மரம் இப்புவியில் உள்ள மிக உயரமான உயிரினமாகும். கலிஃபோர்னியன் செம்மரம் 100 மீட்டர் உயரமும் 11 மீட்டர் தடிமனும் கொண்டது. இம்மரம் ஒன்றின் எடை சுமார் 2000 டன் வரை இருக்கும். பழங்காலத்திய இம்மரத்தில் கிளைகளும் இலைகளும் குறைவாக இருப்பதோடு, இது நெருப்புக்கும் மின்னலின் தாகுதலுக்கும் எளிதில் உட்படக்கூடியது.
இலைகளின் வளர்ச்சி
பச்சைத் தாவரங்களும் மரங்களும் தாம் உயிர் வாழ உணவை உற்பத்தி செய்ய வேண்டியது கட்டாயம் ஆகும். இலைகளே உணவு உற்பத்தி செய்யும் உணவுக் கூடங்களாக இவற்றில் விளங்குகின்றன.
பழ மரங்களின் இலைகள் பழத்தை உற்பத்தி செய்வதற்கான உணவைத் தயாரிக்கின்றன. எடுத்துக்காட்டாக, பிச் (peach) எனப்படும் குழிப்பேரிப் பழங்கள் இனிப்பானவை; எனவே பிச் மர இலைகள் சர்க்கரையை உற்பத்தி செய்ய வேண்டும். ஒளிச்சேர்க்கை (photosynthesis) என்னும் செயலின் வாயிலாக நீர் மற்றும் கார்பன் டை ஆக்சைடு ஆகியவற்றைக் கொண்டு இலைகள் சர்க்கரையை உற்பத்தி செய்கின்றன. இலைகள் இச்செயல்முறைகளை மேற்கொள்ளக் காரணமாக அமைபவை அவற்றின் செல்களுக்குள்ளே அமைந்துள்ள, குளோரோஃபில் எனப்படும் பச்சயத்தைக் கொண்டிருக்கும் குளோரோஃபிளாஸ்ட்களே (chloroplasts) ஆகும்.
மண்ணிலிருந்து வேர்கள் மூலம் மரங்களால் அல்லது தாவரங்களால் பெறப்படும் தண்ணீர் இலைகளின் நரம்புகளைச் சென்றடைகின்றது. இந்நரம்புகள் மூலமே இலைகள் உற்பத்தி செய்த உணவு திரும்ப எடுத்துச் செல்லப்படுகிறது. கார்பன் டை ஆக்சைடும் மரத்தின் செல்களுக்குள்ளே இலைகள் மூலமாகவே செல்கின்றது; சூரியன் ஒளி வீசும்போது இலைகள் சர்க்கரையை உற்பத்தி செய்கின்றன. இச்செயல்பாட்டின்போது உண்டாகும் ஆக்சிஜனும் இலைகள் மூலமாகாகவே வெளியேறுகிறது. இலைகள் நீரையும் கூட வெளிப்படுத்துகின்றன. வேர்கள் வாயிலாகப் பெறப்படும் நீரின் ஒரு பகுதி சர்க்கரை உற்பத்திக்குப் பயன்படுத்தப்படுகிறது. மீதமுள்ள நீர் இலைகளின் மேற்பரப்பில் வெளிப்படுத்தப்படுகிறது.
சூரியனிலிருந்து பெறப்படும் ஆற்றல் இலைப்பரப்பின் மீதுள்ள நீரை இலைத்துளைகள் (stomata) வழியே ஆவியாக்குகிறது. இதனால் வேர்களிலிருந்து நீரை எடுத்துச் செல்லும் வழித்தடங்களில் அழுத்தம் குறைந்து, மேலும் அதிக நீர், தாவரத்தின் தண்டுகளுக்குச் செல்ல வாய்ப்புண்டாகிறது.
“