பூ நாரைப் பறவை (flamingo) :
பூ நாரைப் பறவையின் கால்கள் நீளமாகவும், உயரமான கழிகள் (stilts) போன்றும் இருக்கும்; இவற்றின் அலகுகள் (bills) வளைந்தும் கழுத்து நீண்டும் காணப்படும். இவை உண்ணும் போது தமது தலைகளை நீருக்கடியில் அமிழ்த்திக் கொண்டும் பக்கவாட்டில் இருபுறமும் அசைத்துக்கொண்டும், கவனமாக நடந்து கொண்டே செல்லும். இவற்றின் அலகுகள் சிறிய குறுகலான தட்டுகள் (plate) போன்று அமைந்திருக்கும். இப்பறவையின் பெரிய சதைப்பிடிப்பான நாக்குகள் அலகின் உட்புறம் அழுத்தமாக அமைந்திருப்பதால், முதுகெலும்பற்ற இரைகள் (invertebrates), தாவரங்கள் ஆகியவை அலகினுள் தங்கி நீர் மட்டும் வடிந்து வெளியேறிவிடும். பூ நாரைகள் உலகின் பல பகுதிகளில் ஏரிகள், சதுப்பு நிலங்கள் (marshes) மற்றும் கடல் பகுதிகளில் கூட்டம் கூட்டமாக ஆயிரக்கணக்கில் இணைந்து வாழ்பவை. பூ நாரைகள் ஆண்டுக்கு ஒரு முறை மண்கூடுகளைக் கட்டி இனப்பெருக்கச் செயலில் ஈடுபடும். பெரும்பாலான பெண் பூ நாரைகள் கூட்டின் மேற்பகுதியில் ஒரே ஒரு முட்டை மட்டுமே இடும். ஆண், பெண் இரு பறவைகளும் மாறி மாறி முட்டையை அடைகாக்கும். பூ நாரைப் பறவையின் இறகுகள் கண்ணைக் கவரும் வண்ணங்களில் பார்ப்போரைக் கவர்ந்திழுக்கும் தன்மை கொண்டவை.
தங்கக் கழுகு (golden eagle) :
தங்கக் கழுகு பிற உயிரினங்களை இரையாக உட்கொள்ளும் ஒரு பறவை; வளர்ந்த இக்கழுகு ஒன்றின் இறக்கைத் தொகுதி (plumage) பெரும்பாலும் பழுப்பு நிறத்திலும் வால் பகுதி சாம்பல் கலந்த பழுப்பு நிறத்திலும் இருக்கும். தலைப்பகுதி இறகுகளும் கழுத்தின் பின்பகுதியும் பொன்னிறம் கலந்த பழுப்பு நிறத்தில் அமைந்திருக்கும்; எனவேதான் இப்பறவைக்கு தங்கக் கழுகு எனப் பெயர் அமைந்துள்ளது.
தங்கக் கழுகு மிக உயரத்தில் நீண்ட நேரம் பறக்கக் கூடியது. மலைப் பகுதியில் வாழும் இப்பறவைகள் தரையின் பெரும் பகுதியைக் காணும் வண்ணம், உயரே வீசும் காற்றைப் பயன்படுத்தி மிக உயரத்தில் வட்டமிட்டுப் பறக்கக்கூடியவை. மலையுச்சிகளில் நீண்டு அமைந்திருக்கும் உயரமான நிலப்பகுதிகளில் வீசும் காற்றில், இவை மணிக்கு 200 கி.மீ. வேகத்தில் பறந்து சென்று, மீண்டும் நிலப் பகுதிக்குத் திரும்பக்கூடிய ஆற்றல் பெற்றவை. நிலையான காற்றிலும் வீசும் புயலிலும் எவ்விதச் சிரமுமின்றி இப்பறவைகள் பறக்கும் திறன் கொண்டவை. சில சமயங்களில் வானிலிருந்து தரைக்குத் தம் இரையைப் பிடிக்கச் செங்குத்தாக செல்லக்கூடியவை இக்கழுகுகள்; இப்பறவைகளால் மிக விரைந்து செல்லும் வல்லூறுகளுடனும் (falcons) போட்டியிட்டுப் பறக்க இயலும்.
“