துன்னெலி வளை (mole hill):
துன்னெலி என்பது தரையில் வாழும் ஒரு சிறிய ஆனால் எடை மிகுந்த ஒரு பாலூட்டும் விலங்கு; இது விரைவாக, ஓய்வின்றி தரையைத் தோண்டுவது; இது கூர்மையான குறுகிய மூக்கும் ஆப்பு வடிவத் (wedge shaped) தலையும் பெரிய முன்னங்கால்களையும் கொண்டது. இதன் முன் பாதங்கள் (paws) வெளிப்புறம் திரும்பக் கூடியவை மற்றும் நீண்ட அகலமான நகங்களை உடையவை. முன்னங்கால்கள் மண்வெட்டி போன்று மண்ணை அகழ்ந்து தோண்டக் கூடியவை. துன்னெலியின் பின்னங்கால்கள் குட்டையானவை மற்றும் ஆற்றல் மிக்கவை. இவ்விலங்கின் பார்வை மிகவும் மந்தமானது; இதன் சின்னஞ்சிறு கண்கள் மயிரிழைத் தோலால் மூடி மறைக்கப்பட்டிருக்கும். இதற்கு வெளிப்புறத்தில் தோன்றும் காதுகள் இல்லாவிடினும், கேட்கும் திறன் மிகுதி.
துன்னெலியின் உறைவிடம் கூம்பு வடிவ மண் குவியலால் (mound) ஆனது. இவ்விலங்குகள் பூச்சிகளையும் புழுக்களையும் தின்பவை. இவை மண் தரையைத் தோண்டுவதன் காரணமாகத் தோட்டங்களும் வயல்களும் பாழாகி விடுவதுண்டு. துன்னெலியின் இனப்பெருக்க இடம் இலைகளையும் தழைகளையும் கொண்டு பெரிதாக அமைக்கப்படும். பிறந்த இரு வாரங்களில் இதன் உடல் முழுதும் மயிரிழைப் போர்வை வளர்ந்து பரவிடும். நான்கைந்து வாரங்களில் இது கூட்டைவிட்டு வெளியேறிச் செல்லக் கூடியது.
ஊமை அன்னப்பறவை (Mute swan):
அன்னம் என்பது வாத்து (duck), கூஸ் வாத்து (goose) போன்று ஒரு நீர்வாழ் உயிரினம் ஆகும். அன்னப்பறவையின் அலகு தட்டையாகவும், கழுத்து நீண்டும், இறகுகள் நீர் ஒட்டாதவையாகவும், இறக்கைகள் நீண்டு கூர்மையாகவும் இருக்கும்; இப்பறவை குட்டையான வால், சிறிய கால்கள் மற்றும் வலையமைப்பு போன்ற பாதங்கள் ஆகியவற்றைக் கொண்டிருக்கும். ஊமை அன்னப் பறவை உலகின் வட பகுதியில் சாதாரணமாகக் காணப்படுகிறது. வடக்கு ஐரோப்பா மற்றும் ஆசியப் பகுதியே இவற்றின் பூர்வீகமாகும்; ஆனால் இப்பறவை உலகெங்கிலும் பூங்காக்களில் உயிர் வாழக்கூடியது. ஊமை அன்னம் பிற அன்னப் பறவைகளை விட அமைதியானது; அனால் சினம் கொள்ளும்போது உரக்க ஒலி எழுப்பும். ஊமை அன்னத்தின் அலகு ஆரஞ்சு வண்ணத்தில் அடிப்பக்கம் கருமைக் நிறக் குமிழ் வடிவ (knob) உறுப்பைக் கொண்டிருக்கும். இதன் அலகு கீழ் நோக்கி இருப்பதோடு கழுத்து வளைந்து அமைந்திருக்கும்.
இப்பறவைகள் கோடைக் காலத்தில் நீர்நிலைகளின் சேற்றுப் பகுதிகள் மற்றும் குளங்களில் வாழ்பவை. மழைக் காலத்தில் பெரிய ஏரிகளுக்கு இடம் பெயர்ந்து செல்லும். நீருக்கடியில் உள்ள தாவரங்களை இவை உண்டு உயிர் வாழ்பவை.