மயில்கள் தமது தோகைகள் குறித்து மிகவும் பெருமிதமும் மகிழ்ச்சியும் கொள்வதாகக் கூறப்படுகின்றது. ஆண் மயில்கள் தமது தோகைகளை விரித்தாடுவதற்கு ஆர்வமூட்டும் காரணம் இருப்பதாகவும் கருதப்படுகின்றது. தன்னுடைய பெண் இணையைக் கவர்ந்திழுப்பதே இக்காரணம் ஆகும். பெண் மயிலுக்கு இத்தகைய அழகான தோகை அமையவில்லை. ஆண் மயில்களுக்குப் பசுமை கலந்த நீல நிறக் கழுத்தும் மார்பும், பழுப்பு கலந்த நீல நிறக் கீழ்ப்பகுதிகளும், நீண்ட பசுமை நிறத் தோகைகளும் அத்தோகைகளில் கண்களை ஒத்த அமைப்பில் விளங்கும் குறிகளும் அழகுறக் காட்சியளிக்கின்றன. காதல் நினைவு ஏற்படும்போது ஆண் மயில் தனது தோகையை விரித்துப் பரப்பியவாறு பெண் மயிலுக்கு முன் நடந்து செல்கிறது; தான் அழகான, கவர்ச்சியான துணைவன் என்பதைத் தன் காதலிக்கு வெளிப்படுத்துவது போன்று இது அமைகிறது.
பழங்காலத்தில் மயில்களை மதிப்பு மிக்க சொத்தாக உலகம் முழுதும் மக்கள் கருதி வந்தனர். கிரேக்கர்கள் மற்றும் ரோமானியர்கள் இப்பறவையைப் புனிதமாகக் கருதி வந்தனர். இந்திய வாழ்க்கை முறையிலோ மயிலுக்குத் தனி இடம் உண்டு. முருகனின் வாகனமான இதை புனிதமாக இன்றும் கருதி வழிபடுகின்றனர். இது இந்தியாவின் தேசியப் பறவையும் கூட!
விலங்குகள் தமக்குள்ளே பேச்சு மூலம் உணர்வுகளை அல்லது கருத்துகளைப் பரிமாறிக்கொள்ள இயலாது எனினும், சில ஒலிகள் மற்றும் சமிக்கைகள் வாயிலாகக் கருத்துப் பரிமாற்றம் செய்துகொள்ள இயலும். சினம், மகிழ்ச்சி போன்றவற்றை மனித இனம் முகக் குறிப்பால் வெளிப்படுத்திக் கொள்கின்றது. தலை அசைவு, கைச்சைககள் போன்றவற்றாலும் கருத்துகளை வெளிப்படுத்திக் கொள்ளக் கூடும். பல விலங்குகள் குரலொலி, சைகைகள் வாயிலாக மனிதரைப் போன்றே உணர்வுகளை வெளிப்படுத்திக் கொள்கின்றன. எடுத்துக்காட்டாக, ஒரு தாய்க் கோழி உரத்த ஒலி எழுப்பினால் அல்லது தனது உடலை வளைத்தால், அதன் குஞ்சுகள் அனைத்தும் வரவிருக்கிற அபாயத்தைப் புரிந்து கொண்டு எச்சரிக்கை உணர்வைப் பெறுகின்றன. குரங்குகள் நீண்ட ஒலி எழுப்பியும் ஓலமிட்டும் தமது அபாய நிலைமையைக் காட்டுக்குள் வெளிப்படுத்துகின்றன.
பிற விலங்குகள் பல்வேறு வகையான ஒலிகளை எழுப்பிக் கருத்துகளைத் தமக்குள்ளே பரிமாறிக் கொள்கின்றன. எல்லா உயிரினங்களும் அபாயத்தை வெளிப்படுத்தும் எச்சரிக்கை ஒலிகளைக் கொண்டுள்ளன. மேலும் தங்கள் உணர்வுகளையும் கருத்துகளையும் தமக்குள்ளே பரிமாறிக்கொள்ள பலவகைப்பட்ட கிரீச்சொலிகள், நகையொலிகள், அலறல் ஒலிகள், வலி மற்றும் நோவை வெளிப்படுத்தும் ஒலிகள் ஆகியவற்றைப் பயன்படுத்துகின்றன.
“