இயற்கை உலகம் – 05

நட்சத்திர மீன் (Star fish) :

        நட்சத்திர மீன் என்பது உடு மீன் அல்லது கடல் நட்சத்திரம் (sea star) எனவும் அழைக்கப் படுகிறது; இதன் உடற்பகுதியில் புயங்களைப் போன்ற (arm like) நீண்ட தடிமனான தோல் பகுதி அமைந்துள்ளது. இவ்வுயிரினத்தின் பெரும்பாலானவற்றிற்கு ஐந்து “புயங்கள் / கைகள்” அமைந்து, ஐந்து முனைகள் கொண்ட நட்சத்திரங்கள் போன்று அவை காணப்படும். இவ்வுயிரினத்தின் சிலவற்றிற்கு 40 அல்லது அதற்கும் மேற்பட்ட எண்ணிக்கையிலான கைகளும் அமைந்திருப்பதுண்டு. உலகின் எல்லாக் கடல் பகுதிகளிலும் இந்த நட்சத்திர மீன்கள் காணப்படுகின்றன.

இதன் உடற்பகுதியின் மையத்தில் தட்டு போன்ற அமைப்பும், அதனைச் சுற்றி புயங்களும் அமைந்துள்ளன. மையப்பகுதியின் அடிப்பாகத்தில் இதன் வாய் அமைந்துள்ளது; இதனைத் தொடர்ந்து பெரிய பை போன்ற அமைப்பில் வயிற்றுப் பகுதி அமைந்திருக்கும். உடலின் வெளிப்பாகத்தில் வாயிலிருந்து நீண்டதொரு வரிப்பள்ளம் (groove) ஒவ்வொரு கைப்பகுதிக்கும் செல்கிறது. மெல்லிய குழாய் போன்ற வரிசையான பாதங்கள் (tube feet) இப்பள்ளங்களில் அமைந்திருப்பதோடு அவற்றின் முனைப் பகுதிகளில் உறிஞ்சு தட்டுகள் (suction discs) அமைந்துள்ளன. இக்குழாய்ப் பாதங்கள் தவழ்ந்து செல்வதற்கும் உணவைத் தேடுவதற்கும் பயன்படுகின்றன. ஒவ்வொரு புயத்தின் முனையிலும் அமைந்துள்ள நுண்ணிய கண் போன்ற அமைப்பின் வாயிலாக நட்சத்திர மீன் ஒளியை உணர்கிறது. இதற்கு மூளைப் பகுதி என ஒன்று இல்லை; ஆனால் கைகளின் நரம்புப் பள்ளத்தில் நரம்பு நாண்கள் அமைந்துள்ளன. பாதுகாப்புக் காரணங்களுக்காக பல நட்சத்திர மீன்கள் தமது புயங்களில் ஒன்றை உதிர்த்து விடுவதுண்டு; பின்னர் புதியதொரு புயம் வளர்ந்து உதிர்ந்த புயத்தினை ஈடு செய்து விடும்.

ஈ (Fly) தனது கால்களை ஒன்றோடொன்று தேய்த்துக் கொள்வது :

ஓர் ஈ தனது கால்களை ஒன்றோடொன்று தேய்த்துக் கொள்வதற்கான காரணம், அது தன்னைத் தானே தூய்மைப்படுத்திக் கொள்வதும் கால்களில் சேர்ந்திருக்கும் பிற பொருட்களை நீக்குவதுமே ஆகும். நன்கு வளர்ச்சியுற்ற இரண்டு இறக்கைகள் ஈக்கு அமைந்துள்ளன. ஈ வகைகளில் நன்கு அறியப்பட்டிருப்பது சாதாரண வீட்டு ஈ ஆகும். இது கழிவுப் பொருட்களிலிருந்து உணவைத் தேடிக்கொள்ளும் (scavenger) ஓர் உயிரினம்; மேலும் டைஃபாய்டு காய்ச்சல், காலரா, சீதபேதி போன்ற நோய்களுக்குக் காரணமான நுண்ணுயிரிகளை (bacteria) இந்த ஈ எடுத்துச் செல்லக்கூடியது. மூடப்படாத உணவுகளில் வீட்டு ஈ தனது செரிமான திரவத்தை தெளித்துவிடக் கூடியது; இதை உண்பவருக்கு நோய் பரவக்கூடிய ஆபத்து ஏற்படும். மேலும் ஈக்களின் கால்கள் மற்றும் உடலில் ஒட்டியுள்ள நச்சுப் பொருட்கள் வாயிலாகவும் நோய் பரப்பப்படக்கூடிய வாய்ப்பு உண்டாகிறது.

ஈக்களுக்கு நாற்றத்தை நுகரக்கூடிய நுட்பமான திறன் அமைந்துள்ளது. பிசுபிசுப்பான தீ நாற்றம் வீசும் திரவத்தையுடைய ஸ்டிங்க்ஹார்ன் (stink horn) எனப்படும் ஒருவகைக் காளான் (fungus) உள்ளது; இது ஈக்களைக் கவர்ந்திழுக்கக் கூடியது. ஈக்கள் இத்திரவப் பொருளை உண்டு பின்னர் பறந்து செல்லும்போது இனப்பெருக்க நுண்துகள்களைப் (spores) பரப்பக்கூடியவை.

                  
                                                          

About The Author