கொசுக்கடியால் நமைச்சல் / அரிப்பு (itching) ஏற்படுவது
பெண் கொசுக்கள் மட்டுமே கடிக்கக் கூடியவை; சில உயிரினங்களில் பெண் இனம் மட்டுமே மனிதர்களையும் விலங்குகளையும் தாக்கக் கூடியது. கொசுக்களால் உண்மையில் கடிக்க முடியாது; ஏனெனில் அவற்றால் தம் தாடைகளைத் (jaws) திறக்க முடிவதில்லை. ஒரு கொசு உண்மையில் தாக்கப்படுபவரின் தோலை ஊசிகளைப் போன்ற ஸ்டைலெட்ஸ் (stylets) என்னும் உறுப்புகளால் தாக்குகிறது; இவ்வுறுப்புகள் கொசுவின் வாயில் நடுப்பகுதியில் அமைந்துள்ளன. ஸ்டைலெட்ஸ் எனப்படும் இவ்வுறுப்புகள் கொசுவின் கீழ் உதட்டுப் பகுதியில் பாதுகாப்பாக மூடப்பட்டு அமைந்துள்ளன. இவை தோலில் நுழையும்போது, உதடு வளைந்து மேற்புறம் நழுவிச் செல்கிறது. இந்நிலையில் ஸ்டைலெட்ஸால் உருவாக்கப்பட்ட வழிகளில் கொசுவின் உமிழ்நீர் போன்ற திரவம் தாக்கப்பட்ட தோலின் புண்ணில் செலுத்தப்படுகிறது. பெரும்பாலானவர்களுக்கு கொசுவின் உமிழ்நீர் ஒவ்வாமையை (allergic) ஏற்படுத்துவதால் அரிப்பும் நமைச்சலும் உண்டாகின்றன.
கொசுக்கடி மக்களுக்கும் பிற விலங்குகளுக்கும் அபாயமான நோய்களை ஏற்படுத்தக் கூடியதாகும். மலேரியா, மஞ்சள் காமாலை, மூளை அழற்சி போன்ற நோய்கள் சில வகை கொசுக்களால் ஏற்படக்கூடியவை.
அந்துப்பூச்சிகள் (moths) துணியைத் தின்பது
அந்துப்பூச்சிகளில் “துணி அந்துப்பூச்சி” என்றே ஒரு வகை உள்ளது; இவை துணிகளைத் துளையிடுவதாகப் பெரும்பாலோர் குறை கூறுகின்றனர். ஆனால் உண்மையில் அந்துப்பூச்சிகள் இச்சேதத்தை உண்டாக்குவதில்லை; இப்பூச்சிகள் எதையும் உண்பதும் இல்லை; முட்டைகளை உற்பத்தி செய்து பின்னர் மடிந்து போவதே இவற்றின் வேலை. மாறாக அந்துப்பூச்சிகள் தமது இளமைக் காலத்தில் புழு வடிவில் (caterpillar) இருக்கும்போது மேற்கூறிய சேதம் துணிகளுக்கு உண்டாக்கப்படுகிறது. அந்துப்பூச்சி துணிகளில் முட்டைகளை இட்டு, ஒரு வாரத்தில் அம்முட்டைகள் புழு வடிவிற்கு மாற்றமடைகின்றன. இப்புழுக்கள் துணி, பட்டு போன்றவற்றில் குழாய் வடிவ உறையைத் தமக்கு உருவாக்கிக்கொள்ளும். புழு வடிவிலிருந்து அந்துப்பூச்சியாக மாறும் வரை இக்குழாய்களுள் அவை வாழும். இதனால்தான் துணிகளில் துளைகள் உண்டாகின்றன. எனவே அந்துப்பூச்சிகளிடமிருந்து துணிகளைக் காப்பாற்றுவதற்கான ஒரே வழி, துணிகளில் அவை முட்டையிடுவதைத் தவிர்ப்பதுதான்.
கண்களைக் கொண்ட பறக்கும் அந்துப்பூச்சிகள் ஓய்வாக இருக்கும்போது உலர்ந்துபோன தழை அல்லது இலை போன்று காட்சியளிக்கும். அவை எச்சரிக்கப்படும்போது, பின்புற இறக்கைகளிலுள்ள கண்களை உடனே வெளிப்படுத்தும் வகையில் முன்பக்க இறக்கைகள் திறந்து கொள்ளும். இந்நிலையில், இப்பூச்சிகளைத் தின்னும் பறவைகள் போன்றவை அச்சமடைந்து வெளியேறி விடுகின்றன.