இன்னும் கொஞ்சம் கேசரி !

பத்மநாபனுக்கு சந்தேகம் வந்து விட்டது.

"என்ன.. எல்லா மாமியும் ஒண்ணு கூடிட்டாங்க.."

ஒரு வார காலமாய் பாலாஜி குடியிருப்பில் முதல் தள, இரண்டாம் தளக் குடியிருப்பு மாமிகள் எல்லோரும் கீழ் வீட்டிலேயே இருந்தனர். ‘இன்னிக்கு வெறும் ரசம் தான். நேத்து பொரிச்ச அப்பளம் இருக்கு டப்பால’ என்று கமலா சொல்லிவிட்டு போய் விட்டாள். அப்படி என்னதான் நடக்கிறது. தெரிந்து கொள்ளாமல் தலை வெடித்து விடும் போலிருந்தது. கீழ் வீட்டுக்கு இறங்கி வந்தால் கதவு மூடியிருந்தது. உள்ளிருந்து டேப்பில் பாட்டு கேட்டது.

‘நீல வண்ணக் கண்ணனே உன் எண்ணமெல்லாம் நான் அறிவேன் கண்ணா என் கையைத் தொடாதே’
கீச்சுக் குரலில் கூடவே யாரோ பாடினார்கள்.

முதல் மாடியில் இருக்கும் சுந்தரமும் வந்தார்.
"என்னதான் நடக்குது.."
"அதான் புரியலே"
கதவைத் திறந்து வனஜா வந்தாள்.
"ஏம்மா.. ஏதாச்சும் ரேடியோ புரோகிராமா.. இல்லே.. ஸ்கூல்ல டான்ஸா.. என்ன விஷயம்"
"ஸ்கூல்ல இல்ல.. நம்ம பிளாட்லதான். நியூ இயர் செலிபரேஷன்"
புது வருஷக் கொண்டாட்டமாய் ஆடல், பாடலுடன் க்விஸ் நிகழ்ச்சி, ஜோக் சொல்லுதல் எல்லாம் உண்டாம்.
வனஜா அடுத்ததாகச் சொன்னதுதான் பத்மநாபனுக்கு டென்ஷன் உண்டாக்கிவிட்டது.
"நம்ம குடியிருப்புல இருக்கற தம்பதிகளுக்கு ஒரு போட்டி.. கணவன், மனைவி ரெண்டு பேர்கிட்டேயும் தனித்தனியா கேள்வி கேட்டு ‘ஐடியல் கப்பிள்’ பரிசு தரப்போறோம்"
"அதெல்லாம் எதுக்கு.. ஏதாச்சும் பாட்டு பாடுங்க. ஜோக் சொல்லுங்க. போதுமே.. கேள்வி எல்லாம் எதுக்கு.."
"இருக்கட்டும் ஸார்.. ஜாலியா இருக்கும்" என்றார் சுந்தரம்.
அந்த நிமிடம் அங்கு வந்த கணேசனும் ஆமோதித்தார் குறும்பாக. "ஒருத்தரை ஒருத்தர் புரிஞ்சுக்கலைங்கிறதை மத்தவங்களும் தெரிஞ்சுக்கட்டுமே. எத்தனை நாள் நாம மறைச்சு வைக்கிறது"

பத்மநாபனுக்கு எப்போதுமே இந்த போட்டி விவகாரம் எல்லாம் பிடிக்காது. சரி, விதிப்படி நடக்கட்டும் என்று விட்டு விட்டார்.
ஐடியல் கப்பிள் போட்டியை மிஸஸ் கல்யாணிதான் நடத்தினார். ஒவ்வொரு தம்பதியையும் தனித்தனியே பேட்டி கண்டார். பிறந்த தேதி, கல்யாண தேதி என்று வழக்கமான கேள்விகளுடன் வித்தியாசமான கேள்விகளும். பேட்டி முடிந்து வந்த தம்பதிகள் அவர்களுக்குள் அப்புறம் பேசிக் கொள்ளவில்லை. ‘தப்பா பதில் சொல்லியிருந்து, ரிசல்ட் முன்னதாகவே தெரிந்து விட்டால்’ என்கிற பயம்.

ஒரு வழியாய் பேட்டி முடிந்து நியூ இயர் தினமும் வந்து விட்டது. நிகழ்ச்சிகள் எல்லாம் ஜாலியாக நடக்க தம்பதிகள் மட்டும் உள்ளூரக் கவலையுடன் இருந்தனர். ‘ஜஸ்ட் போட்டிதானே.. ஜாலிக்கு’ என்று சொல்லிக் கொண்டாலும் தாமே முதல் பரிசு வாங்கவேண்டும் என்கிற படபடப்பு.

ரிசல்ட் சொல்ல வேண்டிய நேரம் வந்தது.

மிஸஸ் கல்யாணி மைக்கைப் பிடித்தார்.

"நம்ம குடியிருப்புல மொத்தம் பத்து தம்பதிகளை பேட்டி கண்டேன். நல்ல ரெஸ்பான்ஸ். ஆனா ஒரு சின்னக் குழப்பம். எட்டு தம்பதிகள் போட்டியிலே இறுதிக் கட்டத்திற்கே வரலே. ரெண்டே தம்பதிகள்தான் ரொம்ப சரியா பதில் சொல்லியிருக்காங்க. அதாவது பத்து கேள்வி கேட்டதுல ஒரே ஒரு கேள்விக்கு சரியான பதில் ரெண்டு தம்பதியுமே சொல்லியிருக்காங்க. டை ஆனதால இப்ப அவங்க ரெண்டு பேர்ல ஒரு தம்பதியை நாம ஐடியல் கப்பிளா தேர்ந்தெடுக்கணும்"

யார் அந்த ரெண்டு பேர்..

மிஸஸ் கல்யாணி சொன்னார்.

"மிஸ்டர் அண்ட் மிஸஸ் பத்மநாபன்.. மிஸ்டர் அண்ட் மிஸஸ் சுந்தரம்" எல்லோரும் கை தட்டினார்கள்.

இரு தம்பதிகளும் முன்னே வந்து நின்றனர்.

"இப்ப இந்த ரெண்டு தம்பதிகளையும் தனித்தனியே ஒரே ஒரு கேள்வி கேட்கப் போறேன்.. யார் சரியான பதில் சொல்றீங்களோ.. அவங்களை செலக்ட் பண்ணிரலாம்"

ஐந்து நிமிடங்கள் பரபரப்பாக இருந்தது. மீண்டும் மிஸஸ் கல்யாணி வந்து மைக்குடன் நின்றதும் இரைச்சல்.

"அமைதி பிளீஸ். ஐடியல் கப்பிள் மிஸ்டர் அண்ட் மிஸஸ்.. "

இடைவெளி கொடுத்து சொன்னார்.

"..பத்மநாபன்."

எல்லோரும் கைதட்டல்.

"அவங்ககிட்டே ஒரே ஒரு கேள்விதான் கேட்டேன்.. முதமுதல்ல என்ன பேசினாங்க உங்ககிட்டேன்னு.. பத்மநாபன் தம்பதி ஒரே பதிலைச் சொன்னாங்க. கமலாவைப் பெண் பார்க்கப் போனப்ப.. டிபன் கமலாதான் பரிமாறியிருக்காங்க. அப்ப பத்மநாபன் இன்னும் கொஞ்சம் கேசரி போடுன்னு சொல்லியிருக்கார். கேசரின்னா ரொம்ப இஷ்டமாம் அவருக்கு.. ஸோ.. அவங்களுக்கு முதல் பரிசு"

சிரிப்பொலிக்கு நடுவே பத்மநாபன் வெட்கத்துடன் தலை குனிந்து கொண்டார்.

*****

About The Author

1 Comment

  1. vaany

    மிகவும் நல்ல கதை. படித்து முடிந்தவுடன் புன்னகை முகத்தில் தோன்ரியது.

Comments are closed.