இன்னும் எத்தனை முகங்கள் நாகேஷுக்கு?

தமிழ் சினிமாவின் மிகச் சிறந்த நடிகர் யார் என்று இத்தலைமுறையினரிடம் கேட்டால், அநேகமானோர் சொல்லும் பதில் "கமலஹாசன்"தான். அந்த கமலஹாசன், சில வருடங்களுக்கு முன்னால் கொடுத்த ஒரு பேட்டியின் போது சொன்னது:

"கே.பாலசந்தர், ஒரு ஸ்கூல் மாதிரி, நாங்கெல்லாம் அவர் கிட்ட படிச்ச பிள்ளைங்க மாதிரி! அவர் கிட்ட படம் பண்ணும்போது, அவர் நினைக்கற எக்ஸ்ப்ரஷன்ஸை என் முகத்துல கொண்டு வர்றது அவருக்கு பெரிய போராட்டம்தான். ரொம்ப நேரம் முயற்சி செஞ்சு கடுப்பாயிட்டு ஒரேயொரு வரிதான் சொல்லுவாரு "இந்த ஷாட்டை மட்டும் நாகேஷ் பண்ணிருந்தான்னா, ஒரே டேக்ல முடிஞ்சுருக்கும்".

சிவாஜி கணேசன், எம்.ஜி.ராமச்சந்திரன் என்றிரு மலைகளுக்கு முன்னால், நாகேஷ் என்றொரு மிகச்சிறந்த நடிகரின் முக்கியத்துவம் பாதி பேருக்கு புரியாமலே போனது என்று சொன்னால் அது மிகையாகாது! தருமி இல்லாமல் ஒரு திருவிளையாடல் இருக்க முடியுமா?! நாகேஷ், பெரிய குடும்பத்தை சேர்ந்தவர் என்றெல்லாம் சொல்ல முடியாது! "பெரியாளா ஆகிட்டுதான் வருவேன்" என்று சொல்லி, வீட்டை விட்டு இளம்பருவத்தில் வெளியேறினார். "வெற்றி வேண்டுமா, போட்டுப் பாரடா எதிர் நீச்சல்" என்று வாழ்க்கையில் எதிர்நீச்சல் அடித்துக் கொண்டேதான் முன்னேறினார், வெற்றியும் பெற்றார். ஆரம்பத்தில் என்னவோ, ஆங்கில நடிகர் ஜெர்ரி ல்யூவிஸ்ஸை தன் இன்ஸ்பிரேஷனாக வைத்துக் கொண்டார் என்பது உண்மைதான்! ஆனால், வெகு சீக்கிரத்திலேயே, தனக்கென்று ஒரு ஸ்டைலை உருவாக்கிக் கொண்டார் – "அதுதான் நாகேஷ்" என்று மற்றவர் சொல்லும் அளவிற்கு!

நாகேஷுக்கும் சரி, கே.பாலசந்தருக்கும் சரி, சர்வர் சுந்தரம் திரைப்படம் பெரும் திருப்புமுனையாக அமைந்தது. "நாடகக் கலைஞர்" என்றிருந்த நாகேஷ் சினிமா நடிகராக பிரபலமானார். அக்காலத்தில், நாகேஷின் அருமையை அறிந்திருந்தவர்கள் இரண்டு இயக்குனர்கள்தான். பெரிய ஹீரோக்களை தேடிக்கொண்டு எல்லோரும் செல்ல, ஸ்ரீதரும் கே.பாலசந்தரும் சிறு பட்ஜெட்டில் வெற்றிப் படங்களை வரிசையாகக் கொடுத்தனர். அப்படி வந்த திரைப்படங்களின் பட்டியல் ஒன்றை திரட்டினால், அவை அனைத்திலும் நாகேஷுக்கு ஒரு பெரும் பங்கு கண்டிப்பாக இருக்கும்!

நாகேஷை ஒரு நகைச்சுவை நடிகர் என்றே பலர் சொல்கின்றார்கள்! காதலிக்க நேரமில்ல திரைப்படத்தில், சினிமா எடுக்கப் போகின்றேன் தன் தந்தையை சோதிப்பதாகட்டும், கலாட்டா கல்யாணத்தில் சிவாஜியுடன் சேர்ந்து லூட்டி அடிப்பதாகட்டும், கல்லையும் சிரிக்க வைத்தவர் நாகேஷ். எத்தனை எடுத்துக்காட்டுகளை தருவது – பாமா விஜயம், அனுபவி ராஜா அனுபவி என்று சொல்லிக்கொண்டே போகலாம்! மனிதர் ஓரிரண்டு படத்தில் நடித்திருந்தால் பரவாயில்லை, ஒராயிரம் படங்களுக்கு மேல் நடித்திருக்கின்றார்! ஆனால், இதனால் அவர் வெறும் நகைச்சுவை நடிகராகிவிட முடியுமா!

"மாது வந்துருக்கேன்" – ஒரு மந்திர வாக்கியத்தால் அனைவரையும் மெய் சிலிர்க்க வைத்த திரைப்படம் எதிர் நீச்சல். மேஜர் சுந்தரராஜனுடன் சேர்ந்து அனைவரையும் தாரை தாரையாக கண்ணீர் வடிக்க வைத்தார் நாகேஷ். "கல்யாண சாப்பாடு போடவா" என்று பாடிக் கொண்டே, மேஜர் சந்திரகாந்த்தில், அண்ணன் தங்கை பாசத்தின் உச்சத்தை உணர்த்தினார். தாமரை நெஞ்சத்தில் நாயகியை ஒரு தலையாய்க் காதலிக்கும் பாத்திரத்தில் கலக்கினார். பாலசந்தர், தனது மிகச்சிறந்த படமாக கருதும் ‘புன்னகை’யில், நெறி தவரும் தன் நண்பர்களிடமும், நாயகன் சத்யாவிடமும் பந்தாடப் படும் பட்டம் போல் ஒரு கதாபாத்திரம். தன் மாமியாரை எதிர்த்து பூவா-தலையா விளையாடும் வண்டிக்காரன் பாத்திரம்! எந்த நகைச்சுவை நடிகர் இதையெல்லாம் செய்திருக்கின்றார்!

எத்தனை அவதாரங்கள், எத்தனை விதமான கதாபாத்திரங்கள்! அப்பப்பா!! ‘அபூர்வ ராகங்கள்’ – இன்னும் ஒரு கே.பாலசந்தர் திரைப்படம்! நாகேஷ் ஒரு மருத்துவர்!! தனக்கு குடிப்பழக்கம் இருக்கின்றது என்று வெளியே தெரிந்துவிடக் கூடாது என்ற நினைப்பில், இல்லாத ஒரு தம்பியை உருவாக்கி, தம்பி தினம் மது அருந்துவது போல செட்-அப் செய்திருப்பார். சுவற்றில் தெரியும் தன்னுடைய பிம்பத்தைப் பார்த்து, "சீர்ஸ்" சொல்லி க்ளாஸை உடைக்கும் அழகு இருக்கின்றதே – அதுவன்றோ ஸ்டைல்!

ஸ்டைல் என்று குறிப்பிடுகையில் நாகேஷின் ஆட்டத்திறமை ஞாபகத்திற்கு வருகின்றது. அவ்வளவு அழகாக ‘ப்ரேக் டான்ஸ்’ ஆடுவார். சர்வர் சுந்தரம், நீர்க்குமிழி திரைப்படங்களே சாட்சி. ஆனால், அதிலும் ‘டைவர்ஸிடி’ உண்டு. "அவளுக்கு என்ன" என்று மேற்கத்திய நடனத்தை ஒரு வலம் வந்தாலும், எதிர் நீச்சல் திரைப்படத்தில் ஒரு அற்புதமான கிராமிய நடனம் ‘என்னம்மா பொன்னம்மா பக்கம் வாமா’! எதிர்நீச்சல் திரைப்படத்தின் இசையமைப்பாளர் என்னவோ வி.குமார்தான், ஆனால் அந்தப் பாட்டிற்கு இசையமைத்தவர் மெல்லிசை மன்னர். ஒரு வேளை நாகேஷின் நடனத்துக்கெனெவே அமைத்த விசேஷமான மெட்டோ அது?

எத்தனையோ வருடங்களுக்குப் பிறகு நாகேஷின் ஆட்டத்தைப் பார்ப்பதில் கண்களுக்கு குளிர்ச்சி ஏற்பட்டது நம்மவர் திரைப்படத்தில். அந்த திரைப்பத்திற்கு பிறகு வருவோம்!

சிவாஜி ஆகட்டும், கமல் ஆகட்டும் – இமோஷனல் காட்சிகளில் ‘ஓவர்-ஆக்டிங்’ செய்கிறார்கள் என்ற குற்றச்சாட்டு எப்பொழுதும் உண்டு. அதுபோன்ற எத்தனையோ இமோஷனல் காட்சிகளில் நாகேஷ் நடித்துவிட்டார். ஒரு காட்சியிலாவது அது போன்ற ‘ஓவர்-ஆக்டிங்’ இருக்க வேண்டுமே – ஹும்! வாய்ப்பே இல்லை! அதுதான் நாகேஷ்!

எண்பதுகளில் திடீரென்று ஒரு நேரம் – நாகேஷுக்கு திரைப்படங்களில் நடிக்க அவ்வளவாக வாய்ப்புகள் வரவில்லை. அப்பொழுதுதான் கமல்ஹாசன் அவரை தன் படத்தில் நடிக்க வைத்தார் – நாகேஷ் அதுவரை நடித்திராத ஒரு கதாபாத்திரத்தில் – வில்லன் வேடத்தில்! திரைப்படம் – அபூர்வ சகோதரர்கள்! சில வருடங்களுக்கு நம்மை வயிறு குலுங்க சிரிக்க வைத்த மனிதரா, இப்பொழுது தயவு தாட்சண்யம் இல்லாது சேதுபதியை கொலை செய்கிறார்! பிரமிப்பு! இன்னும் எத்தனை முகங்கள் நாகேஷுக்கு!!

மீண்டும் கமல்ஹாசனின் சொந்தத் தயாரிப்பு! இன்னும் ஒரு விசித்திரமான பாத்திரம்! யாராலும் அவ்வளவு சுலபமாக செய்ய முடியாத காரியம்! இம்முறை நாகேஷ் கலக்கிய வேடம் – உயிரற்ற பிணம்! படம் மகளிர் மட்டும்! சவம் போல் நடிப்பதில் என்ன இருக்கின்றது என்று நீங்கள் ஆச்சரியப்பட்டால் திரைப்படத்தைப் பாருங்கள், புரியும்!!

மீண்டும் காமெடிக்காக மட்டும் நாகேஷை மற்றவர் உபயோகிப்பது கமலுக்கு பொறுக்கவில்லை! நம்மவர் திரைப்படத்தின் கடைசி பதினைந்து நிமிடங்கள் – ஹப்பா!! நாகேஷால் மட்டுமே அதெல்லாம் செய்ய முடியும்! அத்தனை பாவம், அத்தனை உணர்ச்சி, அத்தனை உருக்கம்!! கமல்ஹாசன், நாகேஷைப் பார்த்து பொறாமை படுவது ஞாயமே!

ஒரு கட்டத்தில் கமல்ஹாசன் திரைப்படம் என்றால், நாகேஷ் இருப்பது கட்டாயம் ஆனது. அவ்வை ஷண்முகி, பஞ்ச தந்திரம், ஏன், சமீபத்தில் வெளிவந்த தசாவதாரத்தில் கூட நாகேஷ் உண்டு! மேடை விழாக்கள் என்றால், கமல்ஹாசன் நாகேஷின் சிறப்பை மீண்டும் மீண்டும் எடுத்துச் சொல்வார்!

நகைச்சுவைக்கு ஒரு இலக்கணம் வகுத்தவர் நாகேஷ். அதே சமயம், குணசித்ர கதாபாத்திரங்களிலும் கலக்கியிருக்கிறார். "நீர்க்குமிழி" எனும் திரைப்படத்தில் சேது என்ற கதாபாத்திரத்தின் மூலம் நாகேஷ் சொல்லிய கருத்து:

"பிறந்தோம் என்பதே முகவுரையாம்
பேசினோம் என்பதே தாய்மொழியாம்
மறந்தோம் என்பதே நித்திரையாம்
மரணம் என்பதே முடிவுரையாம்!"

இதெல்லாம் சாதாரண மனிதர்களுக்குத்தான் பொருந்தும்! நாகேஷுக்கு அன்று! சில மனிதர்களின் வாழ்க்கையில் முடிவுரை என்ற ஒன்று கிடையவே கிடையாது – நாகேஷைப் போல! மக்கள் மனதில் என்றென்றும் வாழப்போகும் அவரை மறக்க வைக்க மரணத்தாலும் முடியாது.

About The Author

8 Comments

  1. chitra

    மிகவும் அருமையான கட்டுரை.அவரை முழுமையாக உணர்ந்து எழுதிய எழுத்துக்கள்.வெளியிட்ட நிலாவிற்கு நன்றி. நாகேஷ் சரியான முறையில் அடையாளம் காணப்படவில்லை என்பது வருத்ததிற்குரியது. இந்த கட்டுரை அதை தீர்த்ததற்கு நன்றி

  2. Badri Narayanan.A.M

    நாகேஷ், நமை விட்டு பிரிந்த செய்தியை கேள்விப் பட்டதும் இருக்கின்ற இடமொ, சூழ்நிலையோ நினைவிலில்லை. ஒரு சுற்று வந்தது உணர்ச்சி குவியல்களின் நடிப்பின் கலஞ்சியமான நாகேஷ் அவர்களின் நினைவுகள் மட்டுமே.

    -தவப்புதல்வன்.

  3. எல்.கே.மதி நிற்றை செல்வன்

    எத்தனை முகங்கள் நாகேஷுக்கு? என்ற திரு நரேன் அவர்களின் கட்டுரை, நாகேஷைப்பற்றி எல்லா குணசித்திர வேடங்களிலும், வெளுத்து வாங்கியவர் என்பதை வெகு விளக்கமாக எடுத்துரைத்துள்ளார். எனது பாராட்டுக்கள்!

    நீர்க்குமிழி” என்பது நீர்க்குமுழி என்றும், கடைசி பத்தியில் “பொருந்தும்” என்பது பொறுந்தும் என்றிருப்பதை திருத்தி வாசிக்க வேண்டுகிறேன். நன்றி.”

  4. Panneer Selvam

    கட்டுரை சுருக்கமாகவும் அருமையாகவும் இருந்தது. பழய படங்களை நினைவூட்டுவதாக அமைந்துள்ளது

    பன்னீர் செல்வம்

  5. gayathri

    இது மிகவும் அர்புதமான கட்டுரை திரு நாகெஷ் அவர்கலை மரக முடியாமல் செய்துவிட்டது.

  6. Muthukumar

    யாராலும் மரக்க இயலாத ஒரு பழமை வாஇந்த மனிதர்.. அவரின் பிரிவு அவர் குடும்பதிர்கும் ரசிகர்கலுக்கும், திரை கலைஞர்கலுக்கும் ஒரு பெரிய இழப்பு என்ட்ரு சொன்னால் அது மிகையாகாது.. என்ட்ரும் அன்புடன் முத்து குமார்

  7. Mahadevi

    Superb write up by Mr.Naren. Hats off Mr.Naren for your wonderful text.

    Really, in a single page, he has given all the outcomes of Mr.Nagesh, who still lives in all Tamil hearts.

    Let Lord Almighty give strength & peace to the persons who suffer towards the loss of Mr.Nagesh.

Comments are closed.