திருக்குறள் வாய்மையதிகாரத்தின் முதலிரு பாக்கள்:
வாய்மை எனப்படுவது யாதெனின் யாதொன்றும்
தீமை யிலாத சொலல்.
பொய்ம்மையும் வாய்மை யிடத்த புரைதீர்ந்த
நன்மை பயக்கு மெனின்.
பொருள்:
1. வாய்மை என்பது எது என்றால் எந்த விதத் தீமையுந் தராத சொற்களைச் சொல்லுதல்.
2. பொய்யையும் வாய்மையாகக் கொள்ளலாம், குற்றமில்லாத நன்மையை அது கொடுக்குமானால்.
மேலோட்டமாக வாசித்தால் இரண்டுக்கும் அதிக வேறுபாடு இல்லாததுபோல் தோன்றலாம். தீமையில்லாதது (1), நன்மை தருவது (2) இரண்டும் கிட்டத்தட்ட ஒன்றுதானே என்ற வினா எழலாம்.
ஆனால் ஒரு பெரிய வேறுபாடு இருக்கிறது.வாய்மை – தீமை தராமலிருந்தால் போதும், நன்மை புரியவேண்டும் என்ற அவசியமில்லை.
பொய்மை – நன்மையளித்தல் கட்டாயம். அதுவும் சாதாரண நன்மையல்ல, புரை தீர்ந்த நன்மை.
அதென்ன புரை தீர்ந்த நன்மை?
எந்த நன்மை நமக்குச் சாதகமாக அமையாமல் முழுக்க முழுக்கப் பிறர்க்குப் பலன் நல்குகிறதோ, அதுவே புரை தீர்ந்த நன்மை என்று காலஞ்சென்ற அறிஞர் குன்றக்குடி அடிகளார் விளக்கியிருக்கிறார்.
எதற்காகப் பொய் சொல்கிறோம்? நம் குற்றத்தை மறைக்க, தண்டனையிலிருந்து தப்ப, ஆதாயத்துக்காக, காரியசித்தியடைய, மற்றவரை ஏமாற்றிப் பிழைக்க, விளையாட்டுக்காக என்று எத்தனையோ காரணங்கள். எல்லாமே தன்னல நோக்கங் கொண்டவை. இவ்வாறு நமக்கு உண்டாகிற நன்மை புரையுடைய நன்மை.
புரை தீர்ந்த நன்மைக்கு இரு காட்டுகள்:
1. ஒருவன் மூச்சிரைக்க ஓடிவந்து சந்தொன்றில் நுழைந்து மறைகிறான். அரிவாளை ஓங்கியபடி துரத்திய வேறொருவன், ‘எந்தப் பக்கம் ஓடினான்?’ என்று கேட்கையில், நீங்கள் வேறு தெருவைச் சுட்டிக் காட்டி, ‘இந்தப் பக்கம்’ என்று சொல்வது புரை தீர்ந்த நன்மை தரும் பொய். இந்தப் பொய்யால் உங்களுக்குச் சிறிதும் நன்மையில்லை, ஆனால் யாரோ ஒருவன் உயிர் பிழைக்கிறான்.
2. நோயாளியின் வீட்டுக்கு அழைக்கப்பட்ட டாக்டர் அவரைப் பரிசோதித்து, மூன்று நாளுக்கு மேல் தாங்காது என்பதைப் புரிந்துகொள்கிறார்.
”நான் பிழைப்பேனா, டாக்டர்?” என்ற ஆசை ததும்பும் கேள்விக்கு, ”ஊகூம், மூன்று நாள்தான் கெடு” என்று மெய்யைச் சொன்னால் அக்கணமே சாவு நேரலாம். ”சாதாரண நோய்தான், பிழைத்துக்கொள்வது நிச்சயம். மருந்து தருகிறேன், சரியாகிவிடும்” என்று பொய் சொல்வதால் டாக்டர் அடையும் நன்மை ஒன்றுமில்லை. பிணியாளியோ, நம்பிக்கையுந் தெம்பும் நிறையப் பெற்றுக் குறைந்தது மூன்று நாள் வாழ்வார்.
இத்தகைய பொய்களே வாய்மையாகக் கருதப்படும்.
my impressed portion of what we think and how is to b e made. .The teacher at my classes instruction is now in clear understanding now thanks a lot. vasu..