உங்க வயசு என்னம்மா?”
“எம்பளது” 80 என்பதைத்தான் அப்படிச் சொல்கிறார் என்று புரிந்தது.
“அப்ப உலக யுத்தம் பத்தி கேள்விப்பட்டிருப்பீங்க”
“எம்டன் குண்டு போட்டப்ப பட்டணத்துலதான் தம்பி நான் இருந்தேன்.. ஊரைக் காலி பண்ணிட்டு ஓடினோம்..புழைச்சாப் போதும்னு”
“சுதந்திரம் கிடைச்சப்ப எப்படி உணர்ந்தீங்க”
“காந்தி மவராசரு பாடுபட்டு ரெத்தம் சிந்தி வாங்கியதாச்சே.. எத்தினி பேரு போராடி.. உசுரைக் கொடுத்து விடுதலை வாங்கினாங்க.. ஆடுவோமே.. பள்ளு பாடுவோமே” பாடும்போது குரல் நடுங்கினாலும் முகத்தில் பிரகாசம்!
“பாரதி பாட்டுன்னா ரொம்பப் பிடிக்குமா?”
“மொத மொதல்ல ஜாதி வித்தியாசம் இல்லாம மனுஷனை மனுஷனா மதிச்ச மகாகவியாச்சே”
“இவ்வளவு தெரிஞ்சு வச்சிருக்கீங்க.. ஆச்சர்யமா இருக்கே”
“ஏன் தம்பி ஆச்சர்யப்படுறீங்க. பொட்டைப் புள்ளைங்க படிப்பறிவு இல்லாம நிக்கணும்னு நினைச்ச காலம் மலையேறிப்போச்சு. இப்ப ஆம்பளைக்கு சமமா பெண்களும் வரணும்னு பிரியப்படற மனுஷங்க அதிகமாயிட்டாங்களே”
“எப்ப உங்களுக்கு கல்யாணம் ஆச்சு”
“பதினஞ்சு வயசுல புருஷன் வீட்டுக்குப் போனேன்பா”
“எத்தினி புள்ளைங்க உங்களுக்கு”
“மூணு பெத்தேன்.. எல்லாம் பூமிக்குள்ளே போயிருச்சு”
“ப்ச்.. கேட்கவே கஷ்டமா இருக்கு”
“அவரும் சிறு வயசுலயே போயிட்டாரு”
அடுத்த கேள்வி கேட்க நாக்கு எழும்பவில்லை உடனே.
“புகுந்த வீட்டுல அவரு கூடப் பொறந்தவங்க எல்லாம் சின்னதுங்க.. என் மாமியாளுக்கு துணையா நானும் நின்னு அதுங்களை வளர்த்து ஆளாக்கினேன்”
“வேற கல்யாணம் கட்டிக்க..” முழுக் கேள்வி கேட்க மனசு வரவில்லை.
“அந்தக் காலம் வேற தம்பி.. நா(ள்)பூரா ஒழைப்புத்தான்.. சலிக்காம வேலை.. எல்லாரையும் வளர்த்து.. கட்டிக் கொடுத்து.. பிரசவம் பார்த்து.. டேயப்பா.. படம் எடுத்தா.. இப்ப நீங்க பொட்டியில பார்க்கறீங்களே.. வாரம் முச்சூடும்.. அழுதுகிட்டே.. அந்த மாதிரி இருக்கும்”
பாட்டிக்கு நகைச்சுவை உணர்வு அதிகம்தான்!
நிதானமாய்க் கேட்டேன்.
“பாட்டி.. எப்பவாச்சும் ச்சீ.. என்னடா வாழ்க்கைன்னு தோணியிருக்கா?”
அதைவிட நிதானமாய்ச் சொன்னார்.
“நாம.. நம்ம சுகம்னு எம்மனசுல எப்பவும் நினைச்சதில்ல அப்பு.. கண்ணெதிர்ல எம்புருஷன் குடும்பம் வளர்ந்து ஆளானதைப் பார்த்த சந்தோஷம் இருக்கே.. என் காலைச் சுத்தி இப்பவும் அந்த உறவு நிக்கிதே.. என் கண்ணசைப்புல என் மனசைப் புரிஞ்சுக்குதே.. அது போதும் தம்பி.. நான் பொறந்ததற்கு அர்த்தம் கிடைச்சாச்சு”
அவர் முகம் அந்த நிமிடம் இன்னும் கூடுதலாய் பிரகாசித்தது அப்போது.
“
மனதை தொட்டது. கதை மிகவும் நன்றாக இருக்கிறது