"கெளரவத் தொடர்!" இதுதான் இப்போது நடந்து முடிந்த இந்தியா – இங்கிலாந்து இடையேயான தொடருக்கு ஊடகங்கள் வைத்த பெயர். தொடர் நிச்சயமாக இந்தியாவுக்குக் கெளரவம் இல்லை. சரி, யாருக்கெல்லாம் நல்லதாக அமைந்தது எனப் பார்ப்போம்.
முதலில், அலிஸ்டர் குக் (Alastar Cook); அடுத்தது ஆண்டர்சன் (Anderson); அப்புறம், டெஸ்ட் போட்டியில் முதன்முதலாகக் களம் இறங்கிய நிக் காம்ப்டன், ஜோ ரூட் (Joe Root) ஆகியோர்.
இவர்களைப் பார்த்தாவது இனி இந்தியக் கிரிக்கெட் வீரர்களும் அணித் தேர்வாளர்களும் பாடம் கற்றுக் கொள்ள வேண்டும்!
இவர்களுள் அலிஸ்டர் குக், ஒருநாள் போட்டியிலிருந்து 2010-இல் கழற்றி விடப்பட்டுப் பின், தகுதியை வளர்த்துக் கொண்டதால் மீண்டும் அணியில் இடம்பிடித்திருப்பவர் என்பது குறிப்பிட வேண்டிய ஒன்று!
இந்தியா வரும் முன் இந்த அணி இங்கிலாந்து, இலங்கை ஆகிய அணிகளிடம் மிகவும் மோசமான தோல்விகளைப் பெற்றது. அதற்குக் காரணம், சுழற் பந்து வீச்சை எதிர்கொள்வதில் இருந்த தடுமாற்றம்.
"இந்தத் தடுமாற்றத்தைச் சரி செய்தோம்! விடா முயற்சியால் பல ஆண்டுகளுக்குப் பிறகு இந்திய மண்ணில் தொடர்ச்சியாக இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளோம்! ஆனால், இப்போது இந்த வெற்றியைக் கொண்டாடும் மன நிலையில் நாங்கள் இல்லை. அடுத்த போட்டிக்காக எங்களைத் தயார் செய்து கொள்ள வேண்டும்" என்று மூன்றாவது டெஸ்ட் முடிந்த பின் பேசினார் அலிஸ்டர் குக்.
அடுத்து அண்டர்சன். வேகப்பந்து வீச்சுக்குச் சற்றும் ஒத்துழைக்காத இந்திய ஆடுகளத்தில், நமது அணியினருக்கு அதிர்ச்சி கொடுத்தார்! டெஸ்ட் போட்டிகளில் சச்சினை அதிக முறை ஆட்டமிழக்கச் செய்த பெருமைக்குரியவர். நான்காவது
போட்டியில் முதல் இன்னிங்ஸையும் சேர்த்தால் மொத்தம் 9 முறை!
நிக் காம்ப்டனும் ஜோய் ரூட்டும் தங்களுக்கு வழங்கப்பட்ட வாய்ப்பை மிகச் சரியாகப் பயன்படுத்திக் கொண்டனர். இவர்கள், இங்கிலாந்தின் எதிர்கால நம்பிக்கைக்குப் பக்க பலமாக இருப்பார்கள்.
இனி, ஆட்டத்தைப் பார்ப்போம். முதல் போட்டி அகமதாபாத்தில் நடைபெற்றது. ஆடுகளத்தைச் சுழற்பந்து வீச்சிற்குச் சாதகமாக அமைக்க வேண்டும் என்று பகிரங்க அறிக்கை விட்டுப் பலத்த எதிர்ப்புக்கு ஆளானார் இந்தியக் கேப்டன் தோனி! போட்டியை நடத்தும் நாடுகள், தங்களுக்குச் சாதகமாகக் களங்களை அமைத்துக் கொள்வது ஒன்றும் கிரிக்கெட் உலகுக்குப் புதிதில்லை என்றாலும் அதை எந்தக் கேப்டனும் இப்படி வெளிப்படையாகக் கேட்டதில்லை! எனினும், வழக்கம்போல் சுழற் பந்துகளால் இங்கிலாந்தை வெற்றி கண்டது இந்தியா. நான்காம் நாளே போட்டி முடிந்து விடும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தனி மனிதனாக, பொறுப்பை உணர்ந்து போராடினார் குக்.
இரண்டாவது போட்டி மும்பையில். இங்கும் முன்னது போன்ற ஆடுகளமே. இதில் சுதாரித்த இங்கிலாந்து, மாண்டி பனேசரை அணியில் சேர்த்தது. அதற்கு நல்ல பலனும் கிடைத்தது! இந்திய அணியில், புஜாரா மட்டுமே நிலைத்து ஆடினார். அஸ்வின் கூட அரை சதம் கடந்தார். ஆனால், முன்னணி ஆட்டக்காரர்கள் யாரும் சோபிக்கவில்லை. நான்காம் நாளிலேயே வெற்றியைப் பெற்று தொடரைச் சமன் செய்தது இங்கிலாந்து. மோசமான தோல்விக்குப் பிறகு தனது அணியை வெற்றிக்கு முன் நின்று வழி நடத்தினார் குக். பீட்டர்சன தான் அணிக்கு மீண்டும் அழைக்கப்பட்டதற்கு நியாயம் செய்தார்.
மூன்றாவது போட்டிக் களம் கொல்கத்தா. இங்கும் இந்திய அணியின் சொதப்பல் தொடர்ந்தது. நீண்ட நாட்கள் கழித்து அரை சதம் கடந்த சச்சினை ஆட்டமிழக்கச் செய்தார் ஆண்டர்சன். பின்னர், வழக்கம் போல் சரிவு. குக்கின் நிலைத்த ஆட்டம் இந்திய அணிக்குப் பெரும் சவாலாக அமைந்தது. கடைசியில், அவரேதான் தன் தவறால் ரன் அவுட் ஆனாரே தவிர, கடைசி வரை இந்திய வீரர்களால் அவரை அசைக்க முடியவில்லை! இதுதான் அவரது டெஸ்ட் போட்டி வாழ்க்கையில் முதல் ரன் அவுட்! சற்றும் போராடாமல், ஐந்தாம் நாள் காலையில் சரணடைந்தது இந்தியா. அவர்களுக்கு மேலும் ஒரு வெற்றி! கிட்டத்தட்ட பத்து ஆண்டுகளுக்குப் பிறகு, தொடர்ச்சியாக இரண்டு தோல்விகளைச் சந்தித்தது இந்தியா.
இந்நிலையில், பி.சி.சி.ஐ (B.C.C.I) தலைவர் ஸ்ரீநிவாசனின் செல்வாக்கால்தான் தோனி இன்னும் கேப்டனாக நீடிக்கிறார் என்று தேர்வுக்குழு உறுப்பினர் அமர்நாத் வெளியிட்ட செய்தி பரபரப்பை ஏற்படுத்தியது.
தொடரில் இங்கிலாந்து முன்னிலை வகித்த இச்சூழலில், நான்காவது போட்டியில் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் இருந்தது இந்தியா. அதற்காகச் சில தந்திரங்களையும் கையாண்டது!. பந்து அவ்வளவாக மேலெழும்பாதவாறு ஆடுகளம் தயார் செய்யப்பட்டது. ஆனால் விதிவசமாக, டாஸ் இங்கிலாந்துக்குச் சாதகமாக அமைந்தது. ஆனால், இங்கிலாந்தோ விரைவாகவே தொடக்க ஆட்டக்காரர்களை இழந்தது. ஆனாலும், ட்ராட் (Jonathan Trot) பீட்டர்சன் ஆகியோர் அணியின் ஸ்கோரை மெதுவாக உயர்த்தினர். முதல் இன்னிங்ஸில் முக்கியமாகக் குறிப்பிடப்பட வேண்டியவர் இங்கிலாந்தின் ஜோய் ரூட். பெயருக்கேற்ப மைதானத்தில் – அதுவும் மகா மட்டமான – மைதானத்தில் வேர்பிடித்து நின்றார். இத்தனைக்கும் இது அவருக்கு முதலாவது போட்டி. மிகவும் பொறுமையாகப் பந்துகளை எதிர்கொண்டார். இங்கிலாந்து, குறிப்பிடும் அளவுக்கு ஸ்கோரை எட்ட இவரது ஆட்டம் மிகவும் உதவியது.
முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய இந்திய அணிக்கு முதலிலேயே ஆட்டம் காட்டினார் ஆண்டர்சன். நான்கு விக்கெட்டுகளை அடுத்தடுத்து இழந்த இந்தியா கோக்லி, தோனியின் ஆட்டத்தால் மீண்டது. கோக்லி பொறுப்பாக ஆடினார். தோனி தனது பதவியைத் தக்க வைத்துக் கொள்ளப் போராடினார்.
மூன்றாம் நாளில், காலில் ஏற்பட்ட காயம் காரணமாக ஆண்டர்சன் 15 ஓவர்கள் மட்டுமே வீசினார். இதுதான் இந்திய அணிக்குச் சாதகமாக அமைந்தது. ஒரு வழியாக முதல் இன்னிங்ஸை டிக்ளேர் செய்தது இந்தியா. இங்கிலாந்தை விரைவாக ஆட்டம் காண வைத்து, போட்டியிலும் வென்று தொடரைச் சமனாவது செய்யலாம் என்ற தோனியின் நினைப்பைத் திராட்டும் இயான் பெல்லும் சிதறடித்தனர். தங்கள் அணி 100 ரன்களுக்குள் மூன்று விக்கெட்டுகளை இழந்தாலும், இவர்கள் நிலைத்து நின்றனர். திராட் சதம் கண்டார்.
போட்டி டிராவில் முடிந்தது. உலகத்திலேயே இப்படி ஒரு மகா மட்டமான ஆடுகளத்தில் இதுவரை டெஸ்ட் போட்டி நடந்திருக்க வாய்ப்பில்லை. அவர்களின் போராடும் குணத்தைப் பார்த்தாவது நம் வீரர்கள் போராடியிருக்க வேண்டும். ஆனால் இல்லை. இந்தியா மட்டும் இப்படி ஒரு வெளிநாட்டுத் தொடரில் முதல் போட்டியில் தோற்றால் அவ்வளவுதான், மொத்தமாகத் தொடரைக் கோட்டை விட்டுத்தான் நாடு திரும்புவார்கள். இதற்கு அண்மையில் நடந்த தொடர்களே சாட்சி! கேப்டனை மாற்றுவது இந்திய அணிக்கு நல்லது. தேர்வுக்குழு திறமையானவர்களுக்கு வாய்ப்பு வழங்க வேண்டும். இனிமேலாவது பழம்பெருமை பேசாமல் ஒழுங்காக விளையாடுவது எதிர்காலத்துக்கு நல்லது.
இந்தத் தொடரில் ஒரே ஒரு நன்மை, புஜாரா எனும் வீரர் ஒருவர் அணிக்குக் கிடைத்துள்ளார். இவராவது ஐ.பி.எல் மோகத்தில் சிக்கிக் கொள்ளாமல் இருக்க வேண்டும்.
பல ஆண்டுகளுக்குப் பிறகு, இந்திய அணியைத் தாய்மண்ணில் வீழ்த்தியிருக்கிறது இங்கிலாந்து. அந்த வகையில், இந்தத் தொடர் இங்கிலாந்து அணிக்கு மிகப் பெரும் கெளரவம்தான்!