இந்தியன் ஸ்வீட்டி

தேவையான பொருட்கள்:

பச்சரிசி – ½ கிலோ
சர்க்கரை – 1 கிலோ
எண்ணெய் – 1 கிலோ
ஏலக்காய் – 10
பால் – 1 மேசைக்கரண்டி
தேங்காய்ப்பூ கலர் துருவல் – சிறிது

செய்முறை:

பச்சரிசியை நன்கு சுத்தம் செய்து ஒரு மணி நேரம் தண்ணீரில் ஊற வைக்க வேண்டும். பின்னர், நிழலில் காய வைத்து அரவையகத்தில் (மாவு மில்) கொடுத்து அரைத்து, மாவை நன்கு சலித்து வைத்துக் கொள்ள வேண்டும். பிறகு, சலித்த மாவு ஒரு கோப்பை (200 கிராம்) எடுத்து, 400 மில்லி தண்ணீரைச் சுட வைத்து அதனுடன் கலக்க வேண்டும். முதன் முதலில் பலகாரம் செய்யப் பழகுபவர்கள் இம்முறையில் செய்யலாம். பலமுறை அடுப்படியில் பழகியவர்கள் மொத்தமாக மாவை வெந்நீரில் கலந்து கொள்ளலாம். பருப்பு மத்தின் பின்புறத்தை வைத்து மாவை நன்றாகக் கலக்கி மொத்தமாக உருண்டையாக்கிக் கொள்ள வேண்டும். பின், சிறு சிறு உருண்டைகளாகப் பிடித்து வைத்துக் கொண்டு, பூரி மனையில் வைத்து நன்றாகத் தட்டையாக உருட்டிக் கொள்ளுங்கள். நடுவில் ஓர் ஓட்டையும் போட்டுக் கொள்ளுங்கள். பின்னர், தட்டையாக உருட்டிய மாவை ஐந்து ஐந்தாகக் கொதிக்கும் எண்ணெயில் போட்டு, லேசாகச் சிவந்தவுடன் எடுத்துவிட வேண்டும்.

பிறகு, வேறொரு பாத்திரத்தில் சர்க்கரையைத் தண்ணீர் ஊற்றிக் காய்ச்ச வேண்டும். காய்ச்சும்போதே பால் ஊற்றி அழுக்கை எடுத்து விடுங்கள்.

இரட்டைக் கம்பிப் பாகு வந்தவுடன் தட்டையாகச் செய்து வைத்ததை அந்தப் பாகில் போட வேண்டும். 10 நிமிடம் ஊறிய பின் தட்டில் எடுத்து அடுக்க வேண்டியதுதான். மேலே தேங்காய்ப்பூத் துருவல் போட்டு அலங்கரிக்கலாம்.

 இந்தியன் ஸ்வீட்டி தயார்! சுவைத்துப் பார்த்து, மறவாமல் உங்கள் அனுபவத்தை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்!

About The Author