எனக்குத் தெரியும்
என்றாலும்
எதிர்மாடித் தமிழனைக் கேட்டேன்,
எப்போது வரும் தமிழ்ப் புத்தாண்டு?
‘எப்போதும்
தமிழ்ப் புத்தாண்டு
ஏப்ரலில்
தப்பாது வரும்’ என்றான்!
‘கண்ணீர் வடிக்கும்
சித்திரையாளுக்குக் கைகுட்டை
கொண்டுபோ’ என்றேன்.
‘எங்கும்
இன்பத் தமிழ் ஒலிக்க வேண்டும்’
ஏமாற்றமா?
இல்லவே இல்லை என் ஆசைக்கு!
காதாரத்
தமிழ்ப் பேச்சைக் கேட்கிறேன்
கல்லறைகளிலிருந்து!
மறைமலை, திரு.வி.க.,
பாரதிதாசன், பாவணர்
தனித் தமிழில்
இனிக்க உரையாடுகிறார்களே…
கேட்கலையா உங்கள் செவிகள்?
ஆனாலும்
ஆவலினால் அன்றைய
தொல்காப்பியன் திரும்பி வந்தான்.
மழலையர் பள்ளியில்
ஆங்கிலம் படித்தான்
அதிலே தவறி ஐந்தாம் வகுப்பிலேயே
கல்வியை முடித்தான்.
ஆர்வத்தால்
வள்ளுவனும் திரும்பி வந்தான்.
தமிழில் படிக்க
வாய்ப்பில்லாக் காரணத்தால்
கதைகள்
அவனுக்குப் போட்டு வைத்திருந்த
தறிக் குழியில் போய் விழுந்தான்.
இங்கு
தமிழ் நாடு
சரியில்லை என்பதனால்
பள்ளிகளில் அயல் நாட்டைப்
பயிரிடுகிறோம்!
பெற்ற பிள்ளைகளையே
மறு பிரசவம்
செய்கின்றோம்
ஆங்கிலப் பிள்ளைகளாய்.
கோவில்களில்
குருக்கள் தொப்பை
தெய்வத்தை மறைக்க,
மந்திரங்கள்
தமிழை மறைக்கும்.
தமிழ்ப்பால் ஊட்டிய
தாய் உமையாள் தன்
மார்புக் கச்சையை இறுக்கிக் கொண்டு,
புட்டியில் வடமொழிப்பால்
புகட்டுகிறாள்!
சம்பந்தன் – தமிழ்ச் சம்பந்தம்
இழந்தான்!
நியாயத்தைப்
பார்க்க மாட்டேன் என்று
கண்களைக்
கட்டிக் கொண்ட நம்
நீதி தேவதை
காதுகளையும் கட்டிக் கொண்டாள்!
தமிழ் கேட்க மாட்டாளாம்.
தமிழுக்குச்
சவப் பெட்டியா இந்தத்
தொலைக்காட்சி பெட்டி?
அலைவரிசையெல்லாம்
இந்தியின் கைவரிசை!
தமிழை
விற்ற காசில்
வேறு மொழிப் பெயர்ப்பலகை
கடைத் தெருவில்!
தமிழை விற்றவன்
தகப்பனையும் ஒரு நாள்
மலிவு விலையில் விற்பான்!
தாயை விற்க ஒரு நாள்
தாமதிப்பான்.
இந்தப்
புத்தாண்டில்
சிந்திக்க என்ன உண்டு?
இனிமேல்
தமிழைப் பரப்ப எங்கும் இடம் கிடையாது.
எங்கும் தான் பரப்பி விட்டோமே!
அதனால்
புத்தாண்டில்
புது நாடுகளை உருவாக்கிப்
பூந்தமிழைப் பரப்புவோம் அங்கெல்லாம்!
புது மனிதர்களை உண்டாக்கிப்
புகட்டுவோம் அவர்க்கெல்லாம்
செந்தமிழை!