"வேணி, காலைல வாசல் தெளிக்க எந்திரிக்கிறப்ப என்னயும் எழுப்பி விடறியா?"
பரிமாறிக் கொண்டிருந்த வேணி, தம்பியை ஆச்சர்யமாய்ப் பார்த்தாள். குறும்பாயும். "உத்தரவுங்க மஹாராஜா. சமூகத்துல நாளக்கி என்ன விசேஷமோ?"
"இப்ப கிண்டலாத்தானிருக்கும். நாளக்கி இந்நேரத்துக்கு ஐயா காலரத் தூக்கி விட்டுட்டுத்தான் ஒக்காந்திருப்பார். நாளக்கி ஒரு வி.ஐ.ப்பி. கூட லஞ்ச் சாப்புடப் போறேனாக்கும். கோடீஸ்வர வி.ஐ.ப்பி. என்னோட பரம விசிறி. இன்னுங் கொஞ்சம் நெய் விடு. ஓ, ஐ ம் ஸாரி, இது ரசமா! ஒன்னோட நிதானத்தப் பாத்து நெய்யாக்கும்னு நெனச்சிட்டேன்."
‘கிண்டலப்பாரு’ என்று தம்பியின் தலையில் ஒரு ஊமைக் குட்டு வைத்த வேணி, ஒரு பதில்க் கிண்டலில் ஈடுபட்டாள்.
"ஏனுங்க கவிஞர் கம் எழுத்தாளரே, சம்மர் வருதே, ஒங்க கோடீஸ்வர விசிறி கிட்ட சொல்லி ரெண்டு ஸீலிங் ஃபேன் வாங்கிக் கூரையில தொங்க விடப் படாதோ."
சிரிக்காத வேணி. "இந்தக் கவிஞர் கம் எழுத்தாள ரோட மகிமை வெளியுலகத்துக்குத் தெரிய ஆரம்பிச்சிருச்சு. நீயும் அதை விரைவில் உணர்வாய் மிஸ் வேணி, விரைவில் உணர்வாய்."
இவர்களுடைய உரையாடலை அவதானித்துக் கொண்டிருந்த அம்மா, தன் அதிருப்திக்கு சொல் வடிவம் கொடுத்தாள். "என்னடா இது வார்த்தக்கி வார்த்த வேணி வேணின்னுட்டு, ஒன்ன விட மூணு வயசு மூத்தவ, அக்கான்னு அழகாக் கூப்ட்டா என்ன? அவனுக்குத்தான் எட்டல. நீயாவது சொல்லேண்டி"
"நீ அலட்டிக்காதம்மா. அக்கா தம்பி ஒறவுக்கு மேலா நாங்க ஃப்ரண்ஸ். அப்படித்தான் பேசிக்குவோம். எனி அப்ஜெக்ஷன் மிஸ் வேணி?"
"யூ ஆர் அப்ஸல்யூட்லி ரைட் ஃப்ரண்ட்." வேணி அவனை ஆமோதித்தாள்.
அம்மாவுக்குக் கடுப்பாகி விட்டது.
"எப்படியாவது போங்க. பேரச் சொல்லித்தான் கூப்புடற, வெறும் வேணின்னு கூப்ட்டா என்ன. மிஸ் வேணி என்ன மிஸ் வேணி? இருவத்தெட்டு ஆரம்பிச்சிருச்சு, இன்னும் மிஸ்ஸாத்தான் இருக்கா. எனக்கு பக்கு பக்குன்னுது, நீங்க கேலியும் கிண்டலுமா இருக்கீங்க."
அடுப்பில் பொங்கி வழிகிற பால், ஜ்வாலையாகக் குறைத்ததும் கமுக்கமாய் அமுங்குவதைப்போல, வேணியின் உற்சாகம் தணிந்து போனது. அம்மாவை தீர்க்கமாய்ப் பார்த்தாள்.
"தெரியுதும்மா. கல்யாண வயசு பார் ஆயிருச்சு. இன்னும் எங்களுக்கு பாரமா இருக்கியேடீன்னு சொல்றீங்க."
மகள் சொன்னதைக் கேட்டு அம்மாவுக்குக் கண்கள் கலங்கி விட்டன.
"ஐயையோ, என்னடிம்மா நீ இப்படிப் பேசிட்ட. நாங்க தானம்மா ஒனக்குப் பண்ணி வக்யணும். ஒங்கப்பாவும் அலஞ்சிட்டுத்தான் இருக்கார், நம்ம தகுதிக்கி ஒண்ணும் சரியா அமைய மாட்டேங்குதேம்மா. இன்னிக்கிக் கூட ஆஃபீஸ் விட்டு மாம்பலம் புரோக்கரப் பாத்துட்டு வர்றேன்னுதான் சொல்லிட்டுப் போனார். மணி ஒம்போதாகப் போகுது. எங்க அலஞ்சிட்டிருக்காரோ, எப்ப வர்றாரோ!"
வேணி அம்மாவைப் பின்புறமாய்க் கட்டிக் கொண்டு கன்னத்தோடு கன்னம் பொருத்தினாள்.
"ஸாரிம்மா, அநியாயத்துக்கு ஒங்க மனச நோகப் பண்ணிட்டேன். எனக்கும் இப்பக் கல்யாணம் பண்ணிக்க இன்ட்ரஸ்ட்டே இல்லம்மா. நீயும் அப்பாவும் என்ன வச்சி காப்பாத்துவீங்கன்னு சொல்லுங்க, காலம் பூரா நா ஒங்களோடயே இருந்துருவேன்."
"சீ, என்ன ஔர்ற. அப்படியெல்லாம் இருக்க விட்ருவோமா என்ன!"
"அப்ப, என்ன வச்சுக் காப்பாத்த மாட்டீங்களா?"
"அவங்கள வுடு ஃப்ரண்ட், நா ஒன்னக் காலம்பூராக் காப்பாத்தறேன். நீ மட்டும் கட்சி மாறி வரதட்சணக்கிக் கழுத்த நீட்டிராத. பாரதி கண்ட புதுமைப் பெண்ணா இரு."
"தங்கள் சித்தம் கவிஞர் கம் எழுத்தாளரே."
"சரி, திரும்பவும் ஆரம்பிச்சிட்டீங்களா, டேய் சீக்கிரம் படு. காலைல சீக்கிரம் எழுப்பச் சொன்ன?"
"ஃப்ரண்ட் இரு இரு. நீ எழுதின ஆன்ட்டி வரதட்சணைக் கவிதைய அம்மாக்குக் படிச்சிக் காட்டணும். என்ன பத்திரிகை அது?"
"காலச்சுவடு."
"குமுதம், ஆனந்த விகடன்ல எல்லாம் எழுத மாட்டியா நீ? சரி அத எடுத்துட்டு வாயேன். வரதட்சணை அசிங்கத்தப் பத்தி நறுக் நறுக்னு எழுதியிருக்காம்மா. ரியலி ஸூப்பர்ப்."
"ஆமா. அத நறுக்கி சட்டியில போட்டு பொறிக்க வேண்டியது தா."
"ஐ, இங்க பாத்தியா ஃப்ரண்ட், எங்கம்மாக்குக் கூட எதுகை மோனையெல்லாம் சரளமா வருது, கம்பன் வீட்டுக் கட்டுத்தறியும் கவி பாடும்ங்கற மாதிரி!"
"அதெல்லாமில்லடி, இது சகவாச தோஷம்."
"அம்மா மூட்ல இருக்காங்க ராஜா, அதக் கொண்டா வாசிப்போம்."
"இப்ப ஒண்ணும் நீ வாசிக்க வேண்டாம். அப்பா வர்ற மாதிரியிருக்கு. அவர் எந்த மூட்ல வர்றாரோ. சத்தங்கித்தம் போடாம கம்னு இருங்க."
அப்பா வந்தார். சோர்வாக வந்தார்.
வீடு நிசப்தமானது.
காலையில் ஆறுமணிக்கே வேணி இவனை எழுப்பி விட்டு விட்டாலும், இப்படிப் புரண்டு அப்படிப் புரண்டு, பாதிக்கண்ணைத் திறந்து நோட்டம் பார்த்து, ராத்திரிக் கனவை அசைபோட்டு, சோம்பல் முறித்துப் பள்ளியெழுச்சி நிறைவு பெற ஏழாகி விட்டது.
கண்ணாடியில் தாடையைத் தடவிப் பார்த்துக் கொண்டான்.
‘ஷேவிங் இன்றைக்கு டியூ இல்லைதான். ஆனாலும் பண்ணிக் கொள்ளலாம். பரவாயில்லை. விசிறிக்கு தரிசனந்தர ஸ்மார்ட்டாய்ப் போக வேண்டாமா?’
முந்தா நாள் துவைத்துத் தொங்கப் போட்டிருந்த சட்டையில் மடிப்புகள் திருப்திகரமாயில்லை.
தெருமுனை இஸ்திரி வண்டியில் அயண் பண்ணி வாங்கி வந்தான்.
அவ்வப்போது அம்மாவை அனத்தி வாங்குகிற பாக்கெட் மனியில் ரெண்டு ரூபாய் காலி.
இந்த உபரிச்செலவைச் சரிக்கட்ட இன்றைக்கு அயனா வரத்திலிருந்து அண்ணா நகருக்குப் பாதயாத்திரை தான் மேற்கொள்ள வேண்டும். வேண்டாம். தூய தமிழிலேயே நடக்கலாம்.
வழி நடைப் பயணம்.
பான்ட் இதே போதும். இன்றைக்கு அஞ்சாவது நாள்தான்.
ஏழே முக்காலுக்கு ஆள் ரெடி.
(தொடரும்)