"ABC இஞ்சினீயரிங் காலேஜுக்கு வருவியாப்பா?"
"எம்மாந் தொலை இருக்கு? எவ்ளோ தருவே?"
"மீட்டர் போட மாட்டியாப்பா?"
"மீட்டர் ரிப்பேர் சார்."
"என்னப்பா, இப்பதான் எலெக்ட்டிரானிக் மீட்டர் புதுசாப் போட்டிருக்கீங்க? அதுக்குள்ளே எப்டி ரிப்பேர் ஆவும்?"
"அதெல்லாம் எதுக்கு? 2000 ரூவா கடன் வாங்கி மீட்டர் போட்டதுதான் மிச்சம். எவனோ கமிஷன் அடிச்சுகினான். அதுக்காக மீட்டர் போடச் சொன்னான். அது சரி, எவ்ளோ குடுப்பே சொல்லு, அடிக்கடி போவே இல்லே?"
"நான் எங்கேப்பா அடிக்கடி போறேன்?.. நீயே சொல்லு."
"ஐநூறு ரூவா குடு சார்."
வாயைப் பிளக்கிறார் வாடிக்கையாளர். (வாடிக்கையாளர் என்றே அவருக்கு அடையாளம் கொடுத்து வைப்போம்.)
"என்னப்ப இவ்ளொ ஜாஸ்தி சொல்றே? கொறைச்சுக்கோப்பா!"
"சரி, நீயே சொல்லு,"
தயங்குகிறார். ஈனஸ்வரத்தில் முனகுகிறார். "நானூறு ரூபாய்"
"டேய் இசக்கி, இஞ்சினீயரிங் காலேஜுக்கு.. சார் நானூறு ரூவா தராராம். போறியாடா?"
".. .. .."
"மாரி முத்து, நீ போறியா? இஞ்சினீயரிங் காலேஜ். நானுறு ரூவா.. .."
".. .. .."
"சரி, நீயே சொல்லு, முடிவா சொல்லுப்பா."
"சரி, பாவமாகீது. நானூத்து எம்பது ரூவா குடு.. குந்திக்கோ"
"அட எங்கே சார் இப்படி, பையன் அட்மிஷனுக்கா?..
மெரிட் சீட்டா?"
"நாம எங்கே சார் அவ்வளவு புண்ணியம் பண்ணினோம்? மேனேஜ்மெண்ட் கோட்டாதான்.."
"போகட்டும். என்னவோ அட்மிஷன் கிடச்சா சரி. பையன் அமெரிக்காவிலே வாரிக் கொட்டப் போறானே?.. .. சரி, எப்டி வந்தீங்க?"
‘ஆட்டோவிலேதான்."
"எவ்வளவு கொடுத்தீங்க?"
"அதையேன் வயத்தெரிச்சலைக் கேட்கிறீங்க? 480 ரூவா. இந்த ஆட்டோக்காரன் வெச்சதுதான் இங்கே சட்டமா இருக்கு. போலீஸ்காரனும் கண்டுக்கறதில்லே. கவர்மெண்டும் கண்டுக்கறதில்லே. அடாவடி பண்றாங்க. இவங்களைக் கடவுள்தான் கேட்கணும். சரி, சரி, நேரமாச்சு. நிர்வாகி வீட்டுக்குப் போயிடப் போறார்.."
"வணக்கம் மேடம். கேண்டிடேட் பேரு விஜயன். ஏற்கெனவே பேசியிருக்கேன்."
ஆமாமாம். நிர்வாகி சொல்லிட்டார். பணத்தை வாங்கிண்டு அட்மிஷன் போட்டுக் குடுக்கச் சொல்லிட்டார். பணம் கொண்டு வந்திருக்கீங்களா?
"எஸ் மேடம்." (பெட்டியைச் சுட்டுகிறார்)
"ஏழு லட்சம்?"
"ஆமாம் மேடம். நீங்க ரெகமண்ட் பண்ணி கொஞ்சம் கொறைச்சுக்கச் சொன்னா நன்னாயிருக்கும். நான் சாதாரண மிடில் க்ளாஸ் ஆசாமி.."
"சாரி, சார். நேத்திக்கு உங்களுக்கு வாக்கு கொடுத்துட்டதினாலே ஏழு லட்சம் வாங்கிக்கச் சொன்னார். இன்னிக்கு வரவங்களுக்கெல்லாம் எட்டு லட்சத்துக்கு ஒரு பைசா கொறைக்க முடியாதுன்னு சொல்லியிருக்கார்."
"ப்ளீஸ் மேடம், நீங்க சொன்னா கேட்பார்னு சொல்றாங்க"
அதெல்லாம் இல்லே சார். மிச்ச காலேஜ் பத்தி எல்லாம் விசாரிச்சுப் பாருங்க.. நம்ம காலேஜ் மாதிரி ஹண்டிரட் பெர்செண்ட் ப்ளேஸ்மெண்ட் வேறே எந்த காலேஜிலேயும் கிடையாது. லாஸ்ட் இயர் எங்க டாப் ஸ்டூடெண்ட்டுக்கு ஒரு கோடி ரூபாய் பாக்கெஜ்லே வேலை கிடச்சிருக்கு.. எங்க காலேஜ்லே எக்சலெண்ட் ஸ்டாப், லேப் பெசிலிட்டீஸ் அத்தனையும் இருக்கு. பக்கா டிசிப்ளின். என்ன சொல்றீங்க. அட்மிஷன் போடலாமா? கொஞ்சம் யோசிச்சீங்கன்னா இந்த ஆபர் போயிடும்.."
"அடடா! உடனே அட்மிஷன் கொடுத்துடுங்க.."
ஏழு லட்சம் பெட்டியிலிருந்து கை மாறுகிறது. உடனடியாக ரசீது வருகிறது 45000 ரூபாய்க்கு.
புளகாங்கிதமாக வாடிக்கை வெளியே வருகிறார். கோடி ரூபாய் சம்பளத்துடன் பையன் அமெரிக்காவில் வேலை பார்ப்பதை மானசீகமாகக் கண்டபடியே.
ஆட்டோக்காரர் எதிர்ப்படுகிறார்.. என்னவோ செய்கிறது மனது. பார்வையைத் தாழ்த்திக் கொள்கிறார்.
"என்ன சார், வேலை முடிஞ்சு போச்சா? குந்து சார், எனக்கும் சவாரியே கெடைக்கலே. 400 ரூபாய் கொடு, வீட்டிலே கொண்டு போய் விட்டுடரேன்."
மவுனமாக ஏறி அமர்கிறார்.
“
யதார்த்தம்!