(முன்குறிப்பு : ஜோதிடத்தில் நம்பிக்கை இருந்தால் இதைப் படிக்காதீர்கள்!)
இது ஜாதகத்தில் சுக்கிரன், சந்திரன், லக்னம் ஆகியவற்றிலிருந்து 2, 4, 7, 8, 12 ஆகிய இடங்களில் செவ்வாய் கிரகம் இருந்தால் ஏற்படக்கூடிய செவ்வாய் தோஷம் பற்றியது அல்ல. இதை குஜ தோஷம் என்றும், வட இந்தியர்கள் ‘மாங்லிக்’ தோஷம் என்றும் அழைப்பர். ஆனால் நான் எழுதுவது ‘விண்வெளி இயல் செவ்வாய் தோஷம்’ பற்றிய ஒரு சுவையான விஷயம்.
பையன்கள், பெண்கள் கல்யாண விஷயங்களில் தடைக்கல் போடும் செவ்வாய் கிரகம் இப்போது விண்கலங்களுக்கும் தடை போடத் துவங்கிவிட்டது. இது வானியல் ஆராய்ச்சியாளர்களுக்குப் புரியாத புதிராக உள்ளது. செவ்வாய் கிரக ஆராய்ச்சி துவங்கிய நாள் முதல் இதுவரை 37 விண்கலங்களை விண்ணில் செலுத்தினார்கள். இவைகளில் 23 விண்கலங்கள் புஸ்வாணமாகிவிட்டன. அதாவது செவ்வாயை அடையாமல் தோல்வி கண்டன. ஒவ்வொரு முறையும் எதிர்பாராத புதிய புதிய பிரச்சினைகள் வருகின்றன.
செவ்வாயைச் சுற்றிவரும் இரண்டு சந்திரன்களில் ஒன்றான போபோஸ் சந்திரனை ஆராய நவம்பர் 9 ஆம் தேதி ரஷ்யா ஒரு விண்கலத்தை ஏவியது. புறப்பட்ட உடனே இது கோளாறாகி விழுந்து விட்டது. ஆனால் நவம்பர் மாதக் கடைசியில் அமெரிக்க ‘நாஸா’ அமைப்பு ஏவிய ஒரு கலம் ஒழுங்காகப் புறப்பட்டுவிட்டது. இது செவ்வாய் வரை ஒழுங்காகப் போய்ச் சேருமா, போய்ச் சேர்ந்தாலும் அதில் அனுப்பப்பட்டுள்ள பெரிய சோதனைச் சாலை ஒழுங்காக தரை இறங்கி பணியாற்றுமா என்பதெல்லாம் தெரிய ஏழு மாதங்கள் பொறுத்திருக்க வேண்டும். இப்போது இருக்கும் கவலையில் நாஸா விஞ்ஞானிகள் கூட நம் ஊருக்கு இது பற்றி நாடி ஜோதிடம் கேட்க வந்து விடுவார்கள்!
செவ்வாய் கிரகம் பூமியிலிருந்து மூன்றரைக் கோடி மைல் தொலைவில் உள்ளது. போபோஸ், டெய்மோஸ் என்று இரண்டு சந்திரன்கள் இதைச் சுற்றி வருகின்றன. சூரிய மண்டலத்திலேயே மிகப் பெரிய எரிமலை மற்றும் பள்ளத்தாக்குகள் இங்கு உள்ளன. இங்கே போய்ச்சேர மட்டும் ஆறு மாத காலம் ஆகும். இதுவரை மனிதர்களை அனுப்பும் திட்டம் எதுவும் இல்லை.
ரோமானிய போர் தெய்வத்தின் பேரில் ஆங்கிலத்தில் மார்ஸ் என்று பெயரிட்டார்கள். வானத்தில் செக்கச் செவேலென்று மின்னுவதால் நாம் இதற்கு செவ்வாய் என்று நாமகரணம் செய்தோம். நம் நாட்டிலும் இதைப் போருடன் தொடர்புபடுத்தியும் ஆபரேஷன், இரத்தம் ஆகியவற்றுடன் தொடர்புபடுத்தியும் எழுதுவர். அங்காரகன், மங்களன், குஜன் என்ற பல பெயர்களில் உலவி வரும் செவ்வாய் தனது ரகசியங்களை நமக்கு முழுவதும் வெளியிடுமா என்று பொறுத்திருந்து பார்க்கவேண்டும்.
இதுவரை, அமெரிக்காவும் ரஷ்யாவும் இதை ஆராய 37 விண்கலங்களை ஏவியும் அங்கே தண்ணீர் இருக்கிறதா, உயிரினங்கள் வாழக் கூடிய சூழ்நிலை இருக்குமா என்பதெல்லாம் தெளிவாகத் தெரியவில்லை. செவ்வாய் (க்கு) தோஷம் நீங்க நாமும் பிரார்த்திப்போம்!