அன்று மாப்பிள்ளையோடு பெண்ணையும் ஊர்வலக் காரில் உட்கார்த்தி வைத்திருந்தது புதுமையாக இருந்தது. இதுவரை பார்த்ததில்லை. பெண்ணும் மாப்பிள்ளையும் பேரழகு. இதுபோன்று பெரும்பாலும் அமைவதில்லை. நடுத்தரக் குடும்பத்துக் கல்யாணம் என்று பார்த்தவுடனே தெரிந்தது. சுமாரான நாதஸ்வரம். பெரிய ஆலாபனைக் கெல்லாம் இடங்கொடாமல் சாதுவாக வாசித்துக் கொண்டிருந்தார்கள். ஊர்வலத்தில் தெரிந்த முகங்கள் தென்படுகின்றனவா என்று ஆராய்ந்தான்.
ஒரு கார் எக்குதப்பாக எதிரே வந்து மாட்டிக் கொண்டது. ஆளாளுக்கு அதிகாரம் பண்ணியது வேடிக்கையாக இருந்தது. "ஓரமா நிப்பாட்டுப்பா. ஊர்வலம் வருதுன்னு தெரியுமில்லே."
காதுகளின் இரைச்சல் லேசாக வெளியிலும் கேட்பது மாதிரி தோன்றியது. இம்சைதான். இது தொடர்ந்தால் பெரிய பிரச்சினையாகிவிடுமோ. காதுகளே பயனற்றதாகிவிடுமோ. அப்புறம் உத்யோகம் வாழ்க்கை எல்லாமும் கேள்விக்குறிதான். இறைவா. அய்யனாரப்பா!
ஏழு மணிக்கு வீட்டுக்குள் நுழையும்போதே இவள் கேட்டாள். "கோயிலுக்குப் போகலாமா. ரொம்ப நாளாச்சு" என்றவளை வியப்போடு பார்த்தான். சினிமாவுக்குப் போகனும், பூங்கா போகனும், சொந்த பந்தங்களைப் போய்ப் பார்க்க வேண்டும் என்று நச்சரிக்காதவள், பாவம்.
கோயில் நடை சாத்தும்வரை ஏதேதோ பேசினாள். உப்புசப்பற்ற பேச்சு. எதிர்காலம் பற்றிப் பேச என்ன இருக்கிறது. அது எங்கே இருக்கிறதென்றே தெரியவில்லை. எந்த சாமியாவது ஆகாயத்திலிருந்து வந்து இரண்டு மூட்டை பொற்காசுகளைக் கொட்டினால்தான் உண்டு. கனவுகளில் புதையுண்ட வாழ்க்கை –
மூன்றாம் தெருவில் நுழையும்போதே மூலை விநாயகர் கோயிலிலிருந்து மேள சத்தம் கேட்டது.
செவிகளில் மெல்ல மெல்ல இரைச்சல். அரை மணியில் காதைப் பிளக்கும் பெரும் ரீங்காரம். இதுவென்ன உபத்திரவம்…?
சாயங்காலத்திலிருந்தே லேசாகத் தலைவலி. சாப்பாடு வேண்டாமென்று சொல்லிவிட்டு கட்டிலில் படுத்துக் கொண்டான். லேசாகக் கண்ணயரும்போது – நாதஸ்வர இசை எழுப்பிவிட்டுவிட்டது.
வீட்டைக் கடந்து ஊர்வலம் போனது. ஒரே குதூகலம். பட்டுப்புடவைகளின் பளபளப்பு. பெருமை வழியும் பேச்சுக்கள். மாப்பிள்ளை அசடு வழிய சற்று மிரட்சியோடு காரில் உட்கார்ந்து கொண்டிருந்தான். ஒரு கால் இந்தக் கல்யாணத்தில் சம்மதமில்லையோ. தவில்காரர் விளாசிக் கொண்டிருந்தார். கூட்டம் மகிழ்ச்சிப் பிரவாகத்தில் மிதந்து சென்று கொண்டிருந்தது.
கல்யாணங்கள், திருவிழாக்கள் சடங்குகள் தேவைப் படுகின்றன. உறவுகள் சங்கமிக்கும் தருணங்கள் இங்கேதான் ஏற்படுகின்றன. ஒரு நாளாவது மகிழ்ச்சியை அனுபவிக் கட்டுமே. வீட்டிற்குத் திரும்பினால் புகுந்து சூழ இருக்கிறது ஏகப்பட்ட பிரச்சனைகள்.
வலது காதில் தொடங்கிய இரைச்சல் இடது காதுக்கும் தாவியது. உலகம் சுழல்வது தெளிவாகப் புலப்பட்டது போலிருந்தது.
ஆறு மணி வரை படுக்கையில் புரண்டு கொண்டிருந்து விட்டு கமலம் என்றான் மெல்ல. நீங்களும் தூங்கலையா என்றவாரே தலையை முடிந்து கொண்டாள். உலகமே சந்தோஷப்படுகிறது தற்காலிகமாகவாவது, அதைக் காணாமல் அழுமூஞ்சியாய் இராதே என்று திட்டியது மனசு. அது சரிதான் என்பதைப்போல சுவரின் மேற்பகுதியிலிருந்து ஒரு பல்லி டொக் டொக்கென்று சப்தித்தது.
ரசிக்க வேண்டும்தான். அறிமுகமேயில்லாத அந்த இணைகளை வாழ்த்த வேண்டும்தான். மகிழ்ச்சி ததும்பும் முகங்களிலிருந்து தானும் துளி பெற வேண்டும்தான். வானத்தைக் கிழித்துக் கொண்டு பூக்களாய்ச் சிதறும் மத்தாப்புகளின் அழகை அனுபவிக்க வேண்டும்தான்.
கொஞ்சம் குடிக்க தண்ணி வேணும் என்று ஊர்வலத்திலிருந்து பிரிந்துவந்து கேட்டாள் ஒரு பெண்மணி. ஒரு சொம்பு நீரையும் ஒரே மூச்சில் குடித்துவிட்டு "ரொம்ப நன்றிங்க" என்று மறக்காமல் சொல்லிவிட்டுப் போனாள். எல்லாமே மகிழ்ச்சிதான். எளிய மக்களுக்கான சந்தோஷங்கள் இந்திர லோகத்திலிருந்தா கிடைக்கும். நமக்குள்ளேதான் கொட்டிக் கிடக்கிறது.
சரியாக ஒன்பது மணிக்கெல்லாம் பெரியவன் எழுந்து உட்கார்ந்து அழ ஆரம்பித்துவிட்டான். என்னடா என்னடா… என்று கேட்டபோது இரண்டொரு முனகலோடு சுருண்டு படுத்தான்.
தொலைவில் பிள்ளையார் கோயிலிலிருந்து இவனுக்குப் பிடித்தமான கல்யாண வசந்தம் மென்மையாகக் காற்றில் மிதந்து வந்தது. அலுப்பாக இருந்தது. சங்கீதம்கூட அலுக்குமோ?
காதுகளில் இரைச்சல்…
வீட்டின் தினசரி இயக்கங்களில் பிசிறு தட்டியது –
அன்று வந்த ஊர்வலத்தில் நாட்டியக் குதிரை – மேளத்திற்கு ஏற்ப அழகாக ஆடியது. பிரமாதமாக இருந்தது. வண்ண வண்ண பட்டுத்துணிகள் அலங்காரம். மாலைகள் – கால்களில் சலங்கைகள். லே… எந்திருங்கடா குதிரை ஆடுது வேடிக்கை பார்க்கலாம் என்று எழுப்பினான். "போங்கப்பா தூக்கம் வருது" என்று அலுத்துக் கொண்டு ஓரமாகப் படுத்துக் கொண்டான் சின்னவன்.
வீட்டில் மெல்ல மெல்ல பேச்சு குறைந்து போனதைப் போலத் தோன்றியது. குழந்தைகள் விடுமுறை நாட்களில் எதிரே குவிந்திருந்த மணல் குவியல்களுக்குச் செல்வதில்லை.
காதுகளில் இரைச்சல் கிளம்பிவிடுமோ என்ற நினைப்பு வந்தவுடனே வந்தேவிட்டது… ‘ஙொய்ய்…ய்…’ நரக வேதனை.
‘யோவ் சைக்கிள். இறங்கிப் போய்யா. கல்யாண ஊர்வலம் வருதில்லே!’ என்ற விரட்டல் எரிச்சலைத் தந்தது. மௌனமாக சைக்கிளை ஏற்றி வீட்டுக்குள் வைத்துவிட்டு சாப்பாடு வேண்டாம் என்று படுத்துவிட்டான். தலையை அடிக்கடி வலிக்குதுங்கிறீங்க…ஒரு டாக்டரைப் பார்க்கலாம்க… என்ற குரல் காதில் மெலிதாகவே விழுந்தது.
இரைச்சல் மண்டைக்கு ஏறியிருந்தது. ஓயாத இரைச்சல். எங்கிருந்து வந்தது இந்த நரக வேதனை? டாக்டரிடம் போகலாமா. போனா என்ன வியாதின்னு சொல்வது?
"என்னங்க வரவர ஒரு மாதிரியா ஆயிட்டு வறீங்க… சரியாவே சாப்பிடறது கிடையாது. தூங்கறதுமில்லே. பேசவும் மாட்டீங்கறீங்க…"
ஏன் நீயும் கூடத்தான்…. பக்கத்தில் வந்து படுத்தவளை சற்று வேகமாகவே தள்ளிவிட்டான்.
இரவில் அனேகமாகச் சாப்பிடுவதை நிறுத்திவிட்டான். ஒரு டம்ளர் தண்ணீர் மோதுமானதாக இருந்தது. இவளும் குழம்பித் தவித்தாள். கையை மடக்கி வாகாக வைத்துக் கொண்டு தள்ளியே படுக்க ஆரம்பித்தாள்.
வெளியே ஆரவாரம். முகட்டு வளையை வெறிக்கப் பார்த்துக் கொண்டிருந்தான். மாலை வெயிலின் ஒரு கற்றை ஜென்னல் வழியாக உள்ளே வந்து தரையில் நீளமாக பட்டைக்கோடு போட்டுக் கொண்டிருந்தது.
தொலைவில் கேட்ட ஆரவாரம் கிட்டே நெருங்க நெருங்க பயந்து போனான். உடம்பு படபடத்தது. காதுகளில் இரைச்சல் கிளம்பி இம்சைப்படுத்துமோ என பயத்தோடு இறுகப் பொத்திக் கொண்டான். மாலை ஆறு மணிகூட இருக்காது. வெளியே வித்யாசமான ஒலிகள். விநோதமான சப்தங்கள். ஆரவாரம். முகம் சட்டென வெளுத்துப் போனாற் போலிருந்தது.
மெல்ல எழுந்து ஜன்னலுக்கு வந்தான். அலுப்போடும் பயத்தோடும் எட்டிப் பார்த்தான்.
உயரமான முனிசிபாலிட்டி வண்டியில் ஒரு வயதானவரை உட்கார்த்தி வைத்திருந்தனர். நெற்றியில் சந்தனப் பொட்டு, அதில் வட்டக் காசு. வாய் இறுகக் கட்டியிருந்தது. முன்னாலும் பின்னாலும் ரோஜா இதழ்களைத் தூவிக் கொண்டிருந்தனர். மெல்ல நகரும் ஊர்வலத்தை உற்றுப் பார்த்தான். தப்பாட்டம். அளவுக்கு அதிகமாகவே குடித்துவிட்டு ஒரு கோஷ்டி இஷ்டத்திற்கு ஆடிக் கொண்டிருந்தது. உற்சாகமான விசில் சப்தங்கள் உய் உய் என்று கிடுகிடுக்க வைத்தன. பறையொலி-இதமாக இடையிடையே ஒலிக்கும் சங்கு சப்தத்தோடு ஒத்திசைவாய்க் கேட்டது. துக்கமும், லேசான மகிழ்ச்சியும், இறுக்கமாய் முகங்கள் – தீச்சட்டி ஏந்திய ஒருவர் முன்னால் நடந்தார். கூட்டம் மெல்லக் கடந்துபோனபோது என்னங்க என்று இவளும் எட்டிப் பார்த்தாள்.
இவன் காதுகளை இறுக்கப் பொத்திக் கொண்டு அச்சத்தோடு உள்ளே வந்தான். மனசில் வெளிச்சம் அடித்தாற் போலிருந்தது. கைகளை விலக்கிக் கொண்டான். என்ன ஆனது?
"கமலு… கமலு கண்ணு வா இங்கே" என்று ஆவேசமாகக் கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்தான். வெறும் தரையில் சாய்த்தான்.
காதுகளில் பேரிரைச்சல் சுத்தமாக நின்று போயிருந்தது.