இசை (2)

பாடல்

அப்பாவுக்கு நாங்கள் மூவரும் கொடுதத வாக்குறுதியே யாரையும் லவ் பண்ண மாட்டோம் என்றுதான்.

ஒரு பெளர்ணமி இரவு மொட்டை மாடியில் அப்பா, அம்மா, நாங்கள் (புவனா, காயத்ரி, சங்கீதா). மூவரும் நைட்டியில். அப்பாவின் சங்கீத ஆலாபனை நடுநடுவே. ‘கீரவாணி’ என்று முனகுவாள், கொஞ்சம் தெரிந்தவள் சங்கீதா மட்டும். பாட்டு கிளாஸ் போனவள் அவள் மட்டும்தான். நான் (புவனா) பெயிண்ட் அடித்துப் பார்த்து, பிறகு அதுவும் வராமல் விட்டுவிட்டேன். வாங்கி வைத்த வாட்டர் கலர், ஆயில் பெயிண்ட் எல்லாம் காய்ந்தே போய்விட்டன.

மிஸ்ஸியம்மாவில் சாவித்ரி பாடும் பாட்டை அப்பாவைப் பாடச் சொன்னாள் அம்மா.

‘நல்ல லவ் ஸ்டோரி!’

"நீங்க யாரையாச்சும் லவ் பண்றீங்களா" என்றார் அப்பா.

"என்ன பேச்சு இது?" – இது அம்மா.

"அப்படி ஏதாச்சும் ஐடியா இருந்தா சுத்தமாத் தொடைச்சிருங்க!"

"இல்லப்பா" என்றோம் கோரஸாக. அந்த நிமிடம் நிச்சயமாய் எங்கள் மனதில் எதுவும் இல்லை.

மிஸ்ஸியம்மா பாட்டு அப்பா பாடவில்லை. அம்மா எழுந்து வெளிநடப்பு செய்தாள். அப்பாவும் சற்று நேரத்தில் கீழே போனார். நாங்கள் மட்டும் தனியே.

"எப்படிடி தைரியமா லவ் பண்ண மாட்டேன்னு சொன்ன?"

"ஏன்… நீயும்தான் சொன்ன!"

"அப்ப சினிமால காட்டறது பொய்யா?… லோ லோன்னு அலையறாங்களே!…"

"கெமிஸ்ட்ரி வொர்க் அவுட் ஆகாதா நமக்கு?" என்றாள் சங்கீதா கிண்டலாய்.

"ஹிஸ்டரிதான் வொர்க் அவுட் ஆகும்… நம்ம குடும்ப சரித்திரம். தாத்தா… அப்பா… எல்லோருமே ஏற்பாடு செய்த கல்யாணம்தான்."

"அப்பாவோட மியூசிக் திறமைக்கு யாராச்சும் லவ் பண்ணியிருக்கணுமே?"

"இன்னிக்கு ஏன் பாடாம போயிட்டார்?"

படியேறி யாரோ வரும் சத்தம் கேட்டது. அப்பாவும், அம்மாவும்.

"மனசே இல்லைடி அவருக்கு. புலம்பிட்டார்… பாடாம வந்துட்டேன்னு…"

வட்டமாய் அமர்ந்தோம். "பிருந்தாவனமும் நந்த குமாரனும்…" அப்பாவின் குரலில் வசியம் இருந்தது.

"சுத்த சாவேரியா?" என்றேன் கிசுகிசுப்பாய் சங்கீதாவிடம்.

"ச்சே… ஆரபியா?…"

"என்னடி குழப்பறே…"

"ஏ.எம்.ராஜா இல்லாட்டி ராஜேஸ்வர்ராவ் இருந்தா கேட்டுடலாம்."

எங்கள் ராக சர்ச்சையில் குரல் உயரவும் அப்பாவிடம் சிரிப்பு. பாடிக் கொண்டே சங்கீதாவின் தலையில் செல்லமாய்த் தட்டினார்.

"மண்டு… மண்டு… நல்லாக் கவனி!"

அம்மா, அப்பாவையே கிறங்கிப்போய்ப் பார்த்துக் கொண்டிருந்தாள். எங்கள் கவனிப்பை உதாசீனம் செய்து. எங்கள் எதிர்காலம்…
கல்யாணம்… நாளைய கவலைகள்… கடன் பாக்கி… அப்பாவின் உடல் நலம்… எல்லாம் மறந்து.

About The Author