பரிச்சயக் கையொன்றுதான்
அப்படித் தள்ளியது…
இன்னும் கிட்டவில்லை
தரை.
(நன்றி: ப்ராங்க்ளின் குமார்)
இன்பாக்ஸில் ஒளிர்ந்த கவிதை ரேணுகாவினுடையது. நள்ளிருட்டில் செல் மினுக்கியதும் எடுத்துப் படித்தேன். நேரம் 12.10.
வயலட் பூக்கள் நிறைந்த நைட்டியில் இருப்பாள். இன்னும் அவள் தூங்காமல் இருப்பதன் அடையாளம் இந்தக் கவிதை.
ரேணுகாவின் கோபம் கூட அழகு! கவிதைகளால் நெய்யப்பட்ட அவள் உலகில் கோபம் கூடக் கத்தரித்துப் போட்ட பட்டுத்துணி.
என்ன பதில் தருவது… ‘ம்ம்’ என்று டைப் அடித்து, நீக்கி, கொஞ்ச நேரம் குழம்பினேன்.
வாக்களித்தபடி என்னால் போக முடியவில்லை. இன்று கவியரங்கம். அதிலும் ரேணுகாவின் கவிதை. அவள் குரலில் கேட்கும் வாய்ப்பை… அதற்கான கரகோஷத்தைக் கேட்கும் வாய்ப்பை இழந்தாகி விட்டது. ஆடிட்டைக் கண்டுபிடித்தவர்களையும் அதை அவசியமாக்கியவர்களையும் சுண்ணாம்புக் காளவாயில் போட்டு அறம் பாட வேண்டும்.
என் இயலாமையை முன்பே சொல்லி இருந்தேன். வர முயற்சிக்கிறேன்… முடியாவிட்டால் சகியே கோபிக்காதே.. என்று.
பதற்றத்தில் கை தவறி வெற்றுச் செய்தியை அனுப்பி விட்டேன். மெசேஜ் சென்ட்.. என்று ஒளிர்ந்தது. போச்சு… அவளைச் சீண்டியாகிவிட்டது… என்ன சொல்லப் போகிறாளோ!
நட்சத்திரங்கள் தொலைவில் மினுக்கிக் கொண்டிருந்தன. கேலிச் சிமிட்டல், ‘மாட்டிகிட்டியா… மவனே!’
இன்பாக்ஸில் சேகரித்து வைத்திருந்த எண்ணூற்றுச் சொச்சம் குறுஞ்செய்திகளில் தேடினேன்.
‘சில நேரங்களில் வெற்றுச் செய்தி கூட ஒரு தகவல்தான். நேசிக்கும் உள்ளம் அதைப் பூர்த்தி செய்து புரிந்து கொள்ளும்!’
அட… அனுப்பிய நண்பனுக்கு மனசுக்குள் நன்றி சொல்லி, அதையே ரேணுகாவுக்கு அனுப்பினேன் அடுத்த செய்தியாக.
இசைவாளா… இல்லை முறுக்கிக் கொள்வாளா!…
ஸ்மைலி வந்தது அவளிடமிருந்து…!
அடுத்த நிமிடமே அழைப்பும்.
‘ரிஷி! இப்போ படிக்கவா… உனக்கு மட்டும்?’ என்றாள்.
கண்சிமிட்டிய நட்சத்திரங்கள் மையிருட்டில் மூழ்கிக் காணாமல் போய்விட்டன அப்போது.
“