திரையுலகம் என்பது பொதுவாக ஆணாதிக்கம் நிறைந்ததாயிற்றே!
எனக்கென்னவோ அப்படித் தெரியவில்லை. கூட வேலை செய்த அனைவரும், நடிக நடிகையரிலிருந்து ஒவ்வொரு தொழிலாளரும், காமிராமேன், உதவியாளர்கள் என்று க்ளாப் பாய் வரை அனைவரும் எனக்கு ஒத்துழைப்புக் கொடுத்தார்கள். ஒரு லைட் பாயோ அல்லது ஒரு காமிரா அசிஸ்டன்டோ இல்லையென்றால் கூட வேலை நின்றுவிடும். ஆனால் அப்படியில்லாமல் நான் எதிர்பார்த்தபடி அனைவரும் குறித்த நேரப்படி வேலை செய்ததால்தான் திட்டமிட்டபடி படத்தை முடிக்க முடிந்தது. வேலையில் கடிந்து கொள்ளாமல் தட்டிக் கொடுத்து வேலை வாங்கவேண்டும் என்பதுதான் என் கொள்கை.
உங்களுடைய படத்தை நீங்களே விமரிசனம் செய்தால் எப்படிச் செய்வீர்கள்?
பொதுவாக ஒரு படத்தை – பன்னாட்டுப் படமோ, இந்தியப் படமோ – பார்த்துவிட்டு அதைப் பற்றி அலசுவது என்பது சுலபம். ‘வல்லமை தாராயோ’ நான் ஒவ்வொரு அங்குலமும் ரசித்து, இணைந்து ஒன்றாக வாழ்ந்து எடுத்த படம். அதைப் பற்றி நான் விமரிசிப்பது கடினம். என் படம் ‘மவுன ராகம்’ போல் இருக்கிறது என்று சொன்னார்கள். அப்படி என்றால் அது நான் மணிரத்னம் சாருக்கு செலுத்தும் ஒரு காணிக்கை. எனக்கு மணிரத்ணம் சார் அவர்களது இயக்கம் ரொம்பப் பிடிக்கும். அவரது, ‘ரோஜா’ படத்தை மட்டும் அறுபது எழுபது தடவை பார்த்திருப்பேன். கதையைப் பொறுத்தவரை ஒரு வேளை மவுன ராகத்துடன் சற்று ஒத்துப் போகலாம். அப்படிப் பார்த்தால், ‘அந்த ஏழு நாட்கள்’, ‘நெஞ்சில் ஒர் ஆலயம்’ ஆகிய படங்கள் கூட இதே போன்றதுதான். என்னுடய படத்தில் ஒவ்வொரு பாத்திரத்தையும் சிறப்பாகச் சித்தரித்திருப்பேன். என் படத்தின் இறுதியில் கதாநாயகன் பார்த்திபன், சாயாசிங்கிடம் "நீயும் மவுன ராகம் வாசிக்கிறே, அவனும் கார்த்திக் போல அழகா இருக்கான்" என்பார். இது மவுன ராகம் படத்தை, மணிரத்னத்தை நான் எவ்வளவு ரசித்தேன் என்பதை ரசிகையாகக் காட்டிக் கொள்ளும் முயற்சி. மற்றபடி மணிரத்னம் சாருடன் என்னை ஒப்பிடுவது என்பது – அவர் எங்கோ உயரத்தில் இருக்கிறார் – நான் இப்போதுதான் ஆரம்பித்திருக்கிறேன்!
சமீப காலமாக புதுப் புது இயக்குநர்கள், நடிகர்கள் திரையுலகில் வந்து சரோஜா, சுப்ரமண்யபுரம் போல சின்ன பட்ஜெட்டில் வெற்றிப் படங்களைத் தருகிறார்கள். பெரிய பெரிய சூப்பர் ஸ்டார்கள் நடித்த, மெகா பட்ஜெட் படங்கள்தான் வெற்றிபெறும் என்ற நம்பிக்கைகள்சிதறியிருக்கின்றன. இதைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?
மிகவும் வரவேற்கப்பட வேண்டிய விஷயம். என்னைப் பொறுத்தவரை யார் நடிகர்கள் என்று தீர்மானித்துக் கதை செய்யக் கூடாது. முதலில் கதையைத் தேர்ந்தெடுத்து அதைக் காட்சிகளாகச் செய்து, முழு ஸ்கிரிப்ட் தயாரான பிறகே இந்தப் பாத்திரத்திற்கு இவர் சரியானவராக இருப்பார் என்று தேர்வு செய்ய வேண்டும். முதலில் கதை முழுவதும் தயாராகி எத்தனை நாள் படம் பிடிக்கப் போகிறோம், ஒவ்வொரு நாளும் என்ன படம் பிடிக்கப் போகிறோம் என்பதைத் திட்டமிடவேண்டும். இதுதான் நான் கவுதம் மேனனிடமிருந்தும், ஹாலிவுட்டில் படித்ததிலிருந்தும் கற்ற பாடங்கள். ‘வல்லமை தாராயோ’ படப்பிடிப்பை 50 நாட்களில் முடிக்க வேண்டும் என்று தீர்மானித்தோம். 52 நாட்களில் முடித்தோம். இரண்டு நாட்கள் நீடித்ததில் எனக்கு வருத்தம்தான்!
ஹாலிவுட்டில் இயக்குனர் துறையில் படித்தது பற்றி…
அங்கு கற்ற பாடம் – இயக்குனர் என்பவர் படத்தை இயக்குவதோடு மட்டும் நிற்கக்கூடாது. அவருக்கு காமிரா, எடிட்டிங், ஒலி அமைப்பு என்று எல்லாத் துறைகளிலும் அடிப்படை அறிவு வேண்டும். இயக்குனர் ஒரு கப்பலின் கேப்டன் போல – மேற்பார்வையாளராக மட்டும் இருக்க முடியாது. ஏதாவது பிரச்சினை என்றால் கப்பலை ஓட்டவும் தெரிய வேண்டும். நீரில் மூழ்குபவர்களைக் காப்பாற்றவும் தெரிய வேண்டும்.
உங்களது அடுத்த படம்?
முதல் படத்தில் ரசிகர்களை அழ வைத்த நான் அடுத்த படத்தில் சிரிக்க வைக்க நினைக்கிறேன். அடுத்தது, கிரேஸி மோகன் எழுதும் ஒரு காமெடிப் படம். கதை மற்றும் ஸ்கிரிப்ட் தயாராகிக் கொண்டிருக்கிறது. டிசம்பரில் பூஜை போட எண்ணமிருக்கிறது.
படம் தயாரிப்பதில் உங்களுக்கு குடும்பத்திலிருந்து ஒத்துழைப்பு எப்படி?
எனது அப்பாவிற்கு கலைத்துறையில் ஏற்கனவே பரிச்சயமிருப்பதால் என்னுடைய பல விஷயங்களில் எனக்கு ஆசானாக இருந்து கவனித்துக் கொள்கிறார். எனது சகோதரன், தாய், தாய்மாமன் எல்லோருமே என் பணியில் கைகொடுத்து எனக்குப் பூரணமாக ஒத்துழைக்கிறார்கள். சென்ற வருடம் எனக்குத் திருமணமாயிற்று. கணவர் விஜய் ஹாலிவுட்டில் பயின்ற திரைப்பட எடிட்டர். அமெரிக்காவிலேயே வசித்தவர். அவர்தான் எனது ‘வல்லமை தாராயோ’ படத்தை எடிட் செய்தவர். அவரும் திரைப்படத் துறையில் இருப்பதனால் எனக்கு மிகவும் ஒத்துழைப்பு கிடைக்கிறது. மொத்ததில் குடும்பத்திலிருந்து எனக்கு இவ்வளவு ஆதரவு கிடைத்ததற்கு கடவுளுக்குத்தான் நன்றி சொல்ல வேண்டும்!
பார்த்திபனுடன் உங்களுக்கு ஏற்பட்ட கருத்து வேற்றுமை பற்றி… இசை வெளியீட்டு விழாவிற்கும் அவர் வரவில்லை! நூறாவது நாள் வெற்றி விழாவுக்கும் வரவில்லையே!
நீங்கள் சொன்னதுபோல் சின்ன கருத்து வேற்றுமைதான். சரியாகப் புரிந்து கொள்ளாததுதான் காரணம். ஆனந்த் பாத்திரத்தில் பார்த்திபன் நல்ல கணவனாக திரைப்படத்தில் சிறப்பாக நடித்தார். அவர் ஒரு சிறந்த நடிகர், இயக்குனர், தயாரிப்பாளர். ஆனால் திரைப்படத்தின் வெற்றிக்கு ஒருவர் மட்டுமே காரணமில்லை. சாயாசிங்கும் சிறப்பாக நடித்தார். சேகராக நடித்த ஸ்ரீகாந்த் – ஏன் திரைப்படத்திற்காக உழைத்த ஒவ்வொருவருமே, அடிமட்டத் தொழிலாளி வரை எல்லாருமே முக்கியமானவர்கள்.
திரைப்படத்துறையில் நீங்கள் சாதிக்க நினைப்பது என்ன?
எனக்கு எல்லாமே தெரியும் என்று நான் நினைப்பதில்லை. என் படத்தை ரசிகர்களோடு பார்க்கும்போது அவர்கள் ரசிக்கும் காட்சிகளைப் பார்க்கிறேன். தவறு என்று நினைப்பதைத் திருத்திக் கொள்வேன். என் நீண்ட கால லட்சியம், தமிழில் நான் எடுக்கும் ஒரு படம் ஆஸ்கார் விருது வாங்க வேண்டும் என்பதுதான். இதுவரை சில படங்கள் பரிசீலனைக்குச் சென்றிருக்கின்றன. ஆனால் விருது பெற்றதில்லை. விருது பெறுவதைத்தான் என் நீண்டகால இலக்காக வைத்திருக்கிறேன். அதற்குத் தேவையான ஒத்துழைப்பு என் குடும்பத்திலிருந்து எனக்குக் கிடைக்கிறது.
சிகரங்களை எட்ட எங்களது வாழ்த்துக்கள். வேறு ஏதேனும் கூற விரும்புகிறீர்களா?
நிறையப் பெண்களும், இளைஞர்களும் திரையுலகுக்கு வரவேண்டும். சினிமாவும் மற்ற டாக்டர், இஞ்சினீயர் போல ஒரு தொழில்தான். நமக்கென்று ஒரு எல்லை வகுத்துக் கொண்டு செயல்பட்டால் பிரச்சினை ஒன்றுமில்லை.
ஆக்கபூர்வ சிந்தனைகளுடன் சரியான பாதையில் பயணம் செய்யும் மதுமிதாவை வாழ்த்தி விடைபெற்றோம்.
“