"மீனாட்சி, இந்தா உன் பையன் இந்தியாவிற்குத் திரும்பி வருகிறானாம். கடிதம் போட்டிருக்கிறான். வந்து படித்துப் பார்" என் கணவர் உரக்க குரல் கொடுத்தார்.
நான் சமையலறையிருந்து வந்து கடிதத்தை வாங்கி படித்துப் பார்த்தேன்.
என் மகன் கோபியும் அவன் மனைவி மீனாவும் கடந்த மூன்று வருடங்களாக அமெரிக்காவில் இருக்கிறார்கள். அங்கே என் மகன் கைநிறைய சம்பளத்துடன் ஒரு பெரிய நிறுவனத்தில் வேலை செய்து வந்தான். சுமார் மூன்று வருடங்களுக்கு முன்பு இந்தியா வந்து நாங்கள் பார்த்து வைத்திருந்த மீனாவை திருமணம் செய்து கொண்டு உடனேகூட அழைத்துக் கொண்டு போய்விட்டான். அவன் இப்போது கடிதம் எழுதியிருக்கிறான்.
"அம்மா, எல்லா டாக்டர்களையும் கேட்டு விட்டேன். எங்கள் உடம்பில் எந்த கோளாறும் இல்லையாம். மீனாவின் உடல்நிலை இந்த நாட்டு சீதோஷ்ணநிலைக்கு ஒத்து வரவில்லை என்றும் ஒரு வேளை இந்தியாவுக்கு சென்றால் குழந்தை பிறக்கும் வாய்ப்புகள் எற்படக்கூடும் என்றும் சொல்லி விட்டார்கள்.
எங்கள் கம்பெனியும் ஒரு தனி ஆபிஸை சென்னையில் திறக்க முடிவு செய்துருப்பதால், என்னை சென்னைக்குப் போக முடியுமா என்று கேட்க நானும் ஒத்துக்கொண்டேன். இன்னும் மூன்று மாதத்தில் நாங்கள் சென்னைக்கு வந்து விடுவோம்.
சென்னையில் சற்று ஒதுக்குப்புறமாக இரண்டு அல்லது மூன்று கிரவுண்டு நிலத்தில் ஒரு தனி வீடாக பாருங்கள். வீட்டை சுற்றி நிறைய மரம் செடிகள் இருக்குமாறு பாருங்கள். இல்லை என்றாலும் பரவாயில்லை, நாம் வளர்த்துக் கொள்ளலாம். ஆனால் பக்கத்தில் ஒரு நல்ல பிரசவ ஆஸ்பத்திரி இருக்கும்படி பார்த்துக் கொள்ளுங்கள்.
பணத்தைப் பற்றி கவலைப்படவேண்டாம். வீடு உங்களுக்குப் பிடித்து இருந்தால் அட்வான்ஸ் கொடுத்து விடுங்கள். நான் இந்தியா வந்ததும் ரிஜிஸ்ட்டர் பண்ணிக் கொள்ளலாம். மற்றபடி ஒன்றும் இல்லை. இருவரும் உடம்பைப் பத்திரமாகப் பார்த்துக் கொள்ளுங்கள்."
"என்னங்க, நல்ல விஷயமாக இருக்கிறதே, நாம் என்ன செய்யலாம்?" என்று கேட்டேன்.
"உன் தம்பி ரமேஷ் ஒரு ரியல் எஸ்டேட் ஏஜென்டாகத்தானே இருக்கிறான். அவனைக் கூப்பிட்டு விஷயத்தை சொல்லு" என்றார் என் கணவர்.
அப்படியே அவனை அழைத்து கோபியின் கடிதத்தைக் காண்பித்து ஒரு நல்ல விசாலமான வீடாகப் பார்க்கச் சொன்னேன்.
சுமார் 10 நாட்கள் கழித்து தம்பி வந்தான். வரும்போதே ஒருவித தயக்கத்தோடு வந்தான். "என்னடா ரமேஷ், வீடு ஏதாவது பார்த்தாயா?" என்று கேட்டேன்.
"நீ கேட்ட மாதிரியே மூன்று கிரவுண்டு நிலத்தில் ஒரு பெரிய வீடு இருக்கிறது அக்கா. ஆனால் அதில் ஒரு பிரச்சினை இருக்கிறது" என்றான்.
அதை கேட்டுக்கொண்டே என் கணவர் வந்து உட்கார்ந்தார். "முதலில் என்ன பிரச்சினை, சொல். விலை அதிகமா?" என்றார்.
"அதெல்லாம் ஒன்றும் இல்லை. விலை மிகவும் கம்மிதான். ஏனென்றால் அந்த வீட்டில் ஒரு பெண் தன் குழந்தையுடன் கொளுத்திக்கொண்டு தற்கொலை செய்து கொண்டாளாம். அந்த வீட்டில் யாரும் நீண்ட நாட்கள் குடியிருந்தது இல்லையாம். வீட்டின் பின்புறம் ஒரு பெரிய புளியமரம் இருக்கிறது. அதில்தான் அந்த பெண்ணின் பேய் இருப்பதாகச் சொல்லுகிறார்கள். இரண்டு மூன்று முறை அந்த மரத்தை வெட்ட முயற்சிகள் செய்தார்களாம். வெட்டும் ஆட்களுக்கு ஏதாவது ஒரு வகையில் பலத்த அடிபட்டு விடுகிறதாம். அதனால் யாரும் அந்த மரத்தை வெட்ட வரமாட்டேன் என்று சொல்கிறார்களாம்.
ஆனால் மற்றபடி வீட்டில் குடியிருப்பவர்களுக்கு எந்தக் கெடுதலும் நேரவில்லையாம். நாம் அந்த வீட்டை வாங்கி அந்தப் பேயை அங்கிருந்து துரத்தி விட்டோமானால், நல்ல அருமையான வீட்டை மலிவான விலையில் வாங்கியது போல ஆகும். சிறந்த முதலீடாக அமையும். பின்னால் அதன் மதிப்பு பன்மடங்கு உயரும்." என்றான்.
"அய்யோ தம்பி! பேய் வீடு எல்லாம் நமக்கு வேண்டாம். மருமகள் வேறு குழந்தை பெற வேண்டும் என்று வருகிறாள். அப்புறம் முதலுக்கே மோசமாகிவிடும்." என்று அவசரம் அவசரமாகச் சொன்னேன்.
"சற்றுப் பொறு மீனாட்சி! பேய் என்றதும் அலராதே. பேய் அங்கிருக்கிறது என்றால் அதற்கு ஒரு காரணம் இருக்கும். அதுதான் யாருக்கும் கெடுதல் செய்யவில்லை என்கிறானே?" என்றார் அவர்.
"கெடுதல் செய்யவில்லையா? அவன் சொன்னதை என்ன கேட்டீர்கள். மரத்தை வெட்டியவர்களுக்கு அடிபட்டது என்று சொன்னானே?"
"தான் குடியிருக்கும் மரத்தை வெட்டினால் அது வேறு என்ன செய்ய வேண்டும் என்று எதிர்பார்க்கிறாய்? சற்று யோசிப்போம். நீ போய் ரமேஷுக்கு சாப்பிட ஏதாவது கொண்டு வா" என்றார்.
ஒரு தட்டில் பிஸ்கட்டும், கோப்பைகளில் காபியும் கொண்டு வந்து இருவருக்கும் கொடுத்தேன். காபியை சாப்பிட்டுக்கொண்டே அவர் சொன்னார். "இப்படிச் செய்தால் என்ன? எனது நண்பன் ராஜேஸ்வரன் ஒரு முறை அவனின் யோகா ஆசிரியர் சின்ன யோகீஸ்வரர் என்பவரை எனக்கு அறிமுகப்படுத்தினான். அவர் சூட்சும சக்திகளைக் காணக்கூடியவர் என்றும் அவைகளுடன் பேசக்கூடியவர் என்றும் சொன்னான். அவரிடம் எல்லா விஷயத்தையும் சொல்லி, அவரை அழைத்துக் கொண்டு அந்த வீட்டிற்குப் போவோம். அவர் அந்த வீட்டைப் பார்த்து விட்டு வாங்கச் சொன்னால் வாங்கலாம். ஏதாவது சாங்கியம் செய்ய வேண்டும் என்று சொன்னாலும் செய்யலாம். இல்லை வேண்டாம் என்றால் விட்டு விடலாம். நீ என்ன நினைக்கிறாய்?" என்று கேட்டார்.
என் மனம் பெரிய வீடு மலிவாக கிடைக்கிறதே என்ற பேராசையில் ஊசலாடியது. "சரி அப்படியே செய்யலாம்" என்றேன்.
(தொடரும்)
நண்பர்களே….இதன் இரண்டாம் பாகம் ஸ்பெசல் பகுதியில் பிரசுரிக்க பட்டு உள்ளது..
எழுதிய ராஜேஸ்வரன் அண்ணாவிற்கு பாராட்டுக்கள்
very good
your first episode it is very interesting