ஆளுக்கு ஓர் அலை கொடுத்தால் அவளுக்கு நதி (2 )

தூக்கத்திற்கும் விழிப்புக்கும்
ஒரே நேரத்தில்
தொட்டில் கட்டுகிறோம் கண்களில்!
நத்தையின் மனதைக்
குதிரை
குத்தகைக்கு எடுத்துக் கொண்டால்,
ஓடும் கால்களால்
உபயோகம் உண்டா?

கைகளில்… கணினி,
காட்டுக் குகைகளில்
மனம்.
மாற மறுக்கும்
மனிதனுக்குள்
பூர்வீக விலங்குகளைத் தேடிப்போன
டார்வின்கள்
தோல்வியோடு திரும்பினர்.
விலங்குகள் கூட
மாறி வருவதை விளங்கிக் கொண்டனர்.

தின்றதையே
தின்பவன் வீட்டில், ஒரு நாள்
சமையல் அறையே தீக்குளித்துக்
கொள்ளும்.
கந்தலாய் நாறிய
பழைய காலுறைக்குப் பதிலாகப்
புதிய காலுறை போட்டுக் கொண்டது
போற்றத்தக்கது.
ஆனால் காலில் நாறிய
பழையதைப்
பழசாறு வடிக்கப் பயன்படுத்தலாமா?

போகி நெருப்பில் போட்டுக் கொளுத்துவோம்
மத வெறியை!
கடவுளர் முகங்களே
கறுத்துப் போயின
அயோத்திச் சம்பவத்தால்.
தேசத்தைக்
காட்டுமிராண்டிக் காலத்திற்குத்
திருப்பும் கைகளில்
தேம்பும் சரித்திரம்.

பூதனை மார்பிலா
மதங்கள் பால் பருகின?
மதங்கள் வேறுவேறு
கடவுள் ஒருவனே!
மதங்கள் வேறுவேறு
மானுடம் ஒன்றே!
மதமிலா மனிதனும்
மனிதனே!

நரித்துவம்
நடத்திய சதியே சாதிகள்!
நரகம் தூவிய விதைகள்;
உள்ளங்களுக்கிடையில்
சமூகம்
தோண்டிய பள்ளங்கள்;
விழுந்தவர் எழுந்தால்
மிரட்டுவதற்காகவே மேடுகள்!

போகி நெருப்பு, இவற்றை
எரிக்கப் புறப்படுமுன்
கந்தக சபையைக்
கலந்தாலோசிக்க வேண்டும்!
ஏனெனில்
எரிக்கப் புறப்பட்ட
எத்தனையோ நெருப்புகள்
ஏமாந்து விட்டன!

சோகச் சின்னங்கள்
சோமாலியாக்கள்…
வசதி படைத்தவர்களோடு
தேநீர்
அருந்தப் போகும் சரித்திரம்
திரும்புமா இவர்கள் பக்கம்?
உச்சி மாநாடுகளுக்கு
இந்தச்
சரிவுகள் கண்களில் படுமா?

நமது
பொங்கல் திருநாள் வாழ்த்துக்களை
நாளை அவர்களுக்கு
நாம் அனுப்பிவைப்போம்!
எனினும்
இன்றே அவர்களுக்கு,
இனிப்புப் பொங்கலை
ஏற்றுமதி செய்வோம்!

இன்னும்,
லெபனானுக்கும் இஸ்ரேலுக்கும்
இடையில்
விடை சொல்ல முடியாத
வாழ்க்கை.
விரட்டியடித்த வினாக்களாய்
பாலஸ்தீனியர்கள்!

கொட்டும்
குளிரின் கொடுக்கில்
துடிக்கும் அவர்களுக்குக்
கொடுத்தது போக மிச்ச நெருப்பை, நம்
அடுப்பில் மூட்டுவோம்!
பெட்டிக்குள் அடக்கினாலும்
பிணமாகி விடாத
தீக்குச்சிக் குணத்தை
எடுத்துச் செல்வோம்!
அழுக்கைக் கழுவும்
தண்ணீர், அழுக்காகிப் போகும்!
மாசை எரிக்கும் நெருப்பு
மாசாவதே இல்லை!

நமது
எழுத்துக்களின் உச்சியில்
இதயத்தையே
திரியாய் இட்டு, இந்தக்
கம்பீர நெருப்பால்
கவிதைகள் ஏற்றுவோம்!
போகி நாள், எனது
கவிதை
புறப்பட்டு வருகிறது உங்கள்
வாசலுக்கு.
பொன்னும் மணியும்
பொருளும் வேண்டாம்!
உங்களிடத்தில்
குப்பைகள் இருந்தால்
கொடுத்தனுப்புங்கள்!
குப்பையை கொடுக்கக்கூட
ஒப்ப மாட்டீர்களா?

About The Author