"மின்னல்கள் கூத்தாடும் மழைக் காலம்" என்று இந்த மழைக் காலத்துக்கு ஏற்ப ஜில்லுனு ஒரு பாட்டாகட்டும்; "வெயிலோடு உறவாடி"ன்னு வெயில் காலத்தை உருக வைப்பதாகட்டும்; இந்த ஐஸ்கிரீம் பாய்க்கு அல்வா சாப்பிடுவது மாதிரி. சினிமா துறைக்கு நிறைய கனவுகளை சுமந்துக் கொண்டு வந்த யூத் லிஸ்ட்டில், யாருப்பா இந்த சின்னப் பையன் பாட்டுல வெளுத்துக் கட்டுறான் என்று தனது முதல் படமான ‘வெயில்’ படத்தில் இசை பிதாமகர்கள் மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த இசை ரசிகர்களிடம் ஸ்கோர் பண்ணின அந்த ச்ச்ச்சோ…. ஸ்வீட் பாய் ஜி.வி.பிரகாஷ். பார்ப்பதற்கு ஸ்பென்சர், மாயாஜால்னு டைம்பாஸ் பண்ணுற சிட்டி பாய் மாதிரி இருக்கிறார். பாவம்ங்க… அதுக்கெல்லாம் பிரகாஷிற்கு நேரம் இல்லை. இவருக்கு இசை தான் உலகம். வெயிலில் ஆரம்பித்து குசேலன் வரை வரிசையாக படங்கள். அனைத்திலுமே இந்தக் காலத்து ட்ரெண்ட் தெரிந்து இசைப் பிரியர்களுக்கு சரியான தீனி போட்டவர். மதிய மஞ்சள் வெயில் நேரத்தில் பிரகாஷின் ரிக்கார்டிங் தியேட்டரில் சந்தித்தோம்.
காலேஜூக்குப் போகிற வயசுல சினிமாவுக்கு வந்துட்டீங்க… அந்த லைஃபை மிஸ் பண்றீங்களா?
அதெல்லாம் மிஸ் பண்ணிட்டேன்தான். ஆனால் இப்ப சினிமா நண்பர்களோடு அப்படி ஒரு பிரண்ட்ஷிப்போடுதான் வேலை பார்க்கிறேன். நாலரை வயசில பாட ஆரம்பிச்சேன். அஞ்சு வயசில பியானோ கத்துக்கிட்டேன். முதல் பாட்டு ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் "சிக்கு புக்கு சிக்கு புக்கு ரயிலே" பாடினேன். பாட்டு செம ரீச். அதற்கு பிறகு பம்பாய் போன்ற நிறைய படங்களுடைய வாய்ப்பு கிடைத்தது.
ஸ்கூல் பேண்டில் நல்ல இன்ஸ்ட்ருமென்ட் பிளேயராக இருந்ததால் பள்ளியில் கல்ச்சுரல் செகரட்டிரி வாய்ப்பு கிடைத்தது. கல்ச்சுரல்ல ஒரு முறை நான் வாசித்ததைப் பார்த்து எஸ்.ஐ.சவுண்ட் இன்ஜினியரிங் கல்லூரியில் படிக்க அழைத்தார்கள். ஸ்கூல் படித்தாலும் பன்னிரண்டாம் வகுப்பு முடித்து விட்டு அங்க தானே போகப் போறோம் என்று தோன்றியது. அந்த கல்லூரியில் படிக்கத் தேவையான தகுதி பத்தாம் வகுப்பு. அதனால் பதினோறாம் வகுப்பை பாதியிலயே விட்டுட்டு என் வாழ்க்கைப் படிப்பான இசை படிக்க பியானோவை தூக்கிக் கொண்டு வந்து விட்டேன்.
காலேஜ் படிக்கும் போதே 200 ஷோ பண்ணிட்டேன், பின்னணிப் பாடகரா 50 பாட்டு பாடிட்டேன். எங்க காலேஜ் விளம்பரம் ஒண்ணு செய்தேன். அதுக்குப் பிறகு ரேடியோ மிர்ச்சியோட ஜிங்கிள்ஸ் ஆரம்பிச்சு நோக்கியா, ஹ்ச்.டி.எஃப்.சி, மாமீஸ் மசாலானு நிறைய ஜிங்கிள்ஸ் பண்ணினேன்.
இசையில உங்க குருநாதர் யார்? ஏன்?
குருநாதர் அப்படினு சொன்னா ஏ.ஆர்.ரஹ்மான். அவர்கிட்ட ஒன்றரை வருஷம் வேலை பார்த்திருக்கேன். இசைக்காக வாழ்பவர்னு சொல்லலாம். அவர் மியுசிக்ல பாடினது ஒரு அனுபவம்னா அவரிடம் வேலை பார்த்தது இன்னொரு அனுபவம். ஸ்வதேஷ், கிருஷ்ணா, அன்பே ஆருயிரே, வரலாறுன்னு நான் வேலை பார்த்த ஒவ்வொரு படத்திலேயும் அவர்கிட்ட கத்துக்க ஒவ்வொண்ணு இருந்தது. அவர் கூட சேர்ந்து ஃபாரின் பிராஜக்ட் நிறைய செய்திருக்கேன். அதே மாதிரி எல்லா இசை அமைப்பாளர்கள்கிட்டயும் வேலை பார்த்திருக்கேன்.
ஹைடெக் சிட்டி பாயான உங்களுக்கு முதல் படம் கிராமத்து கதை எப்படி வேலை செஞ்சீங்க? ஒரு கதைக்கும் இன்னொரு கதைக்கும் எப்படி மியுசிக்ல வித்தியாசப்படுத்தி உங்களை காண்பிக்கிறீங்க?
எனக்கு ஒரு விஷயம் பிடித்து இதை நீதான் செய்யணும்னு என் மனசு சொன்னா மட்டும்தான் செய்வேன். அப்படி ஒரு விஷயத்தை எடுத்துட்டா, எதுக்காகவும் என்னை சமாதானப்படுத்திக்காம அதுக்காக முழுசா உழைப்பேன். கடமைக்கு ஒரு விஷயம் பண்ணுவது எனக்குப் பிடிக்காது. அதனால் எனக்கு வித்தியாசம் எதுவும் வெயில் படம் பண்ணும் போது தெரியவில்லை. அடுத்த படம் "ஓரம்போ". சென்னைக்கான இந்த படம் லோக்கல் சவுண்ட்ல நல்லா வந்திருந்தது. "இது என்ன மாயம்னு" எனக்கு ரொம்ப பிடிச்ச மெலடி இருந்தது. "காளை" என் நண்பன் சிம்புக்காக நான் செய்து கொடுத்த படம்.
எல்லோரும் வாழ்க்கையோட திருப்புமுனை வயதை தொடும்போது நீங்க பேர், புகழ், பணம் எல்லாம் பார்த்துட்டீங்க. அடுத்து என்ன செய்யப் போறீங்க?
ஆல்பம் ஒண்ணு கொடுக்கணும் என்பது ரொம்ப நாளா எனக்குள்ள ஓடுற கனவு. இங்க ஆல்பம் பற்றி அவ்வளவு பேசப்படுவதில்லை. ஆனால் மைக்கேல் ஜாக்சன், ஜெனிஃபர் லோபஸ் மாதிரி ஒரு கான்சப்டோட ஆல்பம் செய்யணும். அதுக்கான ஸ்கிரீன் ப்ளே என் மூளையில ஓடிக்கிட்டே இருக்கு. அந்த ஆல்பம் ஒவ்வொருவருடைய உணர்வுகளின் ஆழத்தையும் தொடும். ரீமிக்ஸ் கொடுப்பதில் எனக்கு விருப்பமில்லை.
அதெல்லாம் சரி.. ஹேர் கலரிங் எல்லாம் செய்து சினிமா ஹீரோ மாதிரி இருக்கிங்களே… ஹீரோ லிஸ்ட்ல இயக்குனர்கள், பாடலாசிரியர்கள், இனி இசையமைப்பாளர்களுமா என்று கேட்டதற்கு, "சிட்டி பாய்னு நீங்களே சொல்றீங்க.. கொஞ்சம் யூத்தா இருக்கலாமேனுதான். வேற எதுவும் இல்லை…. ஆளைவிடுங்க பாஸ்!"என்று எஸ்கேப் ஆனார் பிரகாஷ்.”