இதன் இசை அமைப்பாளர் கே (Kay)வுக்கு இது இரண்டாவது படம். ஏற்கெனவே, யுத்தம் செய் படத்தின் மூலம் கவனிக்கப்பட்ட இவர் இந்த வாய்ப்பையும் நன்றாகப் பயன்படுத்தி இருக்கிறார்.
இந்த படத்தின் இயக்குனர் ‘யுத்தம் செய்’ படத்தில் முக்கிய பாத்திரம் ஏற்ற லட்சுமி. ஆல்பத்தில் மொத்தம் 3 பாடல்கள் மற்றும் 3 இன்ஸ்ட்ருமெண்டல் (Instrumental) இசைக் கோர்வைகள்.
தப்பாட்டம்
பார்ட்டி பாடல் போல் குறும்பு ததும்பும் வார்த்தைகளோடும் அதிரும் இசையோடும் கவனிக்க வைக்கிறது. இசை அமைப்பாளரும் பாடலுக்குக் குரல் கொடுத்துள்ளார். இனி பப்களில் இந்த பாடலை கேட்கலாம். வாத்தியங்களின் இரைச்சல் அதிகமாக இருப்பதால் ரீமிக்ஸ் பாடல் போல் இருக்கிறது.
இந்த வான் வெளி
பாடலைப் பாடி இருப்பவர் ஆனந்த். எழுதியவர் சபீர் அஹ்மத். சாதாரணமாக ஆரம்பித்தாலும் பேச்சு வழக்கில் வரும் வரிகள் அருமை. "இயற்பியலும் அறிவேன் உன் இயல்பும் அறிவேன்" போன்ற வரிகள் காலைத் தென்றலாய் மனதை வருடுகின்றன.
திசை அறியாது
தாய்மையின் தேடலை சொல்வதாக அமைகிறது இந்தப் பாடல். பாடியவர் வந்தனா ஸ்ரீநிவாசன். இசையின் ஆதிக்கம் அதிகம் இல்லை. வார்த்தைகள் தெளிவாகப் புரிகின்றன. "அடைமழை பெய்தால் மறுநாளே இலையுதிர் காலம்" என்று ஏக்கம் சரியாக வார்த்தையாக்கப் பட்டிருக்கிறது.
வான்வெளி புல்லாங்குழல் வெர்ஷன் மற்றும் ஐ வோண்ட் கிவ் அப் (I Wont give up) இந்த இரண்டிலும் புல்லாங்குழல் மற்றும் தபேலா இசையும் அழகாக பயன்படுத்தப்பட்டிருக்கின்றன. ஒடே டு மதர்ஹூட்(Ode to Motherhood) என்பதற்கு தமிழில் ‘தாய்மைக்கு கவிதை’ என்பது பொருள். அதற்கு ஏற்றாற்போல் இசைக் கோர்வையும் ரசிக்கும்படி உள்ளது.
முதல் பாடலைத் தவிர்த்துப் பார்த்தால் இந்த ஆல்பம் மனதை வருடும் மெலடி வகை.
“