இந்தப் பொங்கல் திருநாளன்று பல படங்கள் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாயின. அதில் உருப்படியான படம் என்று பார்த்தால் அது "ஆரண்ய காண்டம்"! படத்தின் இயக்குநர் தியாகராஜன் குமாரராஜாவுக்கு இதுதான் முதல் படம் எனச் சொன்னால் யாரும் நம்ப மாட்டார்கள். அவ்வளவு நேர்த்தியான இயக்கம்!
இராமர் காட்டில் வாழ்ந்த காலக்கட்டத்தைப் பேசுவது இராமாயணத்தின் ஆரண்ய காண்டம் பகுதி. நாகதத்தனுக்கும் விஷ்ணு குப்தனுக்கும் இடையில் நடக்கும் உரையாடலின் இரு வரிகள் திரையில் தோன்றிய பின் படம் தொடங்குகிறது.
நாகதத்தன் : தர்மம் என்றால் என்ன?
விஷ்ணு குப்தன் : அவரவர்க்கு எது தேவையோ, அதுவே தர்மம்!
மனிதர்கள் மிருகங்களைப் போல் வாழ்ந்தால் என்னாகும் என்பதுதான் கதை. தமிழ்த் திரையுலகில் பலமுறை பார்த்த கேங்க்ஸ்டர் கதைதான் என்றாலும் அதை எந்தத் தமிழ்ப் படமும் இப்படிப் பதிவு செய்யவில்லை.
சிங்கப்பெருமாளாக வரும் இந்தி நடிகர் ஜாக்கி ஷெராப்பின் நடிப்பு, படத்தில் பெரிதும் பேசப்பட்டது நினைவிருக்கலாம். அதுவும், பிற்பாதியில் அவர் தொலைபேசியில் பேசுவது போல் வரும் காட்சிகள் அருமை!
சிங்கப்பெருமாளிடம் வேலை செய்யும் பசுபதி பாத்திரத்தில் அசல் கடத்தல்காரனைக் கண்முன் கொண்டு வருகிறார் சம்பத். முதலிலேயே சிங்கப்பெருமாளை பகைத்துக் கொள்வதாகட்டும், பின்னர் பிரச்சினைகளை முடிக்க அவர் போடும் திட்டங்களாகட்டும், அத்தனையும் ரசிக்க வைக்கின்றன.
தன்னைக் கொல்லப் போகிறார்கள் என்று தெரிந்ததும் தப்பிப்பதும், பின் மனைவியை நினைத்துத் திரும்ப வருவதும், அப்போது ஒலிக்கும் பின்னணி இசையும், எப்படி அவருக்கு பைக் கிடைத்தது என்று வரும் 5 நொடி ஃபிளாஷ்பேக்கும் அட போட வைக்கின்றன!
அடுத்ததாக, கொடுக்காப்புளியாக வரும் சிறுவன் வசந்த். என்ன அழகாக நடித்திருக்கிறான்! படத்தின் இறுதியில் சம்பத் அவனிடம், "உனக்கு அப்பான்னா ரொம்பப் புடிக்குமா?" என்று கேட்பார். அதற்கு அவன், "அப்படி இல்ல… இருந்தாலும் அவர் என் அப்பா" என்று சொல்லும்போது நமக்கும் சின்ன ஷாக். கொடுக்காப்புளியின் தந்தையாக அறிமுக நடிகர் குரு சோமசுந்தரம். தந்தைக்கும் மகனுக்குமான உரையாடலில் இருவரும் வாழ்ந்திருக்கிறார்கள்!
சப்பை என்கிற விவரம் அறியாத இளைஞன் கதாப்பாத்திரத்தில், அடையாளமே தெரியாமல் ரவிகிருஷ்ணா! இறுதியில் அவரது முடிவு திடுக் திருப்பம். அறிமுக நாயகி யாஸ்மின் பொன்னப்பா, சிங்கப்பெருமாளின் அடிமையாக வரும் சுப்பு என்கிற கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கிறார். இவருக்கும் ரவிகிருஷ்ணாவுக்குமான உரையாடலில் இயக்குநரின் மெனக்கெடல் தெரிகிறது.
கஜேந்திரனாக ராம்போ ராஜ்குமார். தன் ஆள் ஒருவனை சம்பத் போட்டுத் தள்ளியதும் அவர் காட்டும் நடிப்பு மிரட்டல்!
மொத்தக் கதாப்பாத்திரங்களுமே இவ்வளவுதான்! இதை வைத்து கேங்க்ஸ்டர் கதை ஒன்றை காட்சிப்படுத்தியிருக்கிறார். வசனங்களும் கவனிக்க வைக்கின்றன. சம்பத்தைக் கொலை செய்யத் துரத்தும்போது ஒரு வசனம். "புத்தருக்குப் போதி மரம் மாதிரி ஒரு கேங்க்ஸ்டர்க்கு சேஸ்" என்று ஓடிக்கொண்டே யோசிப்பார். அதே இடத்தில் இன்னொரு வசனம், "என் சாவு, என் கூட ஓடி வருது, இப்ப எனக்குக் குழப்பம் இல்ல".
காளையன் தன் மகனிடம், தனக்குச் சரக்கு வாங்கிக் கொடுத்தவனைப் பற்றிச் சொல்லும் ஒரு வசனம்,
"சாராயம் வாங்கிக் குடுத்தவன் சாமி மாதிரிடா, தப்பாப் பேசாத!"
இப்படி, பாராட்ட வேண்டிய வசனங்கள் ஏராளம்!
அடுத்துக் குறிப்பிட வேண்டியவை ஒளிப்பதிவும் கலை இயக்கமும். அழகியலுடன் ஒவ்வோர் இடத்தையும் வடிவமைத்திருக்கிறார்கள். சிங்கப்பெருமாளின் வீடு ஓர் உதாரணம்! காட்சிகளில் ஒளிப்பதிவாளரின் உழைப்பு தெரிகிறது. அதுவும், அந்தப் பாவா லாட்ஜ் காட்சிகள், சம்பத் துரத்தப்படும்போது வரும் காட்சிகள் அட போட வைக்கின்றன!
இசை யுவன்சங்கர் ராஜா. படத்தில் முதலில் பாடல் இருந்ததாம். ஆனால், படத்தைப் பாதிக்கும் என்கிற கருத்தால் பின்னர் அதை நீக்கி விட்டார்களாம். அதனால் என்ன, பின்னணி இசையில் தனி ராஜாங்கமே நடத்தி இருக்கிறார் யுவன். அதிலும், இறுதிக்கட்டச் சண்டைக் காட்சிகளில் ஒலிக்கும் இசை நம்மை வேறு உலகத்திற்கு அழைத்துச் செல்கிறது.
இந்தப் படத்தின் அந்த வெளிவராத பாடலையும் பின்னணி இசையையும் யுவன் வெளியிட வேண்டும் என்பது எனது பணிவான வேண்டுகோள்!
படத்தின் எந்தக் காட்சியிலும் எந்தவொரு படத்தின் சாயலும் இல்லை. தியாகராஜன் குமாரராஜாவிடமிருந்து இன்னும் நிறைய படங்களை எதிர்பார்க்கிறேன்.
வெளியானபோதே இந்தப் படத்தைத் திரையரங்கில் பார்க்க வேண்டும் என்று நினைத்திருந்தேன். ஆனால், எங்கள் பகுதியில் படம் வெளியாகாததால் பார்க்க இயலவில்லை. இதன் அசல் குறுவட்டும் இன்று வரை வெளிவரவில்லை. ஒருவேளை, இந்தக் கட்டுரை வெளியாகும் நாளில் வந்திருக்கலாம். அப்படி வந்திருந்தால் மிகவும் மகிழ்ச்சியடைவேன்.
ஆரண்ய காண்டம் – கலப்படமற்ற படைப்பு! “