ஆயிரம் தீவுகள் (1)

கனடாவின் கிழக்கில், கனடாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையில் செயிண்ட் லாரன்ஸ் என்ற அழகிய நதி எல்லையாய் அமைந்திருக்கிறது. சுத்தமான குடிநீருடன் அகன்று நீண்ட இந்த நதியின் 50 மைல் தூரத்திற்கு 1865 தீவுகள் அமைந்து பேரழகினைச் சொரிகின்றன.

ஆரம்பத்தில் ஏகப்பட்டத் தீவுகளை ஒரே இடத்தில் கண்ட அதிசயத்தில் ஒரு பிரஞ்சுக்காரர் அவசரமாய் இட்ட பெயர்தான் இந்த ஆயிரம் தீவுகள். அவற்றைக் கண்டுவந்த அதே இரவு என் ஆனந்தத்தில் எழுதிய கவிதையே இது.

வரம் தரும் தேவதை
வாரி வாரி இறைத்த
வைரமணித் தொட்டில்களோ

வசந்தங்கள் தாலாட்ட
யௌவனம் ததும்ப
நனைந்து நனைந்து
மிதக்கும்
நந்தவனங்களோ

வனப்புகள் புடைசூழ
மாலை வெயில் மஞ்சள் பூசி
நீராடி நாணுகின்ற
தங்கத் தாமரைகளோ

நிச்சயப் படுத்திய
அழகுப் போட்டிக்கு
அணி வகுத்த கன்னியரோ

தீர்வுக்குத் திணறித்
தப்பியோடிய தலைவனைத்
தேடித்தான் நிற்கிறீரோ

அடடா…
பொழியும் அழகினில்
மூழ்கி மூழ்கியே
நானும்
சிலிர்ப்புக்குள்
சிக்கிக்கொண்டேன்

பறவைகள் மாநாட்டை
வேடந்தாங்கலில் கண்டேன்
பூக்களின் மாநாட்டை
ஊட்டியில் கண்டேன்
அருவிகளின் மாநாட்டைக்
குற்றாலத்தில் கண்டேன்

தீவுகளின் மாநாட்டை
முதன் முதலில்
இங்குதான் காண்கிறேன்

‘பச்சை மிளகாய் இளவரசி’ மின்னூலிலிருந்து
To buy this EBook, Please click here

About The Author