புகழ்பெற்ற கார்டூனிஸ்ட் மதன் ஒரு முறை, "எத்தனையோ விதமான கதைகள் இருக்க, அதில் இரண்டு சதவிகிதம் கூட நாம சினிமால எடுக்கலை" என்று சொன்ன கருத்தை கீதோபதேசத்தைப் போல எடுத்துக் கொண்டிருக்கிறார் செல்வராகவன். அதன் விளைவுதான் தமிழ்ப்படங்களில் இதுவரை பார்த்திராத மிக வித்தியாசமான திரைப்படம்.
முதலில் செல்வராகவனை மனதார பாராட்ட வேண்டும், ஒரு வித்தியாசமான கதையைச் சொல்ல நினைத்ததற்காக. இந்த ஒரு விஷயத்திற்காக மட்டும் கூட மனிதரை ஆகாயத்தில் தூக்கி வைத்துக் கொண்டாடலாம். மூவாயிரம் துணை நடிகர்களைக் கட்டி மேய்த்திருக்கின்றார் மனிதர். இன்னுமொரு சபாஷ்! கிட்டத்தட்ட மூன்று வருடங்களுக்கு நிறைய உழைத்திருக்கிறார் என்பது நன்றாகத் தெரிகிறது. சரித்திரத்தோடு விளையாடுகிறோம் என்று தெரிந்ததால் படத்தின் ஆரம்பத்திலேயே "கதை முழுதும் கற்பனையே! இதற்கும் தமிழர் சரித்திரத்திற்கும் சம்பந்தம் இல்லை" என்று அறிவிப்பு போட்டுத் தப்பிக்கிறார்.
பதிமூன்றாம் நூற்றாண்டில் கதை ஆரம்பிக்கின்றது. பாண்டியர்கள் சோழர்களை அழிக்க முயற்சிக்க, சோழர்கள் தங்கள் கடைசி இளவரசரை எங்கோ பத்திரமாக அனுப்பி வைக்கின்றார்கள். அவருடன் சில ஆயிரம் மக்களும் போகின்றார்கள். இவர்கள் அனைவரும் எங்கே போனார்கள், என்ன ஆனார்கள் என்பதுதான் கதையின் கரு.
அவ்விடத்தைத் தேடி நிறைய பேர் செல்கிறார்கள். யாரும் வெற்றி பெறவில்லை. ஒரு பாண்டிய தளபதி அவ்விளவரசரைத் தேடிச் செல்கிறாராம். அந்தப் பாதையைப் பற்றிய குறிப்புகளை ஒரு ஓலைச்சுவடியில் எழுதி வைக்கிறாராம். அவரும் மடிந்து போவதாக நாம் புரிந்து கொள்ளலாம். அந்த ஓலைச்சுவடி காலம் காலமாக கைமாறி நம் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்களிடம் வந்து சேர்கிறது.
தொல்பொருள் ஆராய்ச்சியாளர் பிரதாப் போத்தன் அவ்விளவரசர் வாழ்ந்த இடத்தைத் தேடிச் செல்கிறார். அவர் என்ன ஆனார் என்று யாருக்கும் தெரியாத நிலையில், அவரது மகள் ஆண்ட்ரியா, ரீமா சென் (இவரும் தொல்பொருள் நிபுணர்) மற்றும் சில காவலர்கள் அவ்விடத்தை நோக்கிப் பயணிக்கிறார்கள். அவர்களுக்கு உதவி செய்வதற்காக சில கூலிகளை சேர்த்துக் கொள்கிறார்கள். அக்கூலிப் படையின் தலைவர்தான் கார்த்தி.
ஆண்டிரியாவிடம் இருக்கும் அவ்வோலைச் சுவடிக் குறிப்புகளைக் கொண்டு தம் பயணத்தைத் தொடங்குகிறார்கள். அவ்விடத்தை யாரும் எளிதில் நெருங்கிவிடக் கூடாதென்பதற்காக, பாதையில் ஏழு அபாயங்களை சோழர்கள் வைத்திருக்கிறார்கள். கடல், மலை, வினோத காட்டுவாசிகள், சர்ப்பங்கள், பசி, தாகம், புதைகுழிகள். இவற்றையெல்லாம் தாண்டி எல்லோரும் அவ்விடத்தை எப்படிச் சென்றடைகின்றார்கள் என்பதே படத்தின் முதல் பாதி.
தமிழ் சினிமாவில் இது போன்ற ஒரு சாகஸப் பயணத்தை இவ்வளவு அழகாக யாரும் சொன்னதில்லை. "யதார்த்தமாக சினிமா எடுக்கவேண்டும்" என்பதை எல்லாம் தூக்கி குப்பையில் போட்டு விட்டு, செல்வராகவன் ஒரு திடுக்கிடும் பயணத்தை நம் கண்முன் காட்டுகிறார். நம் அன்றாட வாழ்க்கையில்தான் யதார்த்தம் இருக்கிறதே! வெள்ளித்திரையிலும் ஏன் இருக்க வேண்டும்? பொழுதுபோக்கிற்காக திரையரங்கம் செல்லும் நமக்கு ஒரு மாபெரும் விருந்தைத் தருகிறார் செல்வராகவன். சபாஷ்! இப்படம் அத்தனை அருமையான Fantasy!
செல்வராகவனுக்கு கைகொடுக்கும் விதத்தில் ஃபோடோகிராஃபர் ராம்ஜி அருமையாகக் கைகொடுத்திருக்கிறார். வியட்நாம் (என்று சொல்லப்படும்) தேசத்தின் மலைகள், காடுகள், பாலைவனங்கள் என்று அவரது கேமரா புகுந்து விளையாடுகிறது. அக்காட்சிகள் உண்மையில் கேரளாவிலும், ராஜஸ்தானிலும் எடுத்தவையே! நம்மூரையும் இத்தனை அழகாய்க் காட்டியிருக்கிறார் மனிதர்!
போகப் போக, படம் இயற்கை அழகிலிருந்து விலகி, செயற்கை அழகை நம் கண்முன் நிறுத்திகிறது. சந்தானம் அவர்களின் கலையமைப்பு ஒரு சில இடங்களில் பிரமிக்க வைத்தாலும், அநேக இடங்களில் இன்னும் கொஞ்சம் நன்றாகச் செய்திருக்கலாம் என்றே தோன்றுகிறது. இது கிராஃபிக்ஸ் காட்சிகளுக்கும் பொருந்தும்.
கலையமைப்பிலும் சரி, கிராஃபிக்ஸ் அமைப்பதிலும் சரி, மூன்று வகைகள் உண்டு. ஒன்று – கிராஃபிக்ஸ் என்றே தெரியாமல் அத்தனை இயற்கையாகக் காட்டுவது (ஜேம்ஸ் கேமரூனைப் போல), இரண்டு – நல்ல கிராஃபிக்ஸ் என்று சொல்ல வைப்பது, மற்றும் மூன்று – சிறுபிள்ளைத்தனமாக இருப்பது! ஆயிரத்தில் ஒருவன் படத்தில் அநேக காட்சிகள் இரண்டாம் விதம், சில மூன்றாம் விதம்.
இருந்தாலும், இம்முயற்சிகளை நாம் பாராட்ட வேண்டும். சிறு குழந்தை முதற்படி எடுத்து வைக்கும் பொழுது தவறி விழுவது சகஜம், அல்லவா! நாம் உதவி செய்து, தோள் கொடுத்து தூக்கி விட வேண்டாமா! இது போல் இன்னும் பல முயற்சிகள் செய்தபின், நம் தொழில்நுட்பமும் ஹாலிவுட் அளவிற்கு வளர்ந்துவிட்டது என்று அலட்டிக் கொள்ளலாம்.
படத்தின் முதல் பாதி கொஞ்சம் வேகமாகவே செல்கிறது. இடைவேளைக்கு முன் வரும் புதைகுழி காட்சியை அற்புதமாக காட்டியிருக்கிறார்கள். ஒரு சிறிய மணல் மேடு முழுவதும் புதைகுழிகள் இருக்க, மேட்டிற்கு நடுவே கற்களால் வடிவமைக்கப்பட்ட ஒரு "என்னவென்று-புரியாத-மண்டபம்" ஒன்று நிற்கிறது. சூரியோதயம் மற்றும் அஸ்தமனத்தின் போது, கதிர்கள் அதன் மீது விழுந்து, அதனுடைய நிழல் தரையில் – நடராசர் உருவத்தில் – விழுமாம். அந்த நிழல் மீது நடந்தால் புதைகுழிகள் பாதையில் வாராதாம். (மெக்கனாஸ் கோல்ட் திரைப்படம் பார்த்தவர்களுக்கு இதெல்லாம் காமெடி என்பது வேறு விஷயம்!)
தன் கற்பனையைக் குதிரையை எங்கெல்லாமோ பறக்க விட்ட செல்வராகவன், அந்த "என்னவென்று-புரியாத-மண்டம்-போன்ற-ஒன்றை" அவரே வடிவமைத்திருக்கலாம். பாவம், போயும் போயும் Computer Windows Wallpaper-ஐ உபயோகித்திருக்கிறார் மனிதர். சரி சரி, பிழைத்துப் போகட்டும்.
ஆண்ட்ரியா, ரீமா சென், கார்த்தி மூவரும் இலக்கை அடைந்து விட, சோழர்கள் வாழ்ந்த ஊரையும், அங்கு நிறைய தங்கம் இருப்பதையும் கண்டு மூவரும் ஆனந்தம் கொள்கிறார்கள். பாட்டுப் பாடுகிறார்கள். திடீரென்று மூவரும் பைத்தியம் பிடிப்பது போல சிரிக்கிறார்கள். கார்த்தி ஆண்ட்ரியாவைக் கொல்ல வருகிறார். ரீமா சென் கார்த்தியை சிரித்துக்கொண்டே துப்பாக்கியால் மார்பில் சுடுகிறார். அவரோ சாகவில்லை. மாறாக மூவரும் சித்தம் கலங்கியவர்கள் போல ஓடுகிறார்கள். இடைவேளை!!
முதல் பாதியில் ஒரு நீண்ட பயணம், நிறைய கிராஃபிக்ஸ், ரீமா சென் ஆடைக் குறைப்பு செய்து ஆடும் தேவையே இல்லாத பாடல், ஆங்காங்கு திணிக்கப்பட்ட கவர்ச்சி, சிலவற்றை நாசூக்காகச் சொல்லாமல் அப்பட்டமாகக் காட்டிய காட்சிகள் – இவற்றை எல்லாம் மன்னித்துவிட்டால், முதல் பாதி தேறிவிடும்! சரி, இரண்டாம் பாதியைப் பற்றிப் பேசுவோம்!
அவர்களின் வினோத காரியங்களுக்கு காரணம் என்ன என்று கேட்டால்… மன்னிக்கவும், படம் முழுவதிலும் அதற்கு விளக்கம் கிடையாது!! மூவருக்கும் பித்து பிடித்துவிட்டது என்று படத்தைத் தொடர்ந்து பார்த்தால்தான் உண்மை புலப்படுகின்றது. சித்தம் கலங்கியது அவர்களுக்கு மட்டுமில்லை, படத்தின் மொத்தத் திரைக்கதைக்கும்தான். திரைக்கதையில் அத்தனை தவறுகள்! லாஜிக்கோ, காட்சிகளில் சரியான தொடர்போ இல்லை. படத்தில் பல குழப்பங்களுக்கு சரியான விடையோ, விளக்கமோ கிடையாது.
செல்வராகவனோ இன்னும் பூ சுற்றுகிறார். பூ சுற்றுவது பரவாயில்லை. நூல் கோர்ப்பது போல காட்சிகள் அமைய வேண்டாமா?! மணல் கயிற்றைப் போல் காட்சிகள் எல்லாம் சிதறிக் கிடக்கின்றன. சோழர்கள் ஆயிரம் ஆண்டுகளாக அதே இடத்தில் தலைமுறை தலைமுறையாக வாழ்ந்து வருகிறார்களாம். இன்னும் சோழர்கள் ஆட்சியில் இருக்கிறார்கள், அவர்களிடமிருந்து ஒரு நாள் தூது வரும் என்ற நம்பிக்கையிலேயே வாழ்ந்துகொண்டிருக்கிறார்களாம். இவர்கள் மூவரைப் பார்த்ததும் அவர்களைக் கொல்ல ஆணையிடுகிறார் சோழ ராஜனான பார்த்திபன்.
சோழர்கள் பாண்டியர்களிடமிருந்து திருடிய சிலை ஒன்றை மீட்பதற்காகத்தான் பாண்டிய வம்சத்தைச் சேர்ந்த ரீமா சென் அங்கு வந்திருக்கிறாராம். தன் தலைமையில் இயங்கும் ஒரு போலீஸ் படையையும் அங்கு வரவழைத்து அவர்கள் எல்லோரையும் அழிக்க முயற்சிக்கிறார். இதற்கிடையில், திடீரென்று கார்த்திதான் சோழ தூதுவன் என்று சோழர்கள் நினைத்துக் கொள்கிறார்கள். அவரும் காரணமே இல்லாமல் அவர்கள் பக்கம் சாய்கிறார். அவ்வளவுதான், பார்ப்போர் மூளைக்குள் ஒன்றும் ஏறவில்லை! "ஏன்" என்பதை எல்லாம் மறந்துவிட்டு தொடர்ந்து படத்தைப் பார்க்க வேண்டியதுதான். பதில் கிடைக்குமா? ஹும் – பதில் ஏதும் வராது, மறந்துவிடுங்கள்.
போலீஸ் கும்பல் இவர்களை எல்லாம் கைது செய்து துவம்சம் செய்கிறது. அக்காட்சிகள் எல்லாம் கொடுமையிலும் கொடுமை. இந்திய போலீஸ் படையினர் சோழப் பெண்ணொருத்தியை அவமானப்படுத்தி, அதன் பின்னணியில் "அப்படிப்போடு போடு போடு" என்று அலறி – ஐயகோ, தாளமுடியவில்லை.
கடைசியில் சோழ மன்னர் மாய்ந்துவிட, அவருடன் சேர்ந்து அனைவரும் தண்ணீரில் மூழ்கி இறக்கிறார்கள். கார்த்தியும், ஒரு சிறு குழந்தையும் (அக்குழந்தைதான் சோழர் வாரிசு என்று புரிந்து கொள்ளுதல் உங்கள் சாமர்த்தியம்!) மட்டும் மிஞ்ச "இனி சோழன் பயணம் தொடரும்" என்று படம் (திடீரென்று) முடிவடைகிறது.
சோழர்கள் எத்தனை பண்புடையவர்கள் என்று சரித்திரத்தில் இருந்தாலும், அவர்களை நாகரீகமற்ற ஆதிவாசிகளைப் போலக் காட்டியது கொஞ்சம் கசக்கின்றது. அதனினும் கடைசி பதினைந்து நிமிடங்கள் இலங்கையில் தமிழர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதியை இங்கு வேறு கோணத்தில் காட்டுகிறோம் என்ற பெயரில், பாண்டியர் குலத்தையும், தமிழக போலீஸாரையும், தொல்பொருள் ஆராய்ச்சி நிறுவனத்தையும் பகிரங்கமாகக் கொச்சைப் படுத்தியிருக்கிறார்கள்.
ரீமா சென் செய்யும் அநேக காரியங்களுக்குக் காரணமே இல்லை. அவரைப் பேருக்கொரு வில்லியாக்கியிருக்கிறார்கள். சினிமா மேதைகள் சொல்வது என்னவென்றால் – Acting is not reacting; it is behaving. ரீமா சென் ரொம்பவும் அதிகமாகவே React செய்கிறார். இரண்டாவது பாதியில் ஆண்ட்ரியா காணாமலே போகிறார். கார்த்தி மட்டும் அழகான தமிழில் பேசுகிறார். மற்ற இருவரும் பேசுவது அசிங்கமான தமிழ். சோழர்கள் பேசுவது "வினோதமான தமிழ்". புரிகின்றது! இருந்தாலும் அக்காலத்தில் அவர்கள் அப்படிப் பேசியிருப்பார்களா என்பது சந்தேகத்திற்குரிய விஷயம்தான்.
ஒளிப்பதிவும், பின்னணி இசையும் ஆங்காங்கே ரசிக்கும்படி உள்ளன. தேவைப்படும் அளவிற்கு அழகாய் இசையமைத்திருக்கிறார் பிரகாஷ். ஆயிரத்தில் ஒருவன் – கண்டிப்பாகப் பார்க்க வேண்டிய படம். அதுவும், வழக்கமான ஃபார்முலாப் படங்களிலிருந்து நீங்கி புதிதாக ஏதாவது படம் பார்க்க வேண்டும் என்று நினைப்பவர்கள் கண்டிப்பாக இதைத் திரையரங்கில் பார்க்க வேண்டும்.
ஒரு வேளை, முதலில் படத்தின் நீளம் ஐந்து மணி நேரமாக இருந்திருக்க வேண்டும். அப்புறம் எடிட்டிங் செய்து அதை மூன்று மணி நேரமாக குறைக்க முயற்சித்ததில், சில சம்பவங்களை நீக்கியிருக்க வேண்டும். இல்லையென்றால் கதையில் இத்தனை ஓட்டைகள் இருக்க வாய்ப்பே இல்லை. கதாபாத்திர அமைப்பு மொத்தமாக மிஸ்ஸிங். நாயகன், நாயகி போன்றவர்களுக்கே கதாபாத்திரங்கள் சரியில்லை என்றால், அந்த மூவாயிரம் துணை நடிகர்களின் கதியை நீங்களே யோசித்துக் கொள்ளுங்கள்.
தொழில்நுட்பத்தில் கலக்க நினைத்துவிட்டு, கதை, திரைக்கதையமைப்பிலும், கதாபாத்திர அமைப்பிலும் மொத்தமாக கோட்டை விட்டுவிட்டார்கள் என்று நினைத்தால் வருத்தமாகவே இருக்கிறது.
செல்வராகவன் மிக மிக பிரம்மாண்டமான தொடக்கத்தைத் தந்து, அதைவிட பிரம்மாண்டமான ஏமாற்றத்தையும் தந்துவிட்டார்.
இப்படிப்பட்ட குப்பைத் திரைப்படத்திற்கு இவ்வளவு நீண்ட விமரிசனம் தேவையா? ஒரே ஒரு வார்த்தையில் குப்பை” என்று சொல்லியிருக்கலாமே! வேண்டுமானால் “கூளம்” என்றொரு வார்த்தையையும் பயன்படுத்தியிருக்கலாம்.”
ஒருவர் kooda ரசிக்கவில்லை இந்த படத்தை.
ரெஅல்ல்ய் கோட் fஇல்ம் இன் டமில் cஇனெம.
படம் ரொம்ப நல்லா இருக்கு.
வித்தியசமன படம்தான். ஆனால் படம் பார்த்துவிட்டு வெழியில் வரும்போது நமக்கு தலை சுற்றுகிறது.
சோழன் தோல்வி அடைந்தான் என்பதல் … ஒரு சோழ்னாக எனக்கு இப்படம் பிடிக்கவில்லை …
A different movie to watch.Selvaraghavan film is always different from others.Watch it in theatre.
ஆயிரமாவது ஆண்டு தஞ்சை பெருவுடையார்கோவிலை கொண்டாடி சோழர்பெருமையை பறைசாற்றும் இவ்வேளையில் சோழர்களைதண்டிப்பதாக சித்தரிக்கும் இப்படத்தை அனுமதித்ததே தவறு.. இனிவரும் காலங்களில் படத்தின் கதைக்கு ஒப்புதல பெற்றபின்பே படத்தை தயாரிக்கஅனுமதிக்க வேண்டு
a good movie for selva as a director but not a apt movie for karthi may be paiyaa will work for him
எதிர்பார்போடு போய் ஏமாந்து வந்தோம்
சோழர்கள் காலத்தில் மக்கள் அனைவரும் காட்டுமிராண்டித்தனமாகவா வாழ்ந்தார்கள்? எங்கே போனது நாகரீகமும் நமது கலாச்சாரமும்? அருவருப்பாய் இருக்கின்றன படத்தில் பல காட்சிகள்.ஏன் தான் இப்படியெல்லாம் படம் எடுக்கீறார்களோ…
இதையெல்லாம் ஒரு படம் என்று பார்கவேண்டியுள்ளது நமது தலைவிதி.
ஆயிரதில் ஒருவன் ஒரு ஆங்கில திரைப்படதிர்கு இனையான ஒரு டமில் திரைப்படம்.செல்வரகவன் ஒரு அர்புதமன படைப்பலி என்பதை மேன்டும் ஒரு முரை நிரூபித்து விட்டார்
இட்ச் நொட் பட்