கோடம்பாக்கத்தில் பலத்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் திரைப்படம் ‘ஆயிரத்தில் ஒருவன்’. இதற்கான காரணங்கள் பல. செல்வராகவன் கிட்டத்தட்ட மூன்று வருடங்களுக்குப் பிறகு தமிழில் ஒரு திரைப்படத்தை இயக்குகிறார். பருத்திவீரனின் அமோக வெற்றிக்குப் பிறகு கார்த்தியின் இரண்டாவது படம். இதெல்லாம் போக, தான் இதுவரையில் நடித்திராத வினோதமான ஒரு கதாபாத்திரத்தை ஏற்றிருப்பதாக பார்த்திபன் ஒரு பேட்டியில் சொல்லியிருக்கிறார். ரீமாசென்னும், ஆண்ட்ரியாவும் இப்படத்தின் கதாநாயகிகள்.
செல்வராகவனிடம் வழக்கமாக பணிபுரியும் கேமராமேன் அரவிந்த் கிருஷ்ணாவும், இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜாவும் இத்திரைப்படத்தில் இல்லை. பாதி இசையமைத்த நிலையில் யுவன் விலக, செல்வராகவன் ஜி.வி.பிரகாஷ் குமாரிடம் தஞ்சம் புகுந்தார். பிரகாஷின் இசையமைப்பில் அமைந்த பாடல்கள் சமீபத்தில் வெளியாயின. இசைத்தட்டில் பத்து பாடல்கள். ‘புதுப்பேட்டை’யில் அமைந்தது போலவே எல்லாவற்றிற்கும் விதவிதமான, வித்தியாசமான பெயர்கள்.
ஓ ஈசா (Composer’s Mix)
"கோவிந்தா கோவிந்தா, வெங்கடரமணா கோவிந்தா" என்ற பாடலை எத்தனை முறை கேட்டிருப்போம்! அதே மெட்டில் "ஓ ஈசா, என் ஈசா, சாம்பல் தின்னும் என் ஈசா" என்று கார்த்தியும் ஆண்ட்ரியாவும் பாடும் பாடல் இது. செல்வராகவனும், ஆண்ட்ரியாவுமே வரிகளை எழுதியிருக்கின்றனர். வேதாந்தத்திற்கும், பக்திக்கும் இடையே ஆங்கிலத்தில் ராப். நல்ல கற்பனை. தாளம் போட வைக்கும் பாடல். மேற்கத்திய பாணியில் நன்றாகவே இசையமைத்துள்ளார் பிரகாஷ்.
மாலை நேரம்
மென்மையான பியானோ, கிடாரிங் என்று மாலை நேரத்தின் மதி மயக்கத்தைத் தூண்டும் வகையில் ஆரம்பிக்கிறது இந்தப் பாடல். செல்வராகவனே மீண்டும் எழுதியிருக்கிறார். ஆங்காங்கே சித்தர் பாடல்களிலிருந்து சில வரிகளை சேர்த்துள்ளதாக இசைத்தட்டில் இருக்கிறது. ஆனால் ஒன்றும் கேட்டதாக நினைவில்லை. ஆண்ட்ரியாவும், ஆங்காங்கே பிரகாஷும் இப்பாடலைப் பாடியிருக்கின்றனர். அம்மணியின் உச்சரிப்புதான் தாளமுடியவில்லை. காலங்கல், பயணங்கல் தொடர்கிறதே … உங்கள் உச்சரிப்பு மட்டும் இப்படியே தொடர வேண்டாமே! பாடல் நல்லதொரு மெலடி.
உன் மேல ஆசதான்
மீண்டும் செல்வராகவனின் வரிகள். தனுஷ், அவர் மனைவி ஐஸ்வர்யா, ஆண்ட்ரியா மூவரும் சேர்ந்து பாடியிருக்கிறார்கள். பாடல் எப்படி இருக்கிறது? சமீபத்தில் வெளிவந்த ‘சர்வம்’ திரைப்படத்தில் யுவனின் இசையில் இளையராஜா பாடிய "அடடா வா அசத்தலாம்" பாடலின் நகல். அவ்வளவுதான். இப்படத்திற்கும் முதலில் இசையமைத்தது யுவன்தான் என்று நினைவிருக்கட்டும்.
The King Arrives
நீல் முகர்ஜியும், மெட்ராஸ் அகஸ்டின் காயருடன் இணைந்து தந்திருக்கும் ஒரு சின்ன ‘பிட’ ம்யூஸிக். எலெக்ட்ரிக் கிடார், ட்ரம்ஸ் என்று ஏதோ வினோதமாகவே இருக்கிறது. இசைக்குண்டான காட்சியைப் பார்த்தால்தான் வேறேதும் சொல்ல முடியும். என்ன.. இது போன்ற பாடல்களைக் கேட்கும் பொழுது, "இது என்ன மாதிரியான திரைப்படம்!" என்ற வியப்பு ஏற்படுகிறது.
தாய் தின்ற மண்ணே – The Cholan Ecstasy
இன்னும் ஒரு வினோதமான பாடல் – நித்யஸ்ரீயின் சுந்தரத் தெலுங்கில் ஆரம்பிக்கிறது. பிறகு, விஜய் ஏசுதாஸ் கவிநயங்கொண்ட தமிழில் பாடுகிறார். பாடல் முழுவதும் தமிழும் தெலுங்கும் மாறி மாறி வருகின்றன. வைரமுத்து தமிழ் வரிகளையும், வெடூரி சுந்தரமாமூர்த்தி தெலுங்கு வரிகளையும் எழுதியிருக்கின்றனர். உணர்ச்சிகளை வருடும் அற்புதமான பாடல்.
பெம்மானே
பாம்பே ஜெயஸ்ரீயின் குரலில் வைரமுத்துவின் வரிகளை அனுபவித்துக் கேட்டால், மனங்கலங்குவது நிச்சயம். மக்கள் சேர்ந்து "ஆண்ட இனம் மாண்டழிய அருள்வாயே" என்று ஈசனை வேண்டும் பாடல். தாங்கள் படும் அவதிகளை எல்லாம் சொல்கிறார்கள். இன்னும் இத்தனை அழகாய் வரிகள் எழுதுவதற்கு நம்மூரிலும் கவிஞர்கள் இருக்கிறார்கள் என்பது மகிழ்ச்சிக்குரிய செய்தி. கீழ் ஸ்தாயிலும், மேல் ஸ்தாயிலும் பாடகரைப் பாடச் சொல்லிவிட்டு, இரண்டையும் அருமையாக கலந்திருக்கிறார் பிரகாஷ். கடைசி வரி "பொன்னார் மேனியனே புலித்தோல் உடுத்தவனே இன்னோர் தோல் கருதி நீ எம்தோல் உரிப்பதுவோ" என்று ஆரம்பித்து இன்னும் கலங்க வைக்கின்றது பி.பி.ஸ்ரீனிவாஸின் குரல்.
Celebration of Life
இன்னும் ஒரு சின்ன ‘பிட்’ ம்யூஸிக். மிக மென்மையாக ஆரம்பித்து, அழகாய் சூடு பிடித்து, காதுகளில் தேனாய் இனிக்கின்றது. வயலின், புல்லாங்குழல் என்று வாத்தியங்களை எல்லாம் நன்றாக இணைத்திருக்கின்றார் பிரகாஷ். இந்தப் பாடலையும் வெள்ளித்திரையில் பார்த்தால்தான் அனுபவிக்க முடியும் என்று தோன்றுகிறது.
தாய் தின்ற மண்ணே (Classical Version)
ஏழரை நிமிடத்திற்கு ஒரு பாடல்."தாய் தின்ற மனமே, இது பிள்ளையின் கதறல், ஒரு பேரரசன் புலம்பல்" என்று உணர்ச்சி ததும்பும் பாடல். பல்லவிக்கும் சரணத்திற்கும் இடையே வரும் கடம், மிருதங்கம் கலந்த ஜதிஸ்வரம் ரசிக்க வைக்கிறது. அங்கு வரும் புல்லாங்குழல் பிரகாஷின் மாமாவின் பழைய குழல் சாகசங்களை நினைவூட்டுகின்றது. விஜய் ஏசுதாஸ் வைரமுத்துவின் அபாரமான வரிகளை அனுபவித்துப் பாடியிருக்கின்றார். படத்திற்கும் சோழகாலத்திற்கும் என்ன சம்பந்தம் என்று தெரியாவிட்டால் தலையே வெடித்துவிடும் போல இருக்கின்றது.
இந்தப் பாதை
அப்பாடா! சோழ காலத்திலிருந்து நம் ஊர் பாணிக்கு வந்தாகிவிட்டது. இப்பாடலை பிரகாஷே பாடியிருக்கிறார். வரிசையாக மனதைத் தொடும் பாடல்களைக் கேட்ட பிறகு வரும் ஒரு "லைட் ஸாங்". அந்தப் பாடல்கள் ஏற்படுத்திய ஒரு வியூகத்தில் மாட்டிக் கொண்டதால், இந்தப் பாடல் அவ்வளவாக மனதில் பதியவில்லை.
ஓ ஈசா (Club Mix)
பாடல் என்னமோ "கோவிந்தா கோவிந்தா" என்றே ஆரம்பிக்கின்றது, அதே பழைய மெட்டில்தான். பாடலமைப்பில் பிக் நிக் பங்கு கொண்டுள்ளார் என்று இசைத்தட்டு சொல்கின்றது. இன்னும் நிறைய ராப். நல்ல வேளையாக காதுகளுக்கு இரைச்சலாக இல்லை.
அவ்வளவுதான். பாடல்கள் முடிந்துவிட்டன, பத்து பாடல்கள் மட்டுமே! ஒரே ஒரு வரியில் சொல்லி விடலாம் – நல்ல நல்ல பாடல்கள், மிக மிக வித்தியாசமான ஒரு இசைத்தட்டு! பிரகாஷ் குமாருக்கு பாராட்டுக்கள். வழக்கமான மெட்டுகளுக்கு மட்டுமே இசையமைத்துக் கொண்டிருந்தவர், ஒரு புதுவிதமான முயற்சியில் தன்னுடைய திறமைகளை வெளிப்படுத்தியிருக்கிறார். பாடல்களை காட்சியமைப்புடன் காண்பதற்கு இன்னும் நன்றாக இருக்கும் என்று நம்புவோம்!
“
உத்தம புத்திரன் திரைப்படம் முதலில் பி.யு.சின்னப்பா நடித்து வெளிவந்தது.அதன்பிறகு பல ஆண்டுகள் கழித்து அதே கதையை அதே தலைப்பில் சிவாஜி நடித்த படம் வெளிவந்தது. ஸ்ரீவள்ளியும் அப்படித்தான். ஆனால் இப்போது பிரபலமான படங்களின் தலைப்பை மட்டும் வைத்துவிடுகிறார்கள்.ஒருவித எதிர்பார்ப்பை ஏற்படுத்திவிடுகிறார்கள்.
நிலாசாரல் மிகவும் நன்றாக இருக்கிறது. தொடருங்கள் உங்கள் பயணத்தை …
Indha paadhy – is the best song inthe Movie.
Next Selvaraagvan film is music by A.R.Rahman compose inthe Best Songs inthe History.
அருமை அருமை………