இப்படித்தான் ஆரம்பித்தது அது. தாங்க முடியாத பல் வலி. வேறு எதிலும் கவனம் செலுத்த முடியாத பல் வலி. மனத்தை அதிலேயே ஒருமுகப்படுத்த வைக்கும் பல் வலி! இத்தகைய பல் வலியை “பல்வலி யோகம்” என்பார் எனக்குத் தெரிந்த ஒரு ஆன்மிகப் பெரியவர். ஸ்ரீராமகிருஷ்ண பரமஹம்சர், தண்ணீருக்குள் மூழ்கியவன் வெளியே வரத் தத்தளிப்பது போல் இறைவனை அடையத் துடிக்க வேண்டும் என்பார். அது போலத்தான், எப்படியாவது பல் வலியிலிருந்து வெளிவர வேண்டும் என்ற துடிப்பு.
அப்பம் போல வீங்கிய கன்னத்தைக் கையால் தாங்கிப் பிடித்துக் கொண்டு, டாக்டர் பிரபு வீட்டை அடைந்தேன். ஒரு நொடியில் பிடுங்கித் தள்ளி விட்டார். மறுநாள் காலை, பல் தேய்க்கச் சென்றதும்தான், அந்த நிதர்சன சத்தியத்தை நன் நேருக்கு நேர் சந்திக்க நேர்ந்தது. தேய்ப்பதற்கு வலப் பக்கம், இடப்பக்கம், மேல், கீழ் பற்கள் ஒன்றுமே இல்லை!! எல்லாம் எங்கே போயின? எண்ணிப் பார்த்தேன். மாசத்துக்கு இரண்டாக பிரபு டாக்டர் பிடுங்கித் தள்ளியிருக்கிறார். ”சொத்தையைப்” பிடுங்கியதோடு, என் சொத்தையும் அல்லவா பிடுங்கியிருக்கிறார்?!! மிக முக்கிய ஸ்தானப் பல் போனதால், இப்போது வெறுமை விபரீதமாகத் தெரிகிறது. மீண்டும் எண்ணிப் பார்த்தேன். இப்போது எண்ணியது எஞ்சியிருந்த பற்களை. எட்டே எட்டு. மேலே முன்வரிசை நான்கு. கீழே முன் வரிசை நான்கு…
மீண்டும் கண்ணாடியில் என் முகத்தை பரிசோதனைக்கு உட்படுத்தியபோதுதான் அந்த சுட்டெரிக்கும் உண்மை என்னைத் தாக்கியது. கன்னத்தில் இரண்டு பக்கமும், மந்தவெளி ராமகிருஷ்ணா மடம் சாலை போல் பயங்கரப் பள்ளங்கள். அட, ஈஸ்வரா, இப்போது ஒரு பல்தான் போச்சு, அப்படியானால், இந்தக் குழி விழுந்த முகத்துடன்தானா நான் இத்தனை நாள் வளைய வந்து கொண்டிருந்திருக்கிறேன்!
மனதுக்குள் ஒரு மவுனப் புயலுடன், நான் நடைபயின்று கொண்டிருந்தபோது பழைய நண்பன் சங்கரனைப் பார்க்க நேர்ந்தது. விதிதான் அவனை அங்கு அனுப்பியிருக்க வேண்டும். என்னை சோகத்தில் ஆழ்த்த வேண்டும் என்று சூழ்ச்சி செய்த விதி.
ஒரு கணம் உற்றுப் பார்த்து விட்டு அலறினான், ”அட, வெங்கட்ரமணியாடா நீ? எப்படி இருந்தவன் எப்படி ஆயிட்டே? கன்னம் எல்லாம் குழி விழுந்து.. அந்த நாளில் ஜெமினி கணேசன் மாதிரி இருப்பியேடா?!”
இரவு படுக்கையில் புரண்டேன். டேல் கார்னகி பாணியில், ‘பிரச்சினை என்ன? ரொம்ப மோசமாகக் கூடிய நிலைமை என்ன? அதை ஏற்றுக் கொண்டு விடுவது, அதிலிருந்து நிலைமையை முன்னேற்ற என்னென்ன செய்யலாம்?’ இப்படி எல்லாம் யோசித்துக் கொண்டிருந்த போதே தூக்கம் கண்ணைச் சுழற்றியது. அதுவும் நல்லதுக்குத்தான். பிரச்சினையை இரவில் மனத்தில் போட்டு அலசிக்கொண்டு தூங்கி விட்டால், ஆழ்மனம் தூங்கும்போது ஒரு தீர்வு கண்டு விடுமாம். அதிகாலையில் தெளிவான விடை கிடைக்குமாம்.
அதிகாலையில் எழுந்தபோது என் உட்குரல் (காந்திஜிக்கு கேட்குமாமே, அது போல!) தெளிவாகக் கூறியது, ”தாடி வளர்த்துக் கொள்.” என்றாலும் எனக்குள் ஒரு சந்தேகம். உறுதி செய்து கொள்ள விரும்பினேன். நான் கேட்டது தெய்வத்தின் குரலா? சாத்தானின் குரலா? அருகிலிருந்த புத்தகத்தில் ஏதாவது ஒரு பக்கத்தைப் புரட்டுவது. அதில் ’தாடி’ என்று வந்திருந்தால் தாடி வளர்த்துக் கொள்ளச் சொன்னது தெய்வ கட்டளையே. புத்தகத்தில் நான் பார்த்தது பின்வரும் நகைச்சுவை.
“ எஜமானி : ஏண்டி, குழந்தையைக் கடிக்கிறே?”
வேலைக்காரி: நீங்கள்தானேம்மா, இந்தாடி.. குழந்தையை வாங்கிக்கடின்னு சொன்னீங்க?”
இந்தப் பகுதியில் வந்த ”இந்தாடி”யில் வந்த “தாடி”யை கணக்கில் எடுத்துக்கொள்ளலாமா, கூடாதா? தர்மசங்கடம்தான். என்றாலும் சந்தேகத்தின் லாபத்தை தாடிக்கே கொடுத்து, சாதக முடிவெடுத்தேன்!
அடுத்த பிரச்சினை எப்படிப்பட்ட தாடி வளர்த்துக் கொள்வது? தாடிக்காரர்கள் பலரும் என் மனக் கண் முன் அணி வகுத்தார்கள். முதலில் தோன்றியவர் விஜய ராஜேந்தர். இப்போது தாடி வைக்கும் என் உறுதி தளர்ந்தது. எனினும் மனதை திடப்படுத்திக் கொண்டு அணி வகுப்பை தொடர்ந்து பர்வையிட்டேன். மன்மோஹன் சிங், சிபு சோரன், பிச்சமூர்த்தி, மணிவண்ணன், திருப்பூர் கிருஷ்ணன், ஐந்தாம் தூண் விஜய் ஆனந்த், இயற்கை விஞ்ஞானி நம்மாழ்வார் என்று பலரும் என் முன் வந்தார்கள். (இதில் ஒரு சுவாரஸ்யமான துணை விளையாட்டாக, தாடியில்லாமல் அவர்கள் எப்படி இருப்பார்கள் என்று கற்பனை செய்து பார்த்துக் கொண்டேன்).
தெளிவு ஏற்படாமல் என் புகைப்படங்களை எடுத்து தாடி மீசை பல பல விதமாக வரைந்து பார்த்தேன். (“எதுக்குன்னா சின்னக் குழந்தையாட்டம் போட்டோவுக்கெல்லாம் மீசை தாடி போட்டுண்டுருக்கேள்?” – மனைவி) குழப்பமே மேலிட மணிவண்ணன் ஞாபகம் வந்தது. நடிகர் தாடி மணிவண்ணன் இல்லை, இவன் வேறு. என் டிரைவர் மணிவண்ணன். சகலமும் தெரிந்தவன். வோட் ஹவுஸின் பெர்ட்ராம் ஊஸ்டருக்கு ஜீவ்ஸ் எப்படியோ எனக்கு அவன் அப்படி..
“மணிவண்ணன், தாடி வளர்த்துக் கொள்ளலாம் என்று இருக்கிறேன்.”
“யெஸ், பாஸ்” (அவன் இதழ்க் கடையில் ஒரு ஏளன நகை மிளிர்ந்ததா என்று இப்போது எனக்கு நினைவில்லை!!)
“எந்த மாதிரி தாடி வைத்துக் கொள்வது?”
சிரித்தான் மணி வண்ணன். ”எந்த மாதிரி தாடி வைத்துக் கொள்வது என்பது நம் கையில் இல்லை. ‘மூடிக்கேற்ற ஜாடி’ என்பது போல முகத்துக்கேற்ற தாடி. (ஜாடிக்கேற்ற மூடி என்றுதானே சொல்வார்கள்? போகிறது. மூனாவுக்கு மூனா. அது பிரச்சினை இல்லை இப்போது.) உங்கள் முக அமைப்புக்கேற்ற தாடி தானாக வளரும் பாஸ்!”
முடி மழிக்காமல், முழு தாடியும் முளைக்காமல் இருந்த நாட்களே என் வாழ்க்கையில் சோதனை மிகுந்த நாட்கள்.
பேரக் குழந்தை கார்த்திக் அழுதான். அவனை சமாதானப்படுத்த வாசலுக்கு எடுத்துக் கொண்டு போகிறேன். என் மனைவி குறுக்கே வந்து மறித்து சொல்கிறாள், ”வேண்டாம், வேண்டாம், பிள்ளை பிடிக்கிறவன் என்று யாராவது நாலு சாத்து சாத்தப் போகிறார்கள்”
அதுவாவது போகட்டும். என் குறும்புக்காரப் பேரன் விவேக், அவனது நினைவுக் குறிப்புகளுக்காக வைத்திருந்த வெள்ளை போர்டில் இப்படி எழுதி வைக்கிறான்:
“தாடி வைத்தவர் எல்லாம் தாகூர் இல்லை.”
“தடி ஊன்றும் வயதில் தாடி ஒரு கேடா?”
எந்த ஒரு நல்ல விஷயத்துக்குமே முதலில் ஏளனம்தான் வரும். அடுத்து கடுமையான எதிர்ப்பு வரும்; அதற்குப் பிறகுதான் அங்கீகாரமும், பாராட்டும் கிடைக்கும். இது எனக்குத் தெரியாதா என்ன?
எதிர்பாராத விதமாக, தாடியை நான் திருத்திக் கொள்ளச் சென்ற நியூ லுக் சலூனின் பணியாளர் எனக்கு அன்பரும் ஆதரவாளரும் ஆனார். எனது தாடி சிவாஜி கணேசன் தாடி போல் இருக்கிறது என்று சான்றிதழ் வழங்கினார். அவர் தாடியின் சில பகுதிகளில் மட்டும் கறுப்பு சாயம் பூசிக்கொண்ட ரகசியத்தையும், அதே போல இந்திரா காந்தி முன் தலையில், ஒரு சில வெள்ளை முடிகளை மட்டும் விட்டு விட்டு கறுப்பு சாயம் பூசிக்கொண்ட விதரணையையும் எடுத்துரைத்தார். “உங்களுக்கும் முன் தாடியில் கொஞ்சம் கொஞ்சம் கறுப்பு சாயம் பூசி விடுகிறேன் சார், அம்சமாக இருக்கும்” என்றார். எனக்கு அவ்வளவுக்கு துணிச்சல் இல்லாததால், கம்ப்யூட்டர் பாஷையில், ”Remind me later” என்றேன்.
அன்று மாலைதான் என் வாழ்க்கையில் தீர்ப்பு நாள். ஒரு குடும்ப நிகழ்ச்சியில், நண்பர்கள், உறவினர்கள், பல பேரும் சந்திக்கப் போகிறோம். அத்தனை பேரும் என் தாடியைப் பற்றி என்ன பின்னூட்டம் கொடுக்கப் போகிறார்கள்? பாராட்டும் அங்கீகாரமுமா? பழிப்புரையா? இரண்டுக்கும் நான் தயார். என் முடிவு மட்டும் மாற்ற முடியாதது.
முதலில் சந்தித்தது ஜம்பு. “என்ன ரமணி, ஒரே ஊரில் இருக்கிறோம் என்று பெயர். பார்க்கக் கூட முடிவதில்லை” என்றான். ஏதேதோ பேசினான். தாடியைப் பற்றி ஒரு வார்த்தை? ஊஹூம். அடுத்து பாலு, பத்து, கிட்டு, பழைய நண்பர்கள், சேவாலயா அன்பர்கள், இப்படிப் பல பேர். அரசியல் சமுதாயம், இலக்கியம், சினிமா, சங்கீதம், குடும்பப் பிரச்சினை என்று இப்படிப் பலதும் அலசினார்களே தவிர, தாடி என்று ஒரு வஸ்து என் முகத்தில் ஒட்டிக் கொண்டதை யாரும் கண்டு கொண்டதாகவே தெரியவில்லை.
இப்போதுதான் ஓர் ஆன்மிக உண்மை எனக்கு புலனாகியது. இந்தப் பிரபஞ்சத்தில் நான் தூசியிலும் தூசி. என்னைச் சுற்றியே இந்தப் பிரபஞ்சமும் மற்றவர்களும் இயங்குவதாகவும் என் தாடி மற்றவர்கள் மனத்தைச் செலுத்தி சிந்திக்க வேண்டிய மகா பெரிய விஷயமாகவும் நான் கற்பித்துக் கொண்டதெல்லாம் மாயையின் செயல். அதற்கும் மேல் ஓர் ஆன்மிக ஞானம் உதயம் ஆகியது. “ஆன்மாவுக்கு தாடி கிடையாது” என்பதே அது.
இவ்வாறு சிந்தித்தபடியே, மண்டபத்தை விட்டு வெளியே வந்தேன். பின்னாலிருந்து ‘களுக்’கென்று ஒரு சப்தம் கேட்டது. திரும்பிப் பார்த்தேன். பலரும் கையால் வாயைப் பொத்திக் கொண்டிருப்பது தெரிந்தது!
AnmAvukku dhAdi kiDaiyAdhu”—Are you sure? I read somewhere that the AtmA picks up all the attributes of the body in which it resides and takes them to the next body which it will eventually occupy. In that case the AtmA has to carry the beard with it. No relief in sight!”